ஆதார் அடையாளத்திற்காக.. ஒரு இந்தியனின் சோகப்பயணம்

தார் கார்டு அவசியம் என மத்திய அரசு வலியுறுத்திக்கொண்டே இருக்கிறது. ஆனால் அதில் ஏகப்பட்ட குழறுபடிகள்.

அதில் ஒரு அதிர்ச்சிகர குழறுபடியை, பத்திரிகையாளர் சரவணன் சவடமுத்து தனது மகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவு:

“நான் தனியாள். கடந்த  பல வருடங்களில், பல வீடுகள் (வாடகைக்கு) மாறிவிட்டேன்.

ஆகவே, என்னுடைய ஆதார் கார்டில் ஒரு முகவரி.. டிரைவிங் லைசென்ஸில் ஒரு முகவரி.. வாக்காளர் அட்டையில் ஒரு முகவரி, ரேஷன் கார்டில் ஒரு முகவரி என்று மூலைக்கொன்றாக வைத்திருக்கிறேன். எல்லாத்தையும் மாற்றி என்னாகப் போகுது என்று அலட்சியமாக இருந்துவிட்டேன்.

இப்போது அவசியம் காரணமாக மாற்ற வேண்டிய அவசரம்..

முதலில் வங்கி பாஸ்புக்கில் மாற்றிவிடலாம் என்று கேட்டேன். பாஸ்புக்கை பார்த்துவிட்டு “இத்தனை பேப்பர்கள் எம்ப்ட்டியா இருக்கு ஸார். அதெல்லாம் நிரம்பியவுடன் மாற்றிக் கொள்ளலாமே..?” என்றார்கள். “இப்போ எனக்கு ஆதாரத்துக்கு வேணும் ஸார்…” என்று அரை மணி நேரம் கத்திக் கூப்பாடு போட்டவுடன் “சரி ஆதாரம் கொடுங்க…” என்றார்கள். கிரெடிட் கார்டு வீட்டுக்கு வந்த லெட்டரை காண்பித்தேன்.

“இதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆதார் வேண்டும்..” என்றார்கள். “இது உங்க வங்கியின் கார்டுதான். இதை நீங்களே ஏத்துக்கலைன்னா அடு்த்தவன் எப்படி ஏத்துக்குவான்.. அப்புறம் நான் கார்டு யூஸ் பண்றதை மட்டும் அனுமதிக்கிறீங்க..?” என்று கேள்வி எழுப்பியவுடன் ‘அங்கே..’ ‘இங்கே..’ என்று பேசி பாஸ்புக்கில் முகவரியை மாற்றிக் கொடுத்தார்கள்.

இதிலும் ஒரு சிக்கல் ஒரு வங்கியில் வாங்கி வைத்திருக்கும் பாஸ்புக்கில் இருக்கும் முகவரி ஆதாரம் இன்னொரு வங்கியில் ஏற்கப்படாதாம்.. அங்கே ஆதார்தான் முக்கியம் என்கிறார்கள்.

இப்போது வீட்டு ஆதாரத்திற்காக வங்கியின் பாஸ்புக்கும், கிரெடிட் கார்டு பில்லையும், வங்கிலியிருந்து வீட்டுக்கு வந்த கடிதங்களை மட்டுமே ஆதாரமாக வைத்துள்ளேன்.

அடுத்து ஆதாரில் மாற்றுவோம் என்று அரசு இ-சேவை மையத்திற்குச் சென்றேன். மாதத்திற்கு ஒரு நாளில் மட்டும்தான் முகவரி மாற்றத்திற்கான விண்ணப்பத்தினை தருவார்களாம். அன்றைக்கும் ஒருவருக்கு ஒரு அப்ளிகேஷன்தானாம்.. அன்றைக்கே எழுதி அன்றைக்கே சமர்ப்பிக்க வேண்டுமாம்.. அராஜகம் பண்றாங்கப்பா அரசுத் துறையில்..!

இது வேலைக்கு ஆகாது என்று நினைத்து நானே இணையத்தில் முயன்றேன். மூன்று முறை முயற்சி செய்தும் கடைசியில் நான் சமர்ப்பித்த வீட்டு ஆதாரங்களை ஏற்க மறுத்து ரிஜெக்ட்டாகிவிட்டது.

ஒரு நண்பரின் ஆலோசனைப்படி தனியார் இ-சேவை மையத்திற்குச் சென்று மாற்றம் செய்தேன். அதிர்ஷ்டவசமாக ஓகே ஆனது. 5 நாட்களில் மாற்றிவிடுவார்கள் என்றார்கள். நேற்றைக்கு சென்று கேட்டேன். மாற்றியாகிவிட்டது என்று காண்பித்தார்கள்.

பார்த்தவுடன் ‘பக்’ என்றாகிவிட்டது. வீட்டு எண், தெருப் பெயர், சாலையின் பெயர், பின்கோடு நம்பர் எல்லாம் சரி.. ஆனால் ஊரான ‘சென்னை’ என்னுமிடத்தில் ‘திருவள்ளூர்’ என்று பதிவாகியிருந்தது.

“என்ன ஸார் இது..?” என்று கேட்டால் “பின்கோடு 600087’ என்றால் சண்டிகரில் இருக்கும் ஆதார் மையத்தில் ‘திருவள்ளூர்’ என்றுதான் பதிவு செய்திருக்கிறார்கள். நாம் அதை மாற்றவே முடியாது…” என்றார் கடைக்காரர்.

ஆனால் வாக்காளர் அடையாள அட்டையில் ‘சென்னை’ என்றே பதிவு செய்திருக்கிறார்கள். இது எப்படி.. ஒருவேளை ஆதார் அட்டையை கூகிள் கம்பெனி பதிவு செய்து தருகிறது போலும்..!

என்னாங்கடா உங்க அரசாட்சி.. ஒரு அமைப்பு ஊரையே மாத்துது.. இன்னொரு அமைப்பு இதுதான் ஊர் என்கிறது.. இந்த லட்சணத்துல இனிமேல் எல்லாமே டிஜிட்டலாம்..!

அடுத்து வாக்காளர் அட்டையில் முகவரி மாற்றத்திற்கு எழுதிக் கொடுத்தேன். இரண்டு முறை ரிஜெக்ட் செய்துவிட்டார்கள். “ஆதார் முகவரி இருந்தால்தான் மாற்றுவோம்…” என்று ஒரு முறை சொன்னார்கள்.

இரண்டாவது முறை “ஒரே சட்டமன்றத் தொகுதி.. ஒரே நாடாளுமன்றத் தொகுிதியில்தானே வீடு மாறியிருக்கிறீர்கள். அப்படியே இருந்துக்குங்களேன்…” என்றார்கள்.

மூன்றாவது முறையாக கடைசி முயற்சியாக அலைந்து திரிந்து என் பெயரை நீக்க வேண்டிய வாக்குச் சாவடிக்கு சென்று நீக்க வேண்டி ஒரு விண்ணப்பத்தினையும், சேர்க்க வேண்டிய வாக்குச் சாவடிக்குச் சென்று சேர்க்க வேண்டி ஒரு விண்ணப்பத்தினையும் சமர்ப்பித்துவிட்டு வந்தேன். இப்போதுதான் மனசு வைத்து மாற்றியிருக்கிறார்கள்.

சரி.. இதை பிரிண்ட் அவுட் எடுப்போம் என்று அரசு இ-சேவை மையத்திற்கு சென்றேன். தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் மாதம் வரையிலும் யாருக்கும் புதிய கார்டுகளை பிரிண்ட் செய்து கொடு்க்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்களாம்.

“ஸோ.. ஏப்ரலுக்கு மேல வாங்க…” என்றார்கள். நல்லா வேலை பார்க்குறாங்கப்பா தேர்தல் ஆணையத்துல..! காரணம் கேட்டால் “தெரியாது” என்றார்கள்.

மதுரவாயல் தாசில்தார் அலுவலகத்திற்கு போன் செய்து கேட்டேன். “எங்களுக்கும் தெரியாது ஸார். எலெக்சன் கமிஷன் ஆபீஸ்ல இருந்து இன்ஸ்ட்ரக்சன் கொடுத்திருக்காங்க.. அதுதான் ஸார்..” என்றார்கள். அது வரும்போது வரட்டும்..!

டிரைவிங் லைசென்ஸ் முடிந்து போய்விட்டதால் அதை மாற்றச் சென்றேன். “இ்ப்போது அனைத்தும் ஆன்லைனில்தான்…” என்றார்கள். ரொம்ப வருடமாக அந்தப் பக்கமே போகாததால் அந்த விஷயமே தெரியவில்லை. இங்கேயும் முகவரி இடிக்கிறது. ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையில் இருக்கும் முகவரிதான் இங்கேயும் முகவரியாகும் என்றார்கள்.

வேறு வழியில்லாமல் பழைய முகவரியிலேயே புதுப்பித்துவிட்டு மீண்டும் ஒரு மாதம் கழித்து ஆதாரில் வந்தவுடன் புதிய முகவரியை மாற்றிக் கொள்ளலாம் என்று நினைத்து பழைய முகவரியை மையமாக வைத்து ரினீவலுக்கு எழுதிக் கொடுத்தேன். பழைய முகவரி சான்றுக்கு ரேஷன் கார்டில் இருக்கும் அதே முகவரியை காட்டச் சொன்னார்கள். அதையே காட்டியிருக்கிறேன்.

அடுத்ததாக ரேஷன் கார்டையே மாத்த முயன்றேன். “எதுவுமே வாங்காத வெள்ளை கார்டுதான் வைச்சிருக்கீங்க. இதைப் போய் எதுக்கு மாத்தணும்ன்றீங்க..?” என்றார் கடைக்காரர். “வீட்டு முகவரி சான்றுக்கு ஸார்..” என்றேன். “ஓகே.. ஆனால் இதை இணையத்துலதான் செய்யணும்…” என்றார்.

இணையத்தில் முயற்சி செய்தேன்.
பதிலே வரவில்லை. போன் செய்து விசாரித்தேன். ஆதாரில் ‘சென்னை’ என்னுமிடத்தில் ‘திருவள்ளூர்’ என்று இருப்பதைச் சுட்டிக் காட்டி நிறுத்தி வைத்திருப்பதாகச் சொன்னார்கள். “அதுக்கு நான் என்னங்க செய்ய முடியும்.. ஆதார் அமைப்புல கேளுங்க..” என்றேன். “அது எங்க வேலையில்லீங்க. நீங்கதான் கேக்கணும்..” என்றார்கள். இப்போ நான் அடுத்து இந்தக் கொடுமையைப் பத்தி அமெரிக்க அரசிடம்தான் கேக்கணும் போலிருக்கு..!

இந்த லட்சணத்துல அதே ஆதார் அட்டைல “இது அடையாள முகவரிக்குத்தான். குடியிருமைக்கான சான்றில்லை” என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஆள் அடையாள முகவரிக்கு வங்கி பாஸ்புக்.. கிரெடிட் கார்டு பில்.. எல்.ஐ.சி. பாலிஸி.. மருத்துவ பாலிஸி அடையாள அட்டைகளே போதுமே.. இந்த ஆதார் வெங்காயம் எதுக்கு..?

இருப்பிடச் சான்றுக்கு வாக்காளர் அடையாள அட்டையே போதும்.. அப்புறம் என்ன மயித்துக்கு இந்த ஆதார்..?

ஆதாருக்காக கோடிகள்ல காசு செலவழிச்சு எவனோ ஒருத்தன் நம்ம காசை சுத்தமா வழிச்சு எடு்த்திட்டுப் போயிட்டான். இப்போது அடுத்ததா CAA, NAC, NPR-ன்னு ஆரம்பிச்சிருக்கானுங்க..!

மக்களை நிம்மதியாவே இருக்கவிட மாட்டோம்ன்னு கங்கணம் கட்டிக்கிட்டு திரியறானுங்க நம்ம அரசியல்வியாதிங்க..!

எந்த எம்.எல்.ஏ. எம்.பி., அமைச்சர்கள் வீட்டுக்காரனுங்களும் இப்படி அட்ரஸ் மாத்துறதுக்காக அல்லல்பட மாட்டானுங்க. அவனுங்களுக்கு வாங்கிக் கொடு்க்கவும், வீடு தேடி வந்து மாத்திக் கொடுக்கவும் பத்து பேரு இருப்பானுங்க. இருக்குற எல்லா பிரச்சினையும் நம்மள மாதிரி ஏமாளிகளுக்குத்தான்..!

இந்த நாட்டுல பொறந்ததுக்கு பொறக்காமலேயே இருந்திருக்கலாம்டா சாமி..!”

  • இவ்வாறு தனது முகநூல் பக்கத்தில் சரவணன் சவடமுத்து பதிவிட்டுள்ளார்.