‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’ என்று பாரதியார் எழுதவே இல்லை!
பாரதியாரின் பல கவிதைகள் – அவற்றின் வரிகள் – இன்றளவும் மிகப் பிரபலமானவை. அவற்றில் ஒன்று, ‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’ என்கிற கவிதை வரிகள்.
ஆனால் பாரதியார் அப்படி எழுதவில்லை என்பது தெரியுமா?
ஆமாம்…
பாரதி எழுதிய புகழ் பெற்ற பாப்பா பாட்டு வரிசையில் வரும் பாடல்களில் ஒன்றுதான் இது.
அவர், 1913ம் ஆண்டில் ஞானபானு என்கிற இதழை, துவங்கினார். இதில் 1915 மார்ச் இதழில் இந்த பாடலை எழுதினார்.
அதில் அவர்,
“சாதிப் பெருமையில்லை பாப்பா – அதில்
தாழ்ச்சி யுயர்ச்சி செய்தல் பாவம்
நீதி தெளிந்தமதி அன்பு – இவை
நிறைய வுடையவர்கள் மேலோர்” என்றுதான் எழுதி இருக்கிறார்.
அதாவது, “சாதிப் பெருமையில்லை” என்றுதான் எழுதி இருக்கிறார்: “சாதிகள் இல்லை” என எழுதவில்லை.
பிறகு எப்படி இது மாறியது?
நெல்லையப்பர்
பாரதியாரின் நண்பர் – , அவரை பெரிதும் மதித்தவர் – நெல்லையப்பர். இவர், பாரதியாரின் பாப்பா பாட்டு புத்தகத்தை, 1917-ல் பதிப்பித்தார். அதில்தான், அந்த வார்த்தை மாறிவிட்டது.
சீனி விசுவநாதன்
இதை ஆதாரத்துடன் நிரூபித்தவர், சீனி.விசுவநாதன். இவர், பாரதியின் கவிதைகள் அனைத்தையும் மிகச் சிரமப்பட்டு தேடித்தேடி, தொகுத்தவர். இந்த கவிதைகள் அனைத்தும், ‘கால வரிசையில் பாரதி படைப்புகள்’ என்கிற பெயரில் 16 தொகுப்புகளாக வெளியாகி உள்ளது. (அல்லையன்ஸ் வெளியீடு)
இதில் 9வது தொகுதியில் 148வது பக்கத்தில், இந்த உண்மையைக் குறிப்பிட்டு உள்ளார் சீனி.விசுவநாதன்.