‘பாம்’: திரை விமர்சனம்

‘பாம்’: திரை விமர்சனம்

“ஜெம்பிரியோ பிக்சர்ஸ்” சார்பில், சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் ஆகியோர் தயாரிப்பில்,  விஷால் வெங்கட் இயக்க,  அர்ஜூன் தாஸ், காளி வெங்கட்,  ஷிவாத்மிகா ராஜசேகர், நாசர், அபிராமி உள்ளிட்டோர் நடித்து நாளை வெளியாக உள்ள திரைப்படம், பாம்.

விமர்சனம்:

இரண்டு கிராமங்கள் இரண்டுபட்டுக் கிடக்கின்றன. ஏற்றத் தாழ்வுகளே அடிப்படை காரணம். அந்தப் பகுதியில் இருக்கும் பகுத்தறிவாளர் ஒருவர், இந்த ஏற்றத் தாழ்வுகளை போக்கி மக்களை ஒன்றுபடுத்த நினைக்கிறார். அதற்கான முயற்சியில் இறங்குகிறார். ஆனால் முயற்சி திருவினையாகும் முன் இறந்து விடுகிறார்.

கிராம மக்கள், நள்ளிரவில் ஒன்று கூடி, அவரை அடக்கம் செய்ய ஏற்பாடுகளைச் செய்கிறார்கள்.

அப்போது நடக்கிறது அந்த அதிர்ச்சிகரமான விசயம்.

அது என்ன.. அதன் பிறகாவது ஊர் மக்கள் பிரச்சினை தீர்ந்ததா என்பதே கதை.

அர்ஜூன்தாஸ், ஆக்சனில் இருந்து அப்பாவி கேரக்டருக்கு பிரமோசன் ஆகி இருக்கிறார். ஆம்.. அதிரடி வில்லனாக மட்டுமல்ல.. அற்புதமான குணச்சித்திர பாத்திரத்திலும் நடிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் இந்த நாயகன்.

வழக்கமாக இவர், வில்லன் கதாபாத்திரத்தில் கண்களாலும், குரலாலுமே மிரட்டி விடுவார். அதே நேரம், ரசவாதி திரைப்படத்தில் வேறு ஒரு தளத்துக்கு தனது நடிப்பை உயர்த்தினார். இதில், அப்பாவி வேடம். அதையும் சிறப்பாக செய்து இருக்கிறார்.அதிலும் அந்த கிளைமாக்ஸ் காட்சி… சாமி ஆடுவது, அதன் பிறகு குடும்பத்தாரிடம் உண்மையைச் சொல்வது… சிறப்பான நடிப்பு. வாழ்த்துகள் அர்ஜூன்தாஸ்.

காளி வெங்கட் சில காட்சிகளில்தான் நடமாடுகிறார். மற்றபடி , உயிரற்ற உடலாக நடித்திருக்கிறார். இரு வேறுபட்ட நடிப்பிலும் வழக்கம்போல் முத்திரை பதித்து இருக்கிறார்.

நாயகி ஷிவாத்மிகா, அபிராமி, நாசர், சிங்கம் புலி, பால சரவணன் என அனைவருமே சிறப்பாக நடித்து உள்ளனர்.

டி.இமானின் இசை படத்துக்கு பலம். பி.எம்.ராஜ்குமாரின் ஒளிப்பதிவு சிறப்பு.நல்லதொரு கதைக் களத்தைத் தேர்ந்தெடுத்த இயக்குநர் விசால் வெங்கட் பாராட்டுக்கு உரியவர். இரண்டு கிராமங்கள் – ஜாதி பிரச்னை – கடவுள் நம்பிக்கை பின்னணியில், சமூகத்துக்குத் தேவையான கருத்துக்களை நகைச்சுவையோடு – சுவாரஸ்யத்தோடு அளித்து இருக்கிறார்.

மத நம்பிக்கை என்பது மனிதன் உருவாக்கியதுதான்.. அதற்காக அடித்துக்கொள்ளத் தேவையில்லை என்கிற அற்புதமான கருத்தை வலியுறுத்தும் இந்தப் படம், தற்கால சூழலுக்கு மிகவும் அவசியம்.

அனைவரும் பார்த்து ரசிக்கலாம்.

ரேட்டிங்: 3.8/5