’’கொரோனா சிகிச்சை’’ எங்கள் வளாகத்தை பயன்படுத்துக் கொள்ளலாம் ஈஷா அறிவிப்பு!
கோவை;கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க கூடுதல் இடம் தேவைப்படும் சூழல் உருவானால், ஈஷா வளாகத்தை தமிழக அரசு பயன்படுத்தி கொள்ளலாம் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார். மேலும், தேவைப்பட்டால், அரசு மருத்துவமனைகளில் சேவையாற்றவும் ஈஷா தன்னார்வலர்கள் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் லட்சக்கணக்கான தினக் கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர்களுக்கு உதவும் விதமாக, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான தன்னார்வலர்களை கொண்டுள்ள ஈஷா அறக்கட்டளையும் இந்த சவாலான சூழலில் மக்களுக்கு சேவையாற்ற உறுதி ஏற்றுள்ளது.
இது தொடர்பாக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள் ஈஷா தன்னார்வலர்களுக்கு சில வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது:
கொரோனா வைரஸால் பாதிப்புக்கு உள்ளாகும் தினக் கூலி தொழிலாளர்கள் உள்ளிட்டோரை பாதுகாக்க உலகம் முழுவதும் உள்ள ஈஷா தன்னார்வலர்கள் தங்களால் இயன்றதை செய்ய வேண்டும். குறிப்பாக, இந்தியாவில் உள்ள ஈஷா தன்னார்வலர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பகுதியில் வேலையின்மையின் காரணமாக, பசி, பட்டினியால் வாடும் 2 பேருக்காவது உணவு அளித்து உதவ வேண்டும். நீங்கள் உலகில் எங்கிருந்தாலும், உணவின்றி பட்டினியால் ஒருவர் இறந்தார் என்ற நிலைவராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இந்த இக்கட்டான சூழலில் ஒவ்வொரு குடிமக்களும் தனிநபராக நம்மால் இயன்றதை செய்வது மட்டுமின்றி, உள்ளூர் அரசு நிர்வாகம் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பு அளிப்பது நமது கடமை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து, பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க கூடுதல் இடம் தேவைப்படும் சூழல் உருவானால், ஈஷா வளாகத்தை தமிழக அரசு பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உலகம் முழுவதும் நடைபெறுவதாக இருந்த ஈஷா யோகா மையத்தின் அனைத்து நிகழ்ச்சிகளும் கடந்த வாரம் முதல் தேதி குறிப்பிடப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மும்பை, பாரிஸ், லண்டன், ஜோகன்பர்க், டர்பன், அட்லாண்டா, சான் பிரான்சிஸ்கோ, ஜூலூலாண்ட் மற்றும் நாஷ்வில்லி ஆகிய இடங்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் செல்வதாக இருந்த சத்குருவின் சுற்றுப்பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. என இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.