“தமிழ்த்தாய் வாழ்த்தின்“ வரலாறு இவ்ளோ சுவாரஸ்யமா?
சென்னையில் பிரசார் பாரதி அலுவலகத்தில் இந்தி மாத கொண்டாட்டத்தின் நிறைவு விழா, நேற்று (அக்டோபர் 18) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.
நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன், தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அதன்பின்னர், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
இதைப் பாடியவர்கள், ‘தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடும்’ என்ற வரியைத் தவிர்த்து விட்டுப் பாடினர். டிடி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்தக் காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தின.
“ஆளுநர் ரவி தொடர்ந்து, திராவிடத்துக்கு எதிரான கருத்துக்களைப் பேசி வருகிறார். இதனால் அவரது உத்தரவின் பேரிலேயே, இந்த வரிகளை பாடாமல் விட்டு இருக்கிறார்கள்!” என்று பலரும் சமூகவலைதளங்களில் கொதித்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், ஆளுநர் ரவியை கண்டித்தனர்.
இந்த நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்தின் வரலாற்றை தெரிந்துகொள்ள பலரும் ஆர்வமாக உள்ளனர்.
தமிழ்த்தாய் வாாழ்த்து முதன் முதலில் ஒலித்தது!
“தமிழ்த்தாய் வாழ்த்து ஒன்று நமக்கு வேண்டும்” என்று நூறு ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ் ஆர்வலர்களும், தமிழறிஞர்களும் வலியுறுத்தி வந்தனர்.இந்த நிலையில், தஞ்சை கரந்தை தமிழ்ச் சங்கம் 1811ம் ஆண்டு துவங்கப்பட்டது.
த.வே. இராதாகிருட்டின், இச் சங்கத்தை நிறுவினார். அவரது சகோதரரான த. வே. உமாமகேசுவரன் தலைவராகச் செயல்பட்டார். முதன்மை உறுப்பினர்களாக ந. மு. வேங்கடசாமியார் உள்ளிட்டோர் செயல்பட்டனர்.
கரந்தைத் தமிழ்ச் சங்கம் தொடங்கப் பெற்ற இரண்டாம் ஆண்டு முதல், மனோன்மணீயம் சுந்தரனார் இயற்றிய ‘நீராருங் கடலுடுத்த..’ என்னும் பாடல் சங்கத்தின் எல்லா நிகழ்ச்சிகளிலும் ஒலிக்கத் தொடங்கியது.
முதன் முதலில் இப்பாடலை பாடியவர், கூடலூர் வே.இராமசாமி. கரந்தை தமிழ்ச் சங்கம் துவங்குவதில் முன்னணியில் இருந்தவர்களில் ஒருவர்.
‘நீராருங் கடலுடுத்த..’ பாடலின் பின்னணி..
தமிழறிஞரும், கல்வெட்டு ஆராய்ச்சியாளரும், பேராசிரியருமான பெ. சுந்தரம் பிள்ளை 1891ம் ஆண்டு ‘மனோன்மணீயம்’ என்கிற நாடக நூலை வெளியிட்டார். தமிழில் தோன்றிய நாடக இலக்கியங்களில் முதன்மையாக இது போற்றப்படுகிறது. முழுவதும் செய்யுட்களால் ஆனது.
இந்நூலில், ‘தமிழ்த் தெய்வ வணக்கம்’ என்ற தலைப்பில் இடம் பெற்ற பாடலே, ‘நீராருங் கடலுடுத்த..” எனத் துவங்கும் பாடல்.
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தைத் தாய்ச் சங்கமாகக் கொண்டு தமிழ்நாட்டின் பல பகுதிகளில் உருவான தமிழ்ச் சங்கங்களின் விழாக்களிலும் தொடக்கப் பாடலாக இப்பாடல் பாடப்பட்டது.
எடுத்த அண்ணா! முடித்த கலைஞர்!
1967ம் ஆண்டு அறிஞர் அண்ணா தலைமையிலான தி.மு.க. அரசு ஆட்சி அமைத்ததுய தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு விழாக்கள், கல்லூரி, பள்ளி விழாக்கள் அனைத்திலும் பாடக்கூடிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்காகத் தமிழறிஞர்களைக் கூட்டி ஆலோசனை செய்தார் முதல்வர் அண்ணா.
தமிழ் அறிஞர்களால், மனோன்மணீயம் சுந்தரனார் இயற்றிய ‘நீராருங் கடலுடுத்த’ பாடலும், கரந்தைக் கவியரசு இயற்றிய ‘வானார்ந்த பொதியின்மிசை வளர்கின்ற மதியே’ என்ற பாடலும் பரிந்துரைக்கப்பட்டன. இரண்டில் ஒரு பாடலைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு அண்ணாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர், ‘நீராருங் கடலுடுத்த’ பாடலை தேர்ந்தெடுத்தார்.
அப்பாடல் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக அரசுபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை அண்ணா மேற்கொண்டார். ஆனால், அதற்குள் நோய்வாய்ப்பட்டிருந்த அண்ணா 03.02.1969-ல் மறைந்தார்.
அவரைத் தொடர்ந்து முதலமைச்சராக பொறுப்பேற்ற கலைஞர் கருணாநிதி, 1970-ம் ஆண்டு, மார்ச் 11அன்று நடந்த ஓர் அரசு விழாவில், ”இனி ‘நீராருங் கடலுடுத்த’ பாடலே தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக அமையும். தமிழ்நாட்டு அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் இந்த தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் ’’ என்று அறிவித்தார்.
அதே ஆண்டு, நவம்பர் 23 அன்று, இப்பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்து, அரசாணையும் வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் அரசு விழாக்களில், கல்வி நிலையங்களில், பொது நிறுவனங்களில், பொது நிகழ்ச்சிகளின்போது நிகழ்வு தொடங்குவதற்கு முன்னதாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்பட்டு வருகிறது.
விஜயேந்திரர் கொடுத்த அதிர்ச்சி
இந்த நிலையில், கடந்த 2018ம் ஆண்டு ஓர் அதிர்ச்சி சம்பவம் நடந்தது.
பாஜக தேசிய செயலாளலாக இருந்த எச்.ராஜாவின் தந்தை பேராசிரியர் ஹரிஹரன் எழுதிய நூல் வெளியீட்டு விழா ஒன்று 2018ம் ஆண்டு சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாட்டின் அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் காஞ்சி இளைய சங்கராச்சாரியாராக இருந்த விஜயேந்திரர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
‘விழாவில் தேசிய கீதம் பாடப்பட்டபோது எழுந்து நின்று மரியாதை செலுத்தினார் விஜயேந்திரர். ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது – அனைவரும் எழுந்த நின்று மரியாதை செலுத்திய நிலையில் – அமர்ந்தபடியே இருந்தார்.
இதுகுறித்த புகைப்படம் மற்றும் காணொளி சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. சமூகவலைதளங்களில் பலரும்,விஜயேந்திரருக்கு கண்டனம் தெரிவித்தனர். அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இதைதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
‘சங்கரமட செய்தி தொடர்பாளர், “தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்ததால் எழுந்து நிற்கவில்லை” என்று விளக்கம் கொடுத்தார்.
பலரும், “அதே நிகழ்ச்சியில் தேசிய கீதம் பாடப்பட்டபோது எழுந்து நின்றாரே விஜயேந்திரர்.. அப்போது தியானம் செய்யவில்லையா” என்று கேள்வி எழுப்பினர்.
தீர்ப்பு அளித்த அதிர்ச்சி!
இது தொடர்பான வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை , நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். அவர், “தமிழ்த்தாய் வாழ்த்து இறை வணக்க பாடல். தேசிய கீதம் அல்ல. தமிழ் தாய் வாழ்த்து பாடும் போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்று எந்தவித சட்டப்படியான, நிர்வாக ரீதியான உத்தரவு இல்லை. அதே நேரத்தில்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மிக உயர்ந்த மரியாதை வழங்கப்பட வேண்டும். உண்மையில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடும் போது கூட்டத்தினர் எழுந்து நிற்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அதே நேரத்தில் இவ்வாறு எழுந்து நின்று தான்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செலுத்த வேண்டுமா? என்ற கேள்வி எழுகிறது. பல்வேறு கலாச்சாரங்களை மதிக்கிற, கொண்டாடுகிற நாம் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இப்படித்தான் மரியாதை செலுத்த வேண்டும் என்பது சரியல்ல.
ஆன்மிகவாதிகள் பிராத்தனையின் போது தியான நிலையில் இருப்பார்கள். தமிழ்த்தாய் வாழ்த்து இறைவணக்கப் பாடல் என்பதால், அந்தப்பாடல் இசைக்கப்படும் போது ஆன்மிகவாதிகள் தியான நிலையில் இருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது தான். தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் தியான நிலையில் கண்களை மூடிய நிலையில் இருந்துள்ளார். தாய் மொழி தமிழுக்கு அவர் அவரது வழியில் உரிய மரியாதை செலுத்தியுள்ளார்” என்று தீர்ப்பளித்தார்.
இந்தத் தீர்ப்பு தமிழ் ஆர்வலர்களை அதிரச் செய்தது!
மு.க.ஸ்டாலின் கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!
இதற்கிடையே 2021ம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் அமைந்த மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு. நீதிமன்றத்தில் அதிரச் செய்த தீர்ப்பு வெளியான அடுத்த வாரத்திலேயேடிசம்பர் 17ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆனந்த அதிர்ச்சி அளித்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்தினை, தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவித்தார். இது தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டது.
‘தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் நடைபெறும் தனியார் அமைப்புகள் நடத்திடும் கலை, இலக்கிய மற்றும் பொது நிகழ்வுகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது ஊக்குவிக்கப்படும்.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இசை வட்டுக்களைக் கொண்டு இசைப்பதைத் தவிர்த்து, பயிற்சி பெற்றவர்கள், நிகழ்ச்சியில் பாடவேண்டும்” என்று உத்தரவிடப்பட்டது.
குறிப்பாக, “தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது, (மாற்றுத் திறனாளிகள் தவிர) அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும்” என்றும் உத்தரவிடப்பட்டது.
இந்த உத்ரவு பிறப்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடைவதற்குள், வேறு வகையில் – பாடலின் குறிப்பிட்ட வார்த்தைகளை – விட்டுவிட்டு பாடி, சர்ச்சை எழுந்து இருக்கிறது.
– டி.வி.சோமு