சிவராத்திரி அன்று  ஈஷா யோகா மையத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் மஹாஅன்னதானம் !

கோவை; ஆண்டு தோறும் ஈஷா யோகா மையத்தில் மஹாசிவராத்திரி விழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழா தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் பெருமளவில் கூடும் மிகப்பிரம்மாண்டமான விழாவாக உருவெடுத்துள்ளது.  இவ்வாறு பெருமளவில் கூடும் மக்கள் அனைவருக்கும் அன்றிரவு முழுவதும் மஹா அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.   

“தானத்தில் சிறந்தது அன்னதானம்” என்று பலர் சொல்ல நாம் கேட்டிருப்போம். அன்னதானம் நம் கலாச்சாரத்தில் தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு அற்புதத் தன்மையாகும். இது நம் கலாச்சாரத்தில் ஆன்மீக வளர்ச்சிக்கான பாதையாகப் பார்க்கப்படுகிறது.  பண்டைய காலங்களில் ஆன்மிகம் நோக்கி நடையிடும் மக்களுக்காகவே நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அன்னச்சத்திரங்கள் இருந்தது, அங்கு எந்நேரமும்  பொது மக்களுக்கும், ஆன்மீக அன்பர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு  வந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் கோவில்களில் சக்திவாய்ந்த நிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட அன்னம்,  பிரசாதமாக வழங்கப்படுவதால் அந்த உணவு நம் உயிர்த்தன்மையில் அளப்பரிய மாற்றத்தை நிகழ்த்துகிறது. ஞானியர் பலரால் நடைமுறைப்படுத்தப்பட்ட அன்னதானத்தில் பங்கேற்பது, ஆன்மீக வளர்ச்சிக்கான அரிய வாய்ப்பாகும்.

ஈஷா யோக மையத்தில் கடந்த 26 ஆண்டுகளாக மஹாசிவராத்திரி விழா தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஆதியோகி சிலை முன்பு நடைபெறும் விழாவில் சத்குரு அவர்கள் வழங்கும் தியானம், நாட்டுபுற மற்றும் வெளிநாட்டு கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள், நாட்டு மாடுகள் கண்காட்சி போன்றவை இடம்பெறவிருக்கிறது. 

மஹாசிவராத்திரி விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் தன்னார்வ தொண்டர்கள் மூலம் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், விழா நாட்களில் கோவையில் இருந்து ஈஷா யோகா மையத்துக்கு சிறப்பு பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.