ராக்கெட் டிரைவர்: திரைப்பட விமர்சனம்

ராக்கெட் டிரைவர்: திரைப்பட விமர்சனம்

ஸ்டோரீஸ் பய் தி ஷோர் சார்பில் அனிருத் வல்லப் தயாரிக்க ஸ்ரீராம் ஆனந்தசங்கர் இயக்கத்தில், விஷ்வத், சுனைனா, நாகா விஷால், காத்தாடி ராமமூர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்படம், ராக்கெட் டிரைவர்.

சென்னைவாசியான, பிரபா, படித்தவர், அறிவியலில் நாட்டம் உள்ளவர். சந்தர்ப்ப சூழலால் ஆட்டோ ஓட்டுகிறார்.

ஒரு நாள் ஒரு சிறுவன் அவரது ஆட்டோவில் ஏறுகிறான். தன் பெயர் அப்துல் கலாம் என்றும், 1948ம் ஆண்டில் இருந்து வருவதாகவும் கூறுகிறான். தனது சொந்த ஊர் ராமேஸ்வரம் என்றும் சொல்கிறான்.

“முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம், டைம் டிராவல் செய்து வந்திருக்கிறார்” என்று உற்சாகத்தில் குதிக்கிறார் பிரபா. இதை, பிரபாவின் தோழி, கமல், அறிவியல் ஆசிரியர் ஆனந்த் குமாரசாமி உள்ளிட்ட எவரும் நம்பவில்லை. ஆனால் பிரபா நம்புகிறார்.

அந்த சிறுவன், தனது தாயைப் பார்க்க வேண்டும் என சொல்ல.. இருவரும் ராமேஸ்வரம் செல்கிறார்கள்.

அங்கு, அப்துல்கலாமின் பால்ய நண்பரான, முதியவர் சாஸ்திரியை சந்திக்கிறார்கள். அந்த முதியவரும் அதிர்ச்சி அடைகிறார். பிறகு நம்புகிறார்.

அப்துல்கலாம் தனது தாயை சந்தித்தாரா, பிறகு என்ன நடந்தது என்பதே கதை.

ஆட்டோ டிரைவர் பிரபாவாக, விஷ்வத் நடித்து உள்ளார். தனது அறிவியல் ஆர்வத்துக்கு ஏற்ற சூழல் அமையவில்லையே என்கிற ஏக்கத்தை வெளிப்படுத்துவது, ‘நாட்டில் யாரும் ஒழுங்கு இல்லை’ என புலம்புவது, அப்துல் கலாம் என சிறுவனை நம்பி, மரியாதையுடன் ‘வாங்க சார்.. போங்க சார்..’ என்று அழைப்பது… என சிறப்பாக நடித்து உள்ளார் விஷ்வத்.அப்துல் கலாமாக வரும் சிறுவன் நாகா விஷாலும் அற்புதமான நடிப்பை அளித்து உள்ளார். ஏற்கெனவே, கேடி என்கிற கருப்பு சாமி திரைப்படத்தில் சிறப்பாக நடித்து முத்திரை பதித்தவர்.

‘காலணா’ கொடுத்து ஆட்டோவில் பயணிக்க முயல்வது, முதியவரை (பால்ய நண்பர்) பார்த்து, “டேய்..” என பாசத்தோடு அழைத்துப் பேசுவது என இயல்பாக நடித்து இருக்கிறார்.

கமல் என்கிற போக்குவரத்து காவலர் கதபாத்திரத்தில் நடித்து உள்ள சுனைனாவும் பாத்திரம் அறிந்து நடித்து உள்ளார்.

கலாமின் நண்பர் சாஸ்திரியாக வரும், காத்தாடி ராமமூர்த்தியும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். சிறுவன், இவரை “டேய்” என்று அழைக்க, பக்கத்தில் இருப்பவர் கோபப்பட, இவரோ, “அவன் என்னைத்தானே கூப்பிடுறான்.. நீ ஏன் டென்சன் ஆகிற” என கூலாக கேட்பதாகட்டும்… உண்மையிலேயே தனது நண்பன் – மறைந்த – அப்துல்கலாம்தான் மீண்டும் வந்திருப்பது என நினைத்து அதிர்ச்சியில் மயங்குவதாகட்டும் சிறப்பான நடிப்பு.

ஜெகன், ராமச்சந்திர துரைராஜ் உள்ளிட்டோரும் பாத்திரம் உணர்ந்து நடித்து உள்ளனர்.

கௌஷிக் க்ரிஷ் இசை படத்துக்கு பலம்.

ரெஜிமெல் சூர்யா தாமஸின் ஒளிப்பதிவு சிறப்பு. சென்னை மற்றும் ராமேஸ்வரம் காட்சிகளை சிறப்பாக படம் பிடித்து உள்ளார்.

இனியவன் பாண்டியனின் படத்தொகுப்பு கச்சிதம்.

“மீண்டும் அப்துல் கலாம் வந்தால்..” என்று வித்தியாசமாக யோசித்திருக்கிறார் இயக்குநர் ஸ்ரீராம் ஆனந்தசங்கர்.

நம்ப முடியாத கதை, முதல்பாதி மெதுவாக நகர்வது, மிகக்குறைந்த லொகோசன், நாடக பாணி என படத்தில் மைனஸ்கள் உண்டு.

ஆனாலும் வித்தியாசமான சிந்தனை, நெகிழ வைக்கும் கிளைமாக்ஸ் ஆகிவற்றால் கவர்கிறது படம்.

– டி.வி.சோமு

ராக்கெட் டிரைவர், அக்டோபர் 18 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

Related Posts