“ஊர் கூடி தண்ணீரை தேக்கலாம்!”: துரை வைகோ சுட்டிக்காட்டும் கிராமம்!

 
“தண்ணீர் இன்றி தவிக்கும் கிராமமக்கள் எப்படி ஒன்றிணைந்து உழைத்து, பிரச்சினையை தீர்க்கலாம்” என்பதை ஒரு கிராமத்தின் மூலம்,  ம.தி.மு.க. தலைமைக்கழக செயலாளர் துரை வைகோ தனது  அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளார்.
 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
“உத்தரகாண்ட் மாநிலம், அல்மோரா மாவட்டத்தில் உள்ளது தௌலாதேவி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு குக்கிராமம் தான் தஸ்பத்.
 
விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்ட இக்கிராமம் ஒரு வானம் பார்த்த பூமியாகும். பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை ஒரு நீர்ப்பாசன வாய்க்கால் கூட இங்கு இல்லை. இப்பிரச்சினைக்கு தீர்வுகாண பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட கிராம மக்கள் குழுவாக ஒன்றிணைந்து ஒரு புதிய முயற்சியைத் தொடங்கினார்கள். ஜல்கம் கிராமியத் திட்டத்தின் கீழ், மாவட்ட நிர்வாகமும் அவர்களின் முயற்சிக்கு ஆதரவு அளித்தது.
 
தொடக்கத்தில், கிராமவாசிகள் தண்ணீரை சேமிப்பதற்காக சிறிய அளவிலான படுகைகள் மற்றும் குளங்களை உருவாக்கினார்கள். அந்த முயற்சி, அவர்கள் எதிர்பார்த்ததை விட சிறந்தப் பலனை அளிக்கவே, பாசன வசதிக்காக, நடுத்தர அளவிலான குளங்களையும், பசுமை வளாகங்களையும் உருவாக்கும் அளவிற்கு முன்னேறினார்கள்.
கடந்த ஏழு வருடங்களில்,  11 தற்காலிக குளங்கள், 43 சிறிய குளங்கள், 2540 சிறிய குட்டைகள், 46 வீட்டு மேற்கூரை நீர் சேகரிப்பு தொட்டிகள், பெரிய அளவிலான 5 பாசன தொட்டிகள், குறைந்த அடர்த்தி கொண்ட 18 பாலி எத்திலீன் தொட்டிகள், 13 தாவரவியல் தடுப்பணைகள், 21 கல் தடுப்பணைகள் ஆகியவை கிராமவாசிகளின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டு உள்ளது.
கிராம மக்களின் முயற்சியை,  அங்கீகரிக்கும் வகையில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் தரப்படும், ‘மூன்றாவது தேசிய நீர் விருதுகள் 2020’ முதல் பரிசை கடந்த வெள்ளிக்கிழமை அன்று, தஸ்பத் கிராம ஊராட்சிக்கு ஒன்றிய அரசு வழங்கியது.
 
2016 ஆம் ஆண்டுவரை, பாசனத்திற்கு நீர் ஆதாரமே இல்லாமல் இருந்த ஊரில், தற்போது கிராம மக்களின் பங்கேற்பினாலும், ஒருங்கிணைந்த முயற்சியாலும் சரி செய்யவே முடியாது எனத் தோன்றிய பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டுள்ளது. ஏழு வருடங்களில் முன்பிருந்த நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. தற்போது, தஸ்பத் கிராமத்தினர் பாரம்பரிய பயிர்களுடன் சேர்ந்து அதிக மதிப்புள்ள பயிர்களையும் பயிரிடத் தொடங்கி உள்ளனர்.
 
அரசாங்கத்தையும், அதிகாரிகளையும் மட்டுமே நம்பியிருக்காமல், தங்களுக்கான பிரச்சனையை தாங்களே முன்வந்து ஒற்றுமையுடன் முயன்று சரி செய்து இருக்கிறார்கள் தஸ்பத் கிராமவாசிகள். 
 
அவர்களைப் போலவே, தமிழகத்திலும் உள்ள கிராம மக்கள் ஒன்றிணைந்து தங்களின் அடிப்படை பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முன்வர வேண்டும். அதற்கு, ஒற்றுமை மிகமிக அவசியம்.
தமிழகத்தில் பெரும்பாலான கிராமங்களில் குடிப்பதற்கும், விவசாயம் செய்வதற்கும் தண்ணீர் தட்டுப்பாடு அதிகளவில் உள்ளது.   கிராம மக்கள்  ஜாதி, மதம், கட்சியென பிளவுபட்டு நிற்காமல் ஒற்றுமையுடன் ஓரணியில் நின்றால் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணலாம்.
 
ஆகவே, ஊர் கூடினால் தேரும் இழுக்கலாம்; தண்ணீர் பிரச்சினையையும் தீர்க்கலாம்..!  தஸ்பத் கிராமவாசிகள் அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு..!” என்று துரை வைகோ தெரிவித்துள்ளார். 

Related Posts