மோகன் ஜி சொந்த ஜாமீனில் விடுவிப்பு! திருச்சி நீதிமன்றம் உத்தரவு!
பழனி கோயில் பஞ்சாமிர்தம் தொடர்பாக அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட, திரைப்பட இயக்குனர் மோகன் ஜியை திருச்சி நீதிமன்றம் சொந்த ஜாமீனில் விடுவித்து உள்ளது.
திருச்சி மாவட்டம் அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மேலாளராக பணிபுரிந்து வருபவர், கவியரசு. இவர், சமயபுரம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.
அதில் ‘ அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் ஆண்மை குறைவு ஏற்படுத்தும் மாத்திரைகளை பயன்படுத்தப்படுகின்றன’ என்று, திரைப்பட இயக்குநர் மோகன் ஜி ஒரு வீடியோ பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.
தற்சமயம் திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் அசைவ பொருட்களான மீன் எண்ணெய்யும், மாட்டு கொழுப்பும் கலந்து உள்ளதாக கூறப்படும் விவகாரம் தகிக்கிறது. அது அடங்குவதற்குள், தமிழக மக்களிடையே மதநல்லிணக்கத்தை கெடுக்கும் வகையிலும், கலவரத்தை தூண்டும் வகையிலும், பொய்யான செய்தி பரப்பியதாக, தமிழ் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், இன்று காலை, மோகன் ஜி கைது செய்யப்பட்டார்.
இன்று மாலை, திருச்சி 3-வது குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி பாலாஜி (பொறுப்பு) முன்னிலையில், ஆஜர்படுத்தப்பட்டார்.
விசாரித்த நீதிபதி, “குற்றமும், அதற்காக பதியப்பட்ட வழக்கும் சரியானது. இந்த வழக்கில் கைது செய்வதற்கான முகாந்திரம் இருக்கிறது. ஆனால், போலீஸார் முறையான கைது நடவடிக்கைகளை பின்பற்றவில்லை. கைது நடவடிக்கை சட்டவிரோதமானது. எனவே அவரை சொந்த ஜாமீனில் விடுவிப்பதாக” உத்தரவிட்டார்.