“ஷகிலா – காமம் – வனிதா – கதை!”: ‘மிஸஸ் & மிஸ்டர்’ விழாவில் வசந்தபாலன் அதிரடி பேச்சு!
நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா, ‘ Mrs & Mr ‘ என்ற படத்தைத் தயாரித்து உள்ளார். வனிதா இயக்கி, ஹீரோயினாக நடிக்கிறார். ராபர்ட் மாஸ்டர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார்.
இப்படத்தின் ஆடியோ & ட்ரெய்லர் லாஞ்ச் நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் டைரக்டர் வசந்தபாலன், தயாரிப்பாளர் தனஞ்செயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் வசந்தபாலன் பேசும்போது, ” வனிதா நடிக்க வந்த காலத்தில் இருந்தே நான் அவரைப் பார்த்து வருகிறேன். அஅவரது வாழ்க்கையில் நடக்கும் போராட்டங்கள் மிகவும் பெரியது. ஒரு பெண்ணாக அவர் பிரச்னைகளைச் சந்திக்கும் போது அவரது நெருக்கடிகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த சமூகம் ஒரு பெண்ணை விமர்சனப் பொருளாக விமர்சனம் செய்ததை நான் பார்த்திருக்கிறேன்.
ஒரு நிகழ்ச்சியில் தனது சொந்த வாழ்க்கை குறித்து பேசி அழுததை நான் பார்த்தேன். இந்த ஆணாதிக்க சமூகத்தில் பெண்ணை ஒடுக்கப்பட்ட சமூகமாக நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். பாலினமாக பெண்ணை நாம் ஒதுக்கி வைத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு பெண் என்ன செய்தாலும், என்ன உடை உடுத்தினாலும் அதில் கலாச்சாரத்தை வைக்கிறோம், பண்பாட்டை வைக்கிறோம், எல்லாவற்றையும் அவர்கள் மீது திணித்து விமர்சனம் செய்து கொண்டு இருக்கிறோம். ஒரு ஆண் 10 ஆயிரம் பெண்களை திருமணம் செய்யலாம், அதை பெருமையாக நினைக்கும் இந்த சமூகத்தில் ஒரு பெண் திருமணங்கள் செய்யும் போது விமர்சிக்கப்பட்டு, கிண்டலடிக்க படுகிறார். ஆனால் அவர் அதை எல்லாம் தைரியமாக எதிர்த்து நிற்பதைப் பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
ஒரு பெண்ணாக அவர் செய்யும் விஷயங்களுக்கு நான் ஒரு ஆணாக, ஒரு கலைஞனாக அவருக்கு சப்போர்ட் செய்ய வேண்டும் என்று நினைத்து இங்கு வந்துள்ளேன். இங்கு ஒரு பெண்ணுக்கான குரலை உயர்த்த ஒரு பெண் தேவைப்படுகிறார். கணவன், மனைவியை ஆதரிக்கும் சமூகமாக நாம் இல்லை. இங்கு ஒவ்வொருவருக்கும் சொல்வதற்கு ஒரு கதை உள்ளது. பெண் தனது கதையைச் சொல்ல முன் வரவேண்டும். குறிப்பாக கதாசிரியர்களாகவும் இயக்குநர்களாகவும் முன் வரவேண்டும். அவை புதியவையாக இருக்கும்.
ஆண்களிடம் மட்டும் சினிமா இல்லாமல், அனைவரிடத்திலும் சினிமா இருக்க வேண்டும். சினிமா ஜனநாயகப்படுத்த படவேண்டும். இந்த சமூகத்திற்குச் சொல்ல வனிதாவுக்கு ஒரு கதை உள்ளது. ஷகிலாவின் கதையைக் கேட்டோம் என்றால் இதுவரை தமிழில் யாரும் சொல்லாத கதை அவரிடத்தில் இருக்கும்.
ஷகிலா என்றாலே காமம் என்று பலரும் நினைக்கும்போது, ஷகிலாவிடம் மிகவும் அழுத்த, திருத்தமாகச் சொல்ல ஒரு கண்ணீர் கதை இருக்கும். அதுபோல வனிதாவுக்கு இருக்கும் கதைதான், மிஸ்ஸஸ் & மிஸ்டர். இந்த ஆணாதிக்க சமூகத்தில் மிஸ்ஸஸ் & மிஸ்டர் என்ற டைட்டில் மிகவும் சிறப்பாக உள்ளது. வெளியில் இருந்து பார்க்கும்போது தெரியும் வனிதா விஜயகுமார் வேறு, நான் அவரை பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறேன். தைரியமும் அவர் உண்டாக்கிக் கொள்ளும் திமிரும் தன்னை பாதுகாத்துக் கொள்ள அவர் உருவாக்கிய ஆயுதம் என்று நினைக்கிறேன். எல்லா பெண்களும் அப்படித்தான். எல்லா பெண்களும் திமிரு உடையவர்களாக, தைரியம் உடையவர்களாக இருக்க காரணம், இந்த ஆணாதிக்க சமூகத்தில் தங்களை காத்துக் கொள்ளத் தான். அப்படியான ஆயுதத்தை தான் வனிதா பயன்படுத்திக் கொண்டு உள்ளார். ஆனால் வனிதா உள்ளே மிகவும் பலவீனமான பெண்” என்று பேசினார்.

