பிரபாகரன் பெயரை நாய்க்கு வைத்தது ஒரு விசயம் அல்ல!: கொளத்தூர் மணி

துல்கர் சல்மான் நடித்துள்ள, “வரனே அவஸ்யமுன்ட்” என்ற படத்தில், நகைச்சுவை காட்சி ஒன்றில், நாய்க்கு, “பிரபாகரன்” என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது, சர்ச்சையாகி உள்ளது.

இதைத் தொடர்ந்து, “விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை அவமானப்படுத்திவிட்டனர்!” என சமூகவலைதளத்தில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  தற்போது துல்கர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஈழ மக்களுக்கு, அவர்களது விடுதலைப் போருக்கு, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு மிக உதவிகரமாக இருந்தவர்,  திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி.  இதற்காக பல வழக்குகளை சந்தித்தவர்,  பல முறை சிறை சென்றவர், தனது பொருளாதாரத்தை இழந்தவர். இன்றளவும், ஈழ மக்களுக்கான நீதி கிடைக்க தொடர்ந்து போராடி வருபவர்.

மலையாள திரைப்படத்தில், நாய்க்கு “பிரபாகரன்” என பெயர் வைக்கப்பட்டது குறித்து கொளத்தூர் மணி என்ன நினைக்கிறார்?

கொளத்தூர் மணி

அவரை தொடர்புகொண்டு பேசியபோது, அவர் தெரிவித்த கருத்து:

“அந்த படத்தை நான் பார்க்கவில்லை, அது குறித்த  சர்ச்சையையும் இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

அதே நேரம் சில விசயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

“விடுதலைப் புலி இயக்கம் தமிழகத்தில் பிரபலமான பிறகே, “பிரபாகரன்” என்ற பெயரை தமிழகம் அறியும். அதற்கு முன் அப்படியோர் பெயர் இருந்ததில்லை.. இருந்தாலும் மிக மிக குறைவானவர்களே வைத்திருப்பார்கள்.  இந்தப் பெயர், கேரளாவில்தான் பல காலமாக பிரபலம்.  அதாவது , மலையாளிகளே இப்பெயரை அதிகம் வைத்துக்கொள்வார்கள்.

“பிரபாகரன்” என்ற பெயரை மட்டும் வைத்து, அவரை, “மலையாளி” என பிரச்சாரம் செய்த, போட்டி இயக்கங்கள் இருந்தன.

தவிர, ஈழத்திலும் கேரளாவிலும் பல பழக்கங்கள் ஒன்று போல் இருக்கும். இரு இடங்களிலுமே,  தாங்கள் மிக மதிக்கும்  தலைவர்களின் பெயர்களை, நாய்க்கு சூட்டும் வழக்கம் உண்டு.

மேலும், அடையாளங்களை வைத்து கிளர்ந்தெழுவதோ, விவாதம் செய்வதோ எந்தவிதத்திலும் யாருக்கும் பயன் தராது. ஏதோ சிறிது நேரம் பொழுது போகும் அவ்வளவுதான்.

உண்மையில் ஈழ மக்களுக்கு செய்ய வேண்டிய கடமை, போரினால் பாதிகப்பட்டுள்ள அவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்ய முயல்வதுதான். அகதிகளாக அல்லலுறும் அவர்களுக்கு ஆதரவாக இருப்பதுதான்.

இன்னொரு விசயம்…  ஈழ போருக்குப் பிறகு, தங்களுக்கு தமிழ் தேசிய உணர்வு வந்துவிட்டதாக சொல்லிக்கொள்ளும் பலர், தமிழ்நாட்டை அடக்கி ஆளும், இந்திய (மத்திய) அரசின் மீது கோபம் கொள்வதில்லை: சாதியை வைத்து நம்மை பிரிக்கும் இந்து மதத்தை எதிர்ப்பதில்லை…

நம்மைப் போலவே அதிகாரங்கள் இன்றி தவிக்கும் சகோதர இனத்தை சாடுவதில் குறியாக இருக்கிறார்கள்.

திரைப்படத்தில் நாய்க்கு பெயர் வைத்த விவகாரத்தை விவாதிப்பது ஏற்கெனவே சொன்னது போல, நேரத்தைப் போக்க உதவும்.. தங்களை வெளிப்படுத்திக்கொள்ள உதவும்.

இரண்டும் பயனற்ற செயலே!”  என்று சொல்லி முடித்தார், திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி.