உயிர் பலிவாங்கும் படப்பிடிப்பு தளம் நடந்தது என்ன? EVP இதுவரை நடந்த விபத்துகள் விவரம்;
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் சார்பில் மிகப் பெரும் பொருட்செலவில் தயாரித்து வகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் சென்னை, ஹைதராபாத், போபால் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்தன.
நடிகள் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், டெல்லி கணேஷ், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் கமலுடன் இணைந்து ‘இந்தியன் 2’-வில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையில் இந்தப் படத்துக்கு ரத்னவேல் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
‘இந்தியன் 2’ படத்தில் நடைபெறும் ஒரு சண்டைக் காட்சிக்காக சென்னை பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.
படப்பிடிப்பின் போது ஒரு காட்சிக்காக பிரம்மாண்டமான செட் கிரேன் மூலம் அமைக்கும் பணியில் படக்குழுவினர் ஈடுபட்டிருந்தனர். அந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக கிரேன் அறுந்து விழுந்தது. இதில் ஒரு உதவி இயக்குநர் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 10க்கும் மேட்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இறந்தவர்கள் ஷங்கரின் உதவி இயக்குநராக பணிபுரிந்த கிருஷ்ணா (34), மற்றும் ஊழியர்கள் மது (29), சந்திரன் (60) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த இடத்தில் கமல்ஹாசன் இருந்ததாகவும் அடிப்பட்டவர்களை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவியதாகவும் கூறப்படுகிறது.
இறந்தவர்களின் உடலை போலீஸார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
EVP படப்பிடிப்பு தளத்தில் இதுவரை நடந்த விபத்துகள் விவரம்;
2012 ஆம் ஆண்டு சென்னையை அடுத்த பூந்தமல்லி, பழஞ்சூர், பாப்பான்சத்திரத்தில் ஈவிபி பொழுதுபோக்குப் பூங்கா தொடங்கப்பட்டது. இந்த பொழுதுபோக்கு பூங்காவிற்குள் அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார்களும் எழுந்தது. அதன் பின்னர் தொடங்கிய வேகத்திலேயே இந்த பூங்கா இழுத்து மூடப்பட்டது.
சில சட்ட போராட்டத்திற்கு பின் மீண்டும் பொழுது போக்கு பூங்கா செயல்படத்தொடங்கியது. அந்த இடத்தில் அடுத்தடுத்து விபத்துகள் நடக்கத் தொடங்கின. அங்கு ஏற்பட்ட விபத்தில் அபியாமெக் என்ற விமான பணிப்பெண் ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்து இறந்து போனார்.
பிக்பாஸ் விபத்து;
அதனைத் தொடர்ந்து இந்த பூங்கா மீண்டும் மூடப்பட்டது. தகுதியை இழந்த பொழுது போக்கு பூங்கா பின்னர் படப்பிடிப்பு தளமாக மாற்றம் செய்ய்யப்பட்டது. தனியார் தொலைக்காட்சி நடத்திய மிகப் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி இங்கு படப்பிடிப்பு நடத்தப்பட்டது அதில் ஏசி மெக்கானிக் இறந்ததாகவும் ஒரு தகவல் பரப்பப்பட்டது. அந்த சமயத்தில் நிகழ்சியில் பங்கேற்ற இரண்டு நடிகைகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக போலீசார் விசாரணை நடத்தியது.
ரஜினி படத்தின் விபத்து;
இதே போல் ரஜினிகாந்த் நடித்த காலா படப்பிடிப்பின்போது செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி இதே EVP பூங்காவில் இறந்து போனார். மற்றொருவர் அங்கு இருந்த கட்டிடத்தின் மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்து போனார்.
விஜய் பிகில் விபத்து;
கடந்த ஆண்டு விஜய் நடித்த பிகில் படத்திற்கு கால்பந்தாட்ட மைதானம் அமைக்கப் பட்ட போது ராட்சத கிரேன் மூலம் மின்விளக்கு பொருத்து வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கிரேன் அறுந்து விழுந்து செல்வராஜ் என்பவர் இறந்துபோனார்.
தற்போது ஈவிபி படப்படிப்பு தளத்துக்கு மிகவும் பரிட்சயமான கமல் நடிக்கும் இந்தியன்2 படப்பிடிப்பின்போது கிரேன் கவிழ்ந்த விபத்தில் உதவி இயக்குனர் உட்பட 3 பேர் இறந்துள்ளனர்.10 பேர் காயமடைந்துள்ளனர்.
தொடர்ந்து நடக்கும் விபத்துகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறது ஈவிபி படப்பிடிப்பு தளம்?