கோ.ப.செ: வரிவிலக்கு அளிக்க வேண்டும்!

கோ.ப.செ: வரிவிலக்கு அளிக்க வேண்டும்!

வேறு எந்தவொரு கலைவடிவத்தையும் விட, திரைப்படத்துக்கு அதிக வீச்சு – வீரியம் உண்டு.

ஒலி, ஒளி, இசை, நடிப்பு என அனைத்தையும் ஒருங்கே அளித்து, நம் ஐம்புலண்களையும் ஈர்க்கும் ஒரே கலை திரைப்படம்தான்.

அதனால்தான் சமூக மாற்றத்துக்கு திரைப்படங்களும் முக்கிய காரணியாக இருந்தது. அதற்கு வேறு உதாரணம் தேட வேறு எங்கும் செல்ல வேண்டியதில்லை… நம் தமிழ்நாட்டில் திராவிட உணர்வு – சமூக நீதி – பகுத்தறிவு வேர் பிடிக்கக் காரணமாக இருந்தவற்றில் திரைப்படமும் ஒன்று!

அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி என உதாரணங்களை அடுக்கலாமே! கலைஞரின், ‘பராசக்தி’ வசனங்கள் இன்றும் சிந்திக்க வைக்கின்றனவே!

ஆனால், பின்னாட்களில் இதே திரைத்துறை, எப்படி மாறிவிட்டது என்பது நாம் அறிந்ததே!

“இந்தியாவில் இளைய தலைமுறை புகைப்பழக்கத்துக்கு ஆளாவதற்கான காரணங்களில் மிக முக்கியமானது… திரையில் நடிகர்கள் புகைப்பிடிக்கும் காட்சிகள்” என ஒரு முறை உலக சுகாதார நிறுவனம் அறிக்கை விடுத்தது.

மிகச் சமீபத்தில், “திரைப்படத்தைப் பார்த்து கொலை செய்ய திட்டமிட்டோம்” என வாக்குமூலம் கொடுத்தவர்கள் குறித்த செய்திகளைப் பார்க்கிறோம்.

வன்முறை, ஆபாசம், பெண்ணடிமைத்தனம்… என பல படங்கள் இந்த சமூகத்துக்குச் சொல்லும் செய்திகள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.

மக்களுக்கான படங்கள் – விதிவிலக்காக – சில வரவே செய்கின்றன.

அப்படியான ஓர் படம்தான், தேசிய விருது இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நாளை மறுநாள் ( செப்.20 – வெள்ளி) வெளியாகும், ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படம்.

படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்தவர்கள் நெகிழ்வாக தங்களது கருத்துக்களை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

அனைவரின் ஒட்டுமொத்தக் கருத்தும், “மனிதருக்கு உத்வேகத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுக்கும் திரைப்படம். உறவுகளின் மேன்மையைச் சொல்லும் படம். இதை சுவாரஸ்யமாகவும் சொல்லி இருக்கிறார் இயக்குநர்” என்பதே.

“தங்கையை உயிருக்கு உயிராகப் பார்த்து வளர்க்கும் ஒரு இளைஞனின் கதை. இரு சின்னஞ்சிறு உயிர்கள் வளர்ந்து எதிர்கொள்ளும் உணர்வுப் போராட்டம்தான் இந்தப் படைப்பு.

துணிவான முடிவு மூலம் இயல்பான வாழ்வின் நாடியை பின்னியிருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி. தமிழ்த் திரைக் களம் காணாத ஒரு கதையம்சத்தை இயக்குனர் எடுத்துக்கொண்டிருக்கிறார்” என்று, கவிஞரும், எழுத்தாளருமான நிஜந்தன் தெரிவித்து உள்ளார்.

இதே போல கவிஞர் வைரமுத்து, கவிஞர் ஜெயபாஸ்கரன் உள்ளிட்ட பலரும் தெரிவித்து உள்ளனர்.

சீமான், தமிழச்சி தங்கபாண்டியன், கவிஞர் நிஜந்தன், கவிஞர் ஜெயபாஸ்கரன்,

பேச்சாளர் லியோனி,  இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் உள்ளிட்ட ஆளுமைகளும் படத்தை நெகிழ்ந்து பாராட்டி இருக்கிறார்கள்.

இப்படத்தில், திருநங்கையரின் வலியை வேதனையை… அதே நேரம் அதை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையைச் சொல்கிறது, “தேவதை…” என்கிற பாடல்.

திரையுலகில் முதன் முதலாக, திருநங்கைகளின் உணர்வுகளைச் சொல்லும் முதல் பாடல் இதுதான்.

இப்பாடல் குறித்து கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., ” திருநம்பி- திருநங்கைகளின் இருப்பு வலி மிகுந்த துயரமல்ல, கொண்டாட்டத்திற்குரிய தன்னுணர்தல் எனும் உண்மையை உலகத்திற்கு உரக்கச் சொல்கின்றது இந்த அருமையான பாடல்.

தமிழ்சினிமா இதற்கு முன்பாக நம் சகோதர – சகோதரர்களைக் கேலிக்குரியவர்களாகச் சித்தரித்து வெளியிட்ட பாடல்களுக்கும், காட்சிகளுக்கும் இதன் மூலமாகப் பிராயச்சித்தம் தேடியிருக்கிறது” என்று குறிப்பிட்டு உள்ளார்.

தவிர இப்படத்தில் சராரி உயரம் இல்லாத மாற்றுத் திறனாளி இளைஞரை முன்னிலைப் படுத்தி கதாபாத்திரம் அமைத்து இருக்கிறார், இயக்குநர் சீனு ராமசாமி.  இதுவும் தன்னம்பிக்கை ஏற்படுத்தும் முயற்சியே.

படம் குறித்து இயக்குநர் சீனு ராமசாமி பேசும்போது, ” ழிப்பண்ணை செல்லத்துரை எனும் இந்த திரைப்படம் ஒரு முக்கியமான  விடயத்தை அழுத்தமாக பேசுகிறது. வாழ்க்கை மீது நம்பிக்கை இழந்தவர்கள். இந்த வாழ்க்கையில் எனக்கு எதுவும் கிடைக்கவில்லை என்று வருந்துபவர்கள்… வாழவே பிடிக்கவில்லை என விரக்தி அடைந்தவர்கள். இந்த வாழ்க்கையில் எனக்கென்று யாரும் இல்லை என்று தனிமையில் புலம்புபவர்கள்…‌ இவர்களுக்கு இந்த திரைப்படத்தில் ஒரு செய்தி இருக்கிறது.

இந்த பிரபஞ்சம் எந்த ஒரு தனி மனிதனையும் ஒருபோதும் கைவிடுவதில்லை. ஏதேனும் ஒரு ரூபத்தில் வருகை தந்து உங்களை பாதுகாக்கும். இதனை பார்வையாளர்கள் உணரும் வகையில் படைப்பு தயாராகி இருக்கிறது. இந்த திரைப்படத்தை பட மாளிகையில் வந்து ரசிக்கும் பார்வையாளர்களை ஒருபோதும் ஏமாற்றாது. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார்.

என்னவொரு சிறந்த சிந்தனை!

மனிதர்களை – குறிப்பாக – இளைய சமுதாயத்தினரை திசை திருப்பும் திரைப்படங்களே வந்து கொட்டிக்கொண்டு இருக்கும் நேரத்தில்.. மனதை சரியான வழியில் திருப்பும், ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்துக்கு, தமிழ்நாடு அரசு வரிவிலக்கு அளிக்க வேண்டும்.

வரிவிலக்குபெற தகுதியாக, தமிழில் தலைப்பு இருக்க வேண்டும் என்பதோடு, நான்கு நிபந்தனைகளை வைத்திருக்கிறது தமிழ்நாடு அரசு.

அவை…

1.  திரைப்பட தணிக்கை வாரியத்திடமிருந்து “யு” சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
2. திரைப்படத்தின் கதையின் கருவானது தமிழ் மொழி மற்றும் பண்பாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருத்தல் வேண்டும்.
3. திரைப்படத்தின் தேவையை கருதி பிறமொழிகளை பயன்படுத்தும் காட்சிகளைத் தவிர பெருமளவில் திரைப்படத்தின் வசனங்கள் தமிழ் மொழியில் இருத்தல் வேண்டும்.
4. திரைப்படத்தில் வன்முறை மற்றும் ஆபாசங்கள் அதிக அளவில் இடம் பெறுமேயானால் அத்திரைப்படம் வரிவிலக்கு பெறப்படுவதற்கான தகுதியை இழக்கும்.
– இந்த நிபந்தனைகள் அனைத்தையும் பூர்த்தி செய்திருக்கிறது, கோழிப்பண்ணை செல்லதுரை படம்.
இந்த படத்துக்கு வரிவிலக்கு என்பது பார்வையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். இது சமுதாயத்துக்கான கடமையாகவே நினைக்கிறேன்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இதைச் செய்வார் என்றே எதிர்பார்க்கிறேன்.

– டி.வி.சோமு

Related Posts