‘செல்ல குட்டி’: திரைப்பட விமர்சனம்
முப்பதாண்டுகளுக்கு முன்பாக நடக்கும் கதை.
இரட்டை நாயகர்களான டிட்டோ, மகேஷ் மற்றும் நாயகி தீபிக்ஷா உள்ளிட்டோர் ஒரே வகுப்பில் +2 படிக்கிறார்கள்.
பெற்றோரை இழந்த மகேஷ் மீது தீபிக்ஷா இரக்கம் காட்ட, அதை காதல் என்று புரிந்துக்கொள்கிறார் மகேஷ். தனது காதலைச் சொல்கிறார். தீபிக் மறுக்கிறார். இதனால் மகேஷ் மனம் குமைகிறார். இதனால் படிப்பில் கவனம் செலுத்தாத மகேஷ் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்து விடுகிறார்.
மற்றவர்கள் தேர்ச்சி பெற்று பொறியியல் கல்லூரியில் சேர்கிறார்கள்.
இதற்கிடையே, தீபிக்ஷா, டிட்டோவை காதலிக்கிறார். இதை அறியாவிட்டாலும், வீட்டார் குடும்பமும் நன்கு பழகுவதால், இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள்.
ஆனால், நண்பன் காதலித்த பெண்ணை தான் திருமணம் செய்வது துரோகம், என்று நினைக்கும் டிட்டோ தீபிக்ஷாவை திருமணம் செய்ய மறுக்கிறார்.
இதையடுத்து தீபிக்ஷாவுக்கு அவரது பெற்றோர், தங்கள் சொந்தத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கிறார்கள்.
அதன் பிறகு அதிர்ச்சி சம்பவம் நடக்கிறது. பிறகு நடக்கும் சம்பவங்களே கதை.
இரட்டை நாயகர்களான .டிட்டோ மற்றும் மகேஷ் இருவரும் சிறப்பாக நடித்து உள்ளனர். பள்ளி மாணவர்களாக ஜாலியாக வலம் வருது.. பிறகு வயது முதிர்ச்சியில் பக்குவப்பட்டு நடந்துகொள்வது என வேறுபாடு காண்பித்து இருக்கிறார்கள்.
நாயகி தீபிக்ஷாவும் பாத்திரம் அறிந்து நடித்து உள்ளார். தனது காதல் புறம் தள்ளப்படும்போது குமையும்போதும், கர்ப்பிணியாக வரும்போதும் கவனம் ஈர்க்கிறார்.
கல்லூரி முதல்வராக நடித்திருக்கும் மதுமிதா சீரியஸான ரோலில் முத்திரை பதிக்கிறார். ஆசிரியராக நடித்திருக்கும் சாம்ஸும் சில இடங்களில் சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார். இதர வேடங்களில் தோன்றும், திடியன், சாப்ளின் சுந்தர், மணி, லட்சுமி, புஷ்பதா உள்ளிட்டோர் தங்கள் பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.
பின்னணி இசையில் ரசிக்க வைக்கிறார் சிற்பி. அதே போல டி.எஸ்.முரளிதரனின் இசையில் மூன்று பாடல்கள் ஓகே ரகம்.
அதே நேரம், கணேஷ் ராம் பி.எஸ். இசையில் வரும், “தொலைந்து போனாளே…” பாடல் மனதை உருக்குகிறது.
பால் லிவிங்ஸ்டன் மற்றும் பாலா பழனியப்பன் ஆகியோரது ஒளிப்பதிவு படத்துக்கு பலம்.
‘சிந்துநதி பூ’ செந்தமிழனின் வசனம் அருமை.
முக்கோண காதல் கதையாக இருந்தாலும், ஒவ்வொரு சூழலிலும், பல திருப்பங்களுடன் சொல்லி இருக்கிறார் இயக்குநர் சகாயநாதன்.
மொத்தத்தில், இந்த ’செல்ல குட்டி’யை ரசித்துப் பார்க்கலாம்.
