ராமதாஸ், அன்புமணி குடும்பத்தினர் திரைப்படம் தயாரிக்கலாமா?
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா, தயாரிப்பாளராக திரையுலகில் களமிறங்கி இருக்கிறார்.

உடனே, சமூகவலைதளங்களில் சிலர், “திரைத்துறையை கடுமையாக விமர்சிக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி குடும்பத்தில் இருந்து திரைத் துறைக்கு ஏன் வரவேண்டும்” என்று பதிவிட ஆரம்பித்துவிட்டனர்.
சங்கமித்திரா திரைத்துறைக்கு வருவது தவறா?
முதலில் சங்கமித்ரா குறித்தும், அவர் தயாரிக்கும் படம் குறித்தும் பார்ப்போம்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் – சௌம்யா அன்புமணி தம்பதியினருக்கு சம்யுக்தா, சங்கமித்ரா, சஞ்சுத்ரா என மூன்று மகள்கள் இருக்கிறார்கள்.
இவர்களில் இரண்டாவது மகள் சங்கமித்ரா. கடந்த 2021ல் த. ஷங்கர் பாலாஜிக்கும் இவருக்கும் திருமணம் நடந்தது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில், தர்மபுரி தொகுதியில் சௌம்யா அன்புமணி போட்டியிட்டபோது, பிரச்சாரம் செய்த வகையில் சங்கமித்ரா ஏற்கெனவே பிரபலம். அப்போது அனைவரையும், “அத்தை, மாமா, அண்ணா, தங்கை” எனபாசத்துடன் உறவு முறை சொல்லி அழைத்து கவனத்தை ஈர்த்தவர் இவர். இவர் பேசிய வீடியோக்கள் சமூகவலைதளத்தில் வைரலானது.

தற்போது இவரது, மேக்னாஸ் தயாரிப்பு நிறுவனம், டி.சபரீஷின் டிஜி பிலிம் நிறுவனத்துடன் இணைந்து ‘அலங்கு’ என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது.
இது ஒரு தரமான கூட்டணி.
ஆம்… டி.சபரீஷின் டிஜி பிலிம் நிறுவனம் முதன் முதலாக, கடந்த 2022ம் ஆண்டு, ‘செல்ஃபி’ திரைப்படத்தைத் தயாரித்தது, இசையமைப்பாளும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்தார். இந்த படம், தனியார் கல்வி நிலையங்களில் நடக்கும் கட்டணக் கொள்ளையை அப்பட்டமாக வெளிப்படுத்தியது. க்ரைம் த்ரில்லராக ரசிக்கத்தக்க வைகையில் உருவாகி கவனத்தை ஈர்த்தது. இயக்கியவர் மதி மாறன்.
இந்த தரமான நிறுவனத்துடன்தான், சங்கமித்ராவின் மேக்னாஸ் நிறுவனம் இணைந்து, ‘அலங்கு’ படத்தைத் தயாரித்து உள்ளது.
‘அலங்கு’ படத்தை இயக்கி இருப்பவர் எஸ்.பி.சக்திவேல். சிறப்பான படைப்புகளை அளித்தவர். ஆம்.. ஏற்கெனவே `உறுமீன்’, `பயணிகள் கவனிக்கவும்’ போன்ற, சிறந்த திரைப்படங்களை அளித்த, இயக்குநர் இவர்.
அதுவும், விதார்த் நாயகனாக நடித்த பயணிகள் கவனிக்கவும் திரைப்படம் பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும். நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியான இப்படத்தின், செய்தியாளர் காட்சி திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த செய்தியாளர்கள் அனைவரும் பாராட்டினர்.
ஓ.டி.டி.யில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற திரைப்படம் இது. “இப்படத்தின் இயக்குநருக்கும், வாய் பேச முடியாதவர் கதாபாத்திரத்தில், ஆகச்சிறந்த நடிப்பை அளித்த விதார்த்துக்கும் ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை” என சமூகவலைதளங்களில் பலரும் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது. ( ஆனால் இத்திரைப்படம், தேசிய விருதுக்கு அனுப்பப்படவில்லை)
‘அலங்கு’ திரைப்பட விசயத்தில், இன்னொரு சிறப்பும் நடந்திருக்கிறது.
மக்கள் ரசிக்கும் அதே நேரத்தில் மக்களுக்கு நல்ல செய்திகளைச் சொல்லும் திரைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வரும், சக்தி பிலிம் பேக்டரியின் சக்திவேலன்தான், ‘அலங்கு’ திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்று இருக்கிறார். “சிறந்த பிஸினஸ் மேன் மட்டுமல்ல.. நல்ல கலை ரசிகரும்கூட” என்று திரையிலகில் பெயர் எடுத்தவர் சக்திவேலன். இவர் வெளியிட்ட படங்களே இதற்கு சாட்சி. சமீபத்தில் இவர் வெளியிட்டது, பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி – அரவிந்த் சாமி உள்ளிட்டோர் நடித்த ‘மெய்யழகன்’.

ஆக… மதிப்புக்குரியவர்களுடன் – தரமானவர்களுடன் திரைக்கூட்டணி அமைத்து, மக்களுக்கான படத்தை அளிக்க இருக்கறார் சங்கமித்திரா.
உண்மைதான்… ‘அலங்கு; திரைப்படமும் மிக முக்கியமான விசயத்தைப் பேசுகிறது.
தமிழ்நாட்டு எல்லையில் கேரள மாநிலத்தில் இருந்து, மருந்து கழிவுகள், ஆடு – கோழி எச்சங்கள் -கவழிவுகள் உள்ளிட்ட ஆபத்தான கழிவுகளை கொட்டிச் செல்வது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் அப்பகுதி மாசுபடுகிறது.. மக்கள் பல நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.
இதை எதிர்த்துப் போராடும் பழங்குடி இன இளைஞனின் கதைதான் அலங்கு.
பட இயக்குநர், “இப்படம், முற்றிலும் ஆக்சன் த்ரில்லர் டிராமாவாக உருவாகி உள்ள இப்படத்தின் 95% காட்சிகள் அடர் வனப்பகுதிகளில் படமாக்கப்பட்டு உள்ளது” என தெரிவித்து இருப்பது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது.
இத்திரைப்படத்தில் கதை நாயகனாக குணாநிதி நடிக்கிறார்.
மேலும், செம்பன் வினோத் ஜோஸ், காளிவெங்கட், சரத் அப்பானி, ஸ்ரீரேகா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.

மாமன்னன் ராஜராஜ சோழன் காலத்தில் போர்ப்படையில் இடம் பெற்றிருந்த நாய் இனத்தைச் சேர்ந்த நாய் ஒன்று ஒரு கதாபாத்திரமாகவே வருகிறது.
அது, அலங்கு இன நாய். இதைத்தான் படத்துக்குத் தலைப்பாகவும் வைத்து இருக்கிறார்கள்.
சோழர்களின் படைகளில் இவை காவல்,மற்றும் வேட்டைக்கு இருந்தன. போரிலும், எதிரி நாட்டு குதிரைப்படையை தாக்குவதற்கு பயன்பட்டன.
தஞ்சை பெரிய கோயிலின் உள்பிரகாரத்தில் கண்ணைக் கவரும் சோழர் கால ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த ஓவியங்களில், அலங்கு வகை நாயின் ஓவியமும் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து, உலகப் புகழ்பெற்ற விலங்கியல் நிபுணர், டெஸ்மாண்ட் மோரிஸ், நாய்கள் குறித்து தான் தொகுத்த அகராதியில் (Dogs-The Ultimate Dictionary of Over 1000 Dog Breeds)
“வேட்டைக்கும் பாதுகாவலுக்கும் அலங்கை மிஞ்சிய நாய் இனம் இல்லை” என்று எழுதியுள்ளார்.
இந்த அலங்கு இன நாய்கள் அருகிவிட்டன. நாம்தான், நமது சூழலுக்குப் பொருத்தமே இல்லாத வெளிநாட்டு நாய்களை வளர்க்க ஆரம்பித்துவிட்டோமே!
இந்த நிலையில், அலங்கு இன நாய்களின் பெயரிலேயே படம்.. என்பது பாராட்டத்தக்கது.

‘அலங்கு’ படத்தில் நாயகன் குணா
இப்படத்தின் கதை நாயகன் குணாநிதி மருத்துவர். இவரும் தயாரிப்பாளர் சபரீஷூம் சகோதரர்கள். இவர்களது தந்தை, விழுப்புரம் முன்னாள் எம்.பி. தன்ராஜ். இவர், பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் நெருங்கிய உறவினர்.

விவரங்கள் போதும்.
‘திரைத்துறையை விமர்சிக்கும் ராமதாஸ், அன்புமணி குடும்பத்தினர் படங்களை தயாரிக்கலாமா’ என்று சமூகவலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்புகிறார்களே.. அதற்கு வருவோம்.
தொலைக்காட்சியில் வரும் ஆபாச, தரம் தாழ்ந்த நிகழ்ச்சிகளையும் விமர்சிக்கிறார்கள் ராமதாஸும், அன்புமணியும்.
ஒரு கட்டத்தில், ‘தீயதை விமர்சிக்கும் அதே நேரத்தில் நல்லதையும் செய்வோம்’ என்று அவர்கள் முடிவெடுத்து உருவாக்கியதுதான், ‘மக்கள் தொலைக்காட்சி’.
‘மண்பயனுறவேண்டும்’ என்பதை முத்திரையாக மட்டுமல்ல.. கொள்கை முழக்கமாக கொண்டு இயங்கும் தொலைக்காட்சி இது.
துவங்கியதில் இருந்து இன்று வரை – பத்தொன்பது ஆண்டுகளாக – மக்களுக்கான – மக்களின் கலை உணர்வை உயர்த்தும் நிகழ்ச்சிகளே இடம் பெறுகின்றன.
தமிழ் – தமிழர் மரபுளைப் போற்றும் தொலைக்காட்சியாக வலம் வருகிறது. கூத்துக்கலை முதல் தரமான வேற்றுமொழி திரைப்படங்கள் வரை… அறிவியல் முதல் விவசாயம்.. பேச்சுப்போட்டி முதல் விநாடி வினா நிகழ்ச்ச வரை…. இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.
‘மக்கள் தொலைக்காட்சி’யின் மாண்பு குறித்து தொடர்ந்து பல வருடங்களாக சமூகவலைதளங்களில் பதிவிட்டு பாராட்டும் நன்றியும் சொல்லி வருபவன் நான்.
https://www.facebook.com/reportersomu/posts/pfbid07GZwLAqEdjJK5pZMF7NCFhAaHNBdNSPk7BKQZSkYjdaAHdDGJsfYJMqQFrp93E2Tl
அதே நோக்கத்தோடுதான்.. அதாவது “அல்லதை விமர்சிப்போம்.. நல்லதை நாமே செய்வோம்” என்கிற எண்ணத்தோடுதான், அன்புமணி ராமதாஸ் குடும்பத்தில் இருந்து சமங்கமித்ரா தயாரிப்பாளராக திரைத்துறைக்கு வந்து இருக்கிறார்.

குறைந்த மற்றும் நடுத்தர பொருட்செலவில் வெளியாகும் நல்ல படங்கள் வெற்றி பெற்றவே செய்கின்றன. மக்கள் ஆதரவு அளிக்கவே செய்கிறார்கள். ஆனாலும், பெரும் நாயகர்களும், தயாரிப்பு நிறுவனங்களும் மக்களைக் கெடுக்கும் படங்களையே பெரும்பாலும் உற்பத்தி செய்துதள்ளுகின்றன.
இந்த நிலையில், நல்ல திரைப்படங்களை உருவாக்கும் திட்டத்துடன் திரையுலகில் தடம் பதித்து இருக்கும் தயாரிப்பாளர் சங்கமித்ராவை வரவேற்போம்!
நல்ல படைப்புகளைத் தந்து மக்களும் பயனுறட்டும்… அப்படங்கள் பெரும் வெற்றி பெற்று சங்கமித்திராவும் தொடர்ந்து படங்களைத் தயாரிக்கட்டும்!
ஆம்… நிஜ நாயகி சங்கமித்ராவுக்கு நமது வாழ்த்துகள்.
– டி.வி.சோமு
