சிவானந்தா குருகுலத்தின் தலைவர் ராஜாராம் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் ஆதரவற்றோர்  இல்லமான சிவானந்தா குருகுலம் இயங்கி வருகிறது. அந்த குருகுலத்தின் நிர்வாக மேலாளர்  இராஜாராம் அவர்கள் , உடல் நலக்குறைவால், கடந்த ஒரு மாதமாக  சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.

இவரது மரணத்திற்கு பல அரசியல் தலைவர்கள் இறங்கல் தெரிவித்துள்ளனர். 

தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின்;

தி.மு. க. தலைவர்  மு.க ஸ்டாலின் அவரது இரங்கல் செய்தியில் தொண்டு என்ற சொல்லுக்கு அடையாளமாவும்  அதற்காகவே தனது வாழ்க்கையை அர்பணித்து  கொண்டவர் குருகுலத்தின் நிறுவனர் பத்மஸ்ரீ விருது  பெற்ற ராஜாராம் அவர்களின் இறப்பு பெரும் வேதனையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது என்றார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்;

குருகுலத்தின் தலைவர் ராஜாராமின் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.சிவானந்தா குருகுலத்தை பல ஆண்டுகளாக நிர்வகித்து வந்த ராஜாராம், ஆதரவு இல்லாத பலருக்கும் அடைக்கலம் அளித்துள்ளார். ஒருவருக்கு தங்க இருப்பிடம் தருவதுதான் சிறந்த சேவை, உணவளிப்பதுதான் சிறந்த சேவை, கல்வி அளிப்பதுதான் சிறந்த சேவை என்று மக்களுக்கிடையே விவாதங்கள் நடப்பதுண்டு. ஆனால், இவை அனைத்தையுமே வழங்கிய சேவகர் ராஜாராம் ஆவார் அவரது இறப்பு வேதனை அளிக்கிறது.

 ம.தி.மு.க  தலைவர் வைகோ ;

 
பெற்றோர் இல்லாத பிள்ளைகள், பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் என ஆதரவற்றோர்களின் சரணாலயமாகவே சிவானந்த குருகுலம் திகழ்ந்தது. மனித மனங்களில் வறண்டு போன அன்பு, கருணையை ஆதரவற்றோர் மீது மழையாய் பொழியச் செய்து, அவர்களுக்கு ஆதரவுக் கரம் கொடுத்தவர் ராஜாராம்.

அவரது மனிதநேய சேவையைப் பாராட்டி, இந்திய அரசின் சார்பில், குடியரசு முன்னாள் தலைவர் கே.ஆர்.நாராயணன் பத்மஸ்ரீ விருது வழங்கினார். சிறந்த சமூகச் செயல்பாட்டாளராக விளங்கிய ராஜாராமுக்கு சமூகம் பல்வேறு விருதுகள் வழங்கிப் பாராட்டியது.

என் மீதும், மதிமுகவின் மீதும் மாறாத அன்பு கொண்டவர் ராஜாராம். சிவானந்த குருகுலத்திற்குப் பலமுறை சென்று அவரிடமும், அங்கே இருக்ககூடிய ஆதரவற்றோர்களிடமும் பேசி ஆறுதல் கூறியுள்ளேன். அது ஒரு உன்னதமான இளைப்பாறும் இடம்.

அவரை நேசிக்கும் அனைவருக்கும், குருகுலத்தினருக்கும், ஆதரவற்றோர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்” என வைகோ தெரிவித்தார்.