பாரம் – தலைபாரம்!: திரை விமர்சனம்
2018-ம் ஆண்டில் இதில் சிறந்த தமிழ் திரைப்படங்களுக்கான பிரிவில் பாரம் என்ற படத்துக்கு விருது கிடைத்துள்ளது. படத்தை பிரியா கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார்.
பிரியா கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்கியுள்ள இப்படத்தில் புதுமுகங்கள் நடித்துள்ளனர்.
”தலைக்கூத்தல்” என்ற பெயரில் முதியவர்களை, அவர்கள் பெற்ற பிள்ளைகளே கொல்லும் செயல் பற்றிய படம். இது தமிழகத்தின் சில கிராமங்களில் இன்னும் நடைமுறையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

படம் எப்படி இருக்கிறது?
அனைவரின் நடிப்பும் இயல்பு, சிறப்பு. பின்னணி இசையைவிட, இயல்பான ஒலிகளுக்கு முக்கியத்துவம் தந்ததும் பாராட்டத்தக்கது.
மற்றபடி..
திரைப்படமா, ஆவணப்படமா.. எப்படி எடுப்பது என்ற இகுவித எண்ணத்தில், தானும் குழப்பி, ரசிகர்களையும் குழப்பிவிட்டார் இயக்குனர் பிரியா.
குறைந்தபட்ச லாஜிக்கூட படத்தில் இல்லை.
விபத்தில் அடிபட்ட முதியவரை, அக்கம்பக்கத்தினர், யாரோ ஒரு வீட்டில் படுக்கவைக்கிறார்களாம். உடனடியாக ஆம்புலன்சுக்கு போன் செய்யத்தானே தோன்றும்! இந்தியாவிலேயே ஆம்புலன்ஸ் சேவையில் முதலிடம் இருப்பது தமிழ்நாட்டில்தானே!
அங்கேயே படத்தின் அடிப்படை ஆட்டம் கண்டுவிடுகிறது!
“ஹோம் மினிஸ்டர்..” என அறிமுகப்படுத்திக்கொண்டு ஒருவர் பேசுகிறார். தமிழ்நாட்டில் முதல்வரிடம்தான், உள்துறை இருக்கிறது. தனியாக “உள் துறை அமைச்சர்” இருந்ததெல்லாம் பழைய, பழைய, பழைய வரலாறு!
இன்னும் அப்டேட்டுக்கு வரவில்லை இயக்குனர்!
காவல்துறைக்கு தமிழில் தட்டச்சி, மெயிலில் புகார் அனுப்புகிறார் இளைஞர். அது காவல் அதிகாரி கையில், ஆங்கிலத்தில் இருக்கிறது! என்ன ஒரு மாயம்!
தவிர ஆரம்பத்தில் கதை போல போகும் படம், பிறகு ஆவணப்படம் போல் மாறுகிறது. மீண்டும் கதை போல வருகிறது.
இன்னொரு முக்கியமான விசயம்… ஏற்றாலும் ஏற்க முடியாவிட்டாலும்…இயங்க முடியாத முதியவர்களை கொலை செய்யும் வழக்கம் உலகம் முழுதும் இருக்கிறது. மலையில் இருந்து தள்ளிவிடுவது, காட்டிற்குள் இழுத்துச் சென்று விட்டுவிடுவது.. இப்படி.
இதில், வலி மிகக் குறைந்த முறை, தமிழகத்தில் நிலவிய, “தலைக்கூத்தல்”தான். அதாவது எண்ணெய் தேய்த்து குளிக்கவைத்து, இளநீர்கள் கொடுத்து ஜன்னி வரச் செய்து.. அதன் மூலமாக மரணமடையச் செய்தல்.
காந்தி கூட, “பிழைக்கவே வழியில்லாத நோய்வாய்ப்பட்ட கன்றுக்குட்டியை கொல்லலாம்: என்றார்.
அதாவது.. கருணைக் கொலை.

ஆனால், உலகெங்கிலும் இருந்த அல்லது இருக்கும், கொடூரமான “முதியோர் கொலைகளை” கண்டுகொள்ளாத, அரைவேக்காடு படைப்பாளிகள், தமிழகத்தில் இல்லாத அல்லது மிக அரிதாக எங்கோ இருக்கும் என சொல்லப்படுகிற தலைக்கூத்தல் முறையை தேவையின்றி உலகறியச் செய்கின்றனர்.
ஐந்து லட்சத்தில் படம் எடுத்து, வெளிநாடுகளில் விருதுகள் வாங்கி லட்ச லட்சமாய் சம்பாதிக்கின்றனர்.
இதைப் பெருமையாகச் சொல்லி நம்மிடமே கொண்டு வருகிறார்கள். இங்கேயும் மத்திய அரசு தேசிய விருது அளிக்கிறது.
படத்தைப் பார்த்த இயக்குனர் மிஷ்கின், “நான் எடுத்த சைக்கோ படம் மோசம் என்பதை, இப்படம் பார்த்து உணர்ந்தேன்,” என்றாராம்.
சைக்கோ படம், பாரத்தைவிட மோசமாக இருக்கலாம், அதற்காக பாரம் நல்ல, சிறந்த படம் என்று சொல்வதற்கில்லை.
மொத்ததில், ஒன்றரை மணி நேர தலை பாரம் இது!