ஈஷாவில் தியானலிங்கம் 21-வது ஆண்டு பிரதிஷ்டை..! கொரோனாவால் பொதுமக்களுக்கு தடை..!
கோவை;
ஈஷா யோகா மையத்தில் தினம் இன்று ஜூன் 24) அனுசரிக்கப்பட்டது. யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் தனது உயிர் சக்தியை பயன்படுத்தி கடந்த 1999-ம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி தியானலிங்கத்தை பிராண பிரதிஷ்டை செய்தார். தியானலிங்கம் பிற லிங்கங்களில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டது.
எந்த ஒரு மதத்தையும் சாராமல், ஒரு மனிதர் தனது உயிர்தன்மையை உணர்வதற்காக அறிவியல்பூர்வமாக உருவாக்கப்பட்டுள்ளது.
தியானலிங்கத்தின் 21-வது ஆண்டு பிரதிஷ்டை தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, தியானலிங்க கருவறையில் காலை 6 மணிக்கு ஈஷா பிரம்மச்சாரிகளின் ‘ஓம் நமசிவாய’ மந்திர உச்சாடனையுடன் பிரதிஷ்டை தினம் தொடங்கியது. தொடர்ந்து பெளத்தம்,
கிறிஸ்தவம், சூஃபி உள்ளிட்ட பல்வேறு சமயத்தினர் தங்கள் சமய உச்சாடனைகளை அர்ப்பணித்தனர். இந்த உச்சாடனைகளில் ஆசிரமத்தில் வசிப்பவர்கள் பங்கேற்றனர். மாலை 6.10 மணிக்கு ‘நாத ஆராதனை’ எனும் இசை அர்ப்பணிப்புடன் மந்திர உச்சாடனை நிறைவுப்பெறுகிறது.
ஆண்டுதோறும் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தியானலிங்க பிரதிஷ்டை தினத்தன்று ஈஷாவுக்கு வந்து இந்நிகழ்வுகளில் பங்கேற்பது வழக்கம். ஆனால், இந்தாண்டு, கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈஷா யோகா மையம் தற்காலிகமாக மூடப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் யாரும் பங்கேற்கவில்லை.
அதற்கு பதிலாக, மந்திர உச்சாடனைகள் ஆடியோ வடிவில் ஆன்லைன் மூலம் நேரலை ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.