பாட்டல் ராதா: விமர்சனம்
“வாயில் வந்ததைத் திட்டுவான்! – அவன்
வாரிசுக்காகக் கருவைத் தாங்கும்
வயித்திலே யெட்டி மிதிப்பான்…”
– இப்படியான குடிநோயாளி குடும்பத் தலைவன்.
“தாலிக் கயிறு தனியாயிருக்கும். தங்கமிருக்காது
தண்ணி குடிக்கத் தகரக் கொவளை சொம்புமிருக்காது ..”
– என்கிற நிலையில் மனைவி – குடும்பம்.
கட்டட தொழிலாளியா ராதா, மதுப்பிரியன். மது பாட்டில் மூடியைத் திறக்கத் தெரியுமே தவிர, மூடத் தெரியாது. தவிர, அடுத்தடுத்த பாட்டில்கள் திறக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். அதனால், ‘பாட்டல் ராதா’ என்கிற பட்டப்பெயருடன் அழைக்கப்படுகிறான். அவனது மனைவி, இரு குழந்தைகளை வைத்துக்கொண்டு அல்லாடுகிறாள்.
தன் தாலியில் இருந்து ஒரு பகுதியை விற்ரு, பாட்டல் ராதாவை, போதை மறுவாழ்வு இல்லத்தில் சேர்த்துவிடுகிறார். அங்கிருந்து தப்பும் ராதா, மீண்டும் குடிக்க ஆரம்பிக்கிறான்.
அவன் மனைவி, தன் இரு குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயல்கிறாள்.
அதன் பிறகு என்ன ஆகிறது என்பதுதான் கதை.
குடி நோயாளி, பாட்டல் ராதாவாக, குரு சோம சுந்தரம்.
குடியின்மீதான தீராக்காதல், போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டவுடன் ‘சார்.. நான் குடிகாரன் இல்ல சார்… எப்பவாவது குவார்ட்டர்ல பாதி அடிப்பேன்.. அவ்வளவுதான் சார்’ என்று அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு பொய் சொல்வது, எப்படியாவது தப்பித்துப்போய் மது அருந்த வேண்டும் திட்டம் போடுவது, மனைவி, ‘குடிகாரன் பொண்டாட்டிதானே.. வாயேன்னு கூப்பிடுறானுங்க… இடுப்பைத் தடவுறானுங்க..’ என்று அழுகையும் ஆத்திரமுமாக சொல்லும்போது காட்டும் முகபாவம், மனைவி தனது தோழனுடன் செல்லும்பது வெளிப்படும் பார்வை… வழக்கம்போல அசத்தி இருக்கிறார் குரு.
அவரது மனைவியாக வரும் சஞ்சனா நடராஜன், அதி அற்புத நடிப்பு.
குடிகார கணவனை எப்படியாவது திருத்திவிட அவர் துடிக்கும் துடிப்பு, கேஸ் ஸ்டவ்வை திறந்துவிட்டு தற்கொலைக்கு முயல்வது, ‘கண்டவனும் இடுப்பை தடவறான்’ என குமுறுவது, ‘திருந்திட்டேன்..’ என கணவன் சொல்லும்போது, ‘நீ திருந்தினா என்ன.. இல்லேன்னா என்ன..? என் பத்து வருசம் பயிருச்சே…’ என ஆத்திரமடைவது… அற்புத நடிப்பு!
போதை மீட்பு மையம் நடத்துபவராக ஜான், குடி நோயாளியாக மாறன் உள்ளிட்டோர் என அனைவருமே சிறப்பான நடிப்பை அளித்து உள்ளனர்.
பெரும்பாலான காட்சிகள், போதை மறுவாழ்வு மையத்தில் இருந்தாலும் கொஞ்சமும் அலுப்பு தட்டாமல் விதவிதமன கோணங்கள் இயல்பான ஒளி அமைப்பு என முத்திரை பதித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரூபேஷ் ஷாஜி.
ஷான் ரோல்டன்யில் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையும், படத்தின் ஒரு கதாபாத்திரமாகவே வருகிறது.
2014ம் ஆண்டு வெங்கட் ரமணன் இயக்கி நடித்த, ‘அப்பா வேணாம்ப்பா..’ திரைப்படம், மதுவின் கொடுமையை சிறப்பாக சொன்னது.
அதன் பிறகு இந்த படம் வெளியாகி உள்ளது.
குடியால் குடும்பம் சிதைவதை, குவார்ட்டரும் வாட்டர்பாக்கெட்டும்போல கண்முன் நிறுத்துகிறார் இயக்குநர், தினகரன் சிவலிங்கம்.
ஆவணப்படமாக இல்லாமல், இயல்பான நகைச்சுவை, மறுவாழ்வு இல்லத்தில் இருந்து தப்பிக்கும் திக் திக் காட்சிகள் என சுவாரஸ்யமாக அளித்து இருக்கிறார் இயக்குநர்.
மிக முக்கிய ஒரு விசயமும் உள்ளது…
சர்க்கரைப் பொங்கலை ரசித்துச் சாப்பிடும்போது, நல்வாய்ப்பாக திடுமென கிடைக்கும் முந்திரி, கூடுதல் சுவையை ஏற்படுத்தி விடும்.
பாலு மகேந்திராவின், ‘வீடு’ திரைப்படம் நடுத்தர குடும்பம் வீடு கட்டுவது குறித்தானதுதான். ஆனால் அதன் ஊடே வரும் பானுசந்தர் – அரச்சனா காதல், சர்க்கரைப் பொங்கலில் கிடைக்கும் முந்திரி போன்றது.
நாளை வெளியாக இருக்கும், ‘பாட்டல் ரதா’ படத்திலும் அப்படித்தான்.
மெயின் கதை, குடிபோதை குறித்தானதுதான். அதில் இடையில் வரும் காதல், கூடுதல் சுவை.
ஆனால் இது பலருக்கும் அதிர்ச்சி அளிக்கும்.
காதல் கணவனின் போதை டார்ச்சர்களை பொறுக்க முடியாத கட்டத்தில் விலகுகிறாள் மனைவி. பல வல்லூறுகள் வட்டமிடுகின்றன. நெருப்பாய் நிற்கிறாள அவள்.
ஒரு கட்டத்தில், ஒருவனது அன்பு அவளை ஈர்க்கிறது. புது உறவு. இருவரும் பழகுகிறார்கள்.
இது பலருக்கும் அதிர்ச்சி அளிக்கவே செய்யும். ஆனால் இதுவும் பொங்கல் சுவைக்கும் போது இடையில் கிடைக்கும் கூடுதல் சுவையே.
அதாவது, வெண்பொங்கலை சுவைக்கும்போது திடுமென கிடைக்கும் மிளகு போன்றது.
இந்த காரமும் சுவைதான்… அவசியமும்கூட!
இதை உறுத்தாதவாறு, மெயின் கதையில் இருந்து ரசிகர்களின் பார்வை விலகதவாறு நாசூக்காக சிறப்பாக அளித்த இயக்குநரd தினகரன் சிவலிங்கத்துக்கு பாராட்டுகள்!
குடி கொண்டாட்ட பாடலையும், போதை மறுவாழ்வு மையம் என்றால் அடி உதை விழும் என்கிற எண்ணத்தை ஏற்படுத்தும் காட்சிகளையும் நீக்கி இருக்கலாம்.
ஆனாலும் அவசியம் பார்க்க வேண்டிய படம்.
– டி.வி.சோமு
குறிப்பு: விமர்சனத்தின் ஆரம்பத்தில் இடம்பெற்றுள்ள ‘வாயில் வந்ததைத் திட்டுவான்..’ என்ற பாடல் 1949ல் வெளியான நல்லதம்பி படத்தில் இடம் பெற்றது.
அதற்கு முன்பு 1938ல், குடியின் தீமை மட்டுமே கருவாகக்கொண்டு சுவர்ணலதா என்கிற படம் வெளியான.. 85 வருடங்களுக்கு முன்!
இத்தனை வருடங்களாக குடியின் கொடுமையைச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டி உள்ளது.
இந்நிலை என்று மாறுமோ!

