அமரர் இயக்குநர் கே. பாக்யராஜ் அவர்களின் நல்லாசியுடன், மித்துன் மாணிக்கம் இயக்கி நடிக்கும் ‘ஃபேமிலி பாய்’ படத்தின் ‘அப்பா உன் ஆராரிரோ’ பாடலை வெளியிட்ட சாந்தனு பாக்யராஜ்!

அமரர் இயக்குநர் கே. பாக்யராஜ் அவர்களின் நல்லாசியுடன், மித்துன் மாணிக்கம் இயக்கி நடிக்கும் ‘ஃபேமிலி பாய்’ படத்தின் ‘அப்பா உன் ஆராரிரோ’ பாடலை வெளியிட்ட சாந்தனு பாக்யராஜ்!

தந்தையின் பாசத்தையும், அவர் இல்லாத வெற்றிடத்தில் ஏற்படும் தவிப்பையும் இதயத்தின் ஆழத்திலிருந்து பேசும் ‘அப்பா உன் ஆராரிரோ’ பாடலை, நடிகர் சாந்தனு பாக்யராஜ் வெளியிட்டுள்ளார். நிர்மல் JP இசையமைப்பில் உருவாகியுள்ள இப்பாடலுக்கு, மித்துன் மாணிக்கம் வரிகள் வடித்துள்ளார். தேசிய விருது வென்ற பாடகர் சுந்தரய்யரும், வெங்கட்ரமணனும் இணைந்து பாடியுள்ள இப்பாடல், மென்மையான இசையாலும் உருக்கமான வரிகளாலும் கேட்போரைக் கட்டிப்போடுகிறது. மகனுக்கும் தந்தைக்குமான ஆழமான பிணைப்பை அழகாகச் சொல்லும் இந்தப் பாடல், ‘ஃபேமிலி பாய்’ படத்தின் மீதான ஆர்வத்தை ரசிகர்கள் மத்தியில் பன்மடங்கு உயர்த்தியுள்ளது.

மித்துன் மாணிக்கம் தானே இயக்கி, கதையின் நாயகனாகவும் நடித்திருக்கும் இப்படத்தில், எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுகிரஹா எஸ். நம்பியார், நிகிலா சங்கர், அனிதா சம்பத், ‘பசங்க’ சிவகுமார், சிவம், அருள்தாஸ் மற்றும் பி. எல். தேனப்பன் எனப் பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். நிஜ வாழ்வில் நடந்த சம்பவங்களை மையமாகக் கொண்டு, குடும்ப உணர்வுகளோடு விறுவிறுப்பான ஆக்‌ஷன் திரில்லராகவும் இப்படம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கார்த்திக் கே. கதிரவன் ஒளிப்பதிவு செய்ய, ஜிஜேந்திரன் V படத்தொகுப்பையும், சி. கே. முஜிபுர் ரஹ்மான் கலை இயக்கத்தையும் கையாண்டுள்ளனர்.

மெக்கானிக் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் மித்துன் மாணிக்கம் தயாரித்திருக்கும் இப்படத்தை, மில்லினியல்ஸ் மூவி புரொடக்ஷன் LLP நிறுவனத்துடன் இணைந்து முஹம்மத் கனி ஃபைசல் மற்றும் டாக்டர் கே. அருண் ஆறுமுகம் ஆகியோர் தயாரித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் பலூன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. ஏற்கனவே வெளியான ‘தீராகணம்’ பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்த நிலையில், இப்போது வெளியாகியுள்ள ‘அப்பா உன் ஆராரிரோ’ குடும்பத்தின் மற்றொரு உணர்வுப்பூர்வமான முகத்தைத் திறந்து காட்டியுள்ளது. வரும் டிசம்பர் பதினொன்றாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘ஃபேமிலி பாய்’ திரைப்படத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Related Posts