“நாங்கெல்லாம் யாருடா?” மோகன் ஜி புதிய படம்: பா.ரஞ்சித்துக்கு பதிலடி?
பழைய வண்ணாரப்பேட்டை படம் மூலமாக தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர், இயக்குநர் மோகன் ஜி. அடுத்து ரிச்சர்ட் நாயகனாக நடித்த திரௌபதி படம் மூலமாக ஒட்டுமொத்த மக்களையும் திரும்பிப் பார்க்க வைத்தவர். இப்படம், சாதி ரீதியாக உள்ளது என்கிற விமர்சனத்தை எதிர்கொண்டாலும், பெரும் வெற்றி பெற்றது.
மோகன் ஜி நன்கு பிரபலமானார். அந்த படத்தில் இடம்பெற்ற வசனங்களும், காட்சிகளும் சிலரால் பாராட்டப்பட்டும், சிலரால் விமர்சிக்கப்பட்டது.
அடுத்து இவர் உருவாக்கிய ருத்ரதாண்டவம், படத்திலும் ரிச்சர்ட் நாயகனாக நடித்தார். இந்தத் திரைப்படமும் பலவித விமர்சனங்களை எதிர்கொண்டது. நான்காவது திரைப்படமாக, பகாசுரன் திரைப்படத்தை இயக்கினார். இதில் பிரபல இயக்குநர் செல்வராகவன், கதை நாயகனாக நடித்தார். செல்போன் ஆப்கள் மூலம் ஏற்படும் சமுதாய சீர்கேடுகளை மனதில் பதியும்படி உருவாக்கி இருந்தார் மோகன் ஜி.
இந்நிலையில், இன்று புதிய படம் குறித்த அறிவிப்பை மோகன் ஜி வெளியிட்டு இருக்கிறார். . தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், “ இன்று ஆடிப்பெருக்கு நன்னாளை முன்னிட்டு புதிய அலுவலக பூஜையுடன் அடுத்த திரைப்படத்திற்கான வேலைகள் துவங்கியது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் போல உங்கள் அன்பையும் ஆதரவையும் எதிர்நோக்கி” என்று பதிவிட்டுள்ளார்.
பட பூஜையின்போது, ரிச்சர்ட்டும் இருந்தார். ஆகவே புதிய படத்திலும் இவர்தான் நாயகன் என்கிற யூகம் கிளம்பி இருக்கிறது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் சமீபத்தில் வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது நினைவேந்தல் நிகழ்வில் இயக்குநர் பா.ரஞ்சித், “நாங்களும் ரவுடிதான்.. நாங்கள் இல்லாமல் சென்னை இயங்காது” என்றெல்லாம் பேசினார்.
இந்த நிலையில், மோiன்ஜி ட்விட்டர் பக்கத்தில், “ என்னங்கடா இது. சினிமால வர்ற டயலாக் எல்லாம் மேடையில பேசுறீங்க. எப்ப பார்த்தாலும் ‘ரவுடி நாங்க தான், பத்து கேஸ் வாங்க போறது நாங்க தான், மெட்ராஸ் நாங்க தான்’னு கூவுறீங்க.. நாங்க எல்லாம் யாரு தான்டா அப்ப சென்னையில.. அடுத்தவன் வரலாற சினிமால மாத்தி சொன்னது பத்தாதுன்னு இப்ப மேடையில வேற “ எனக் குறிப்பிட்டு இருந்தார்.
‘இந்த பதிலடி, பா.ரஞ்சித்துக்குத்தான்’ என்ற பேச்சு பரபரப்பாக எழுந்தது. இந்நிலையில், “மோகன்ஜியின் புதிய படம், பா.ரஞ்சித் பேச்சுக்கு பதிலடியாக அமையும்” என்று சமூகவலைதளத்தில் சிலர் பதிவிட, பரபரப்பு எழுந்துள்ளது.
ஆக, இப்போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.