” பரோஸ் வித்தியாசமான அனுபவத்தைத் தரும்!”: மோகன்லால் நம்பிக்கை

” பரோஸ் வித்தியாசமான அனுபவத்தைத் தரும்!”: மோகன்லால் நம்பிக்கை

ஆசீர்வாத் சினிமாஸ் சார்பில், ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்க, மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி பிரம்மாண்ட ஃபேண்டஸி திரைப்படமான ” பரோஸ்”, வரும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. ரவிஸ் டாக்டர்.பி.ரவி பிள்ளை இப்படத்தை வழங்குகிறார். இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இசையமைப்பாளர் லிடியன் நாதஸ்வரம், “பரோஸ் என்னுடைய அறிமுகத் திரைப்படம், மோகன்லால் சார் இயக்கும் முதல் படத்தில் நான் இசையமைப்பாளராக அறிமுகமாவது மகிழ்ச்சி. பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் மார்க் கிலியான், ‘பரோஸ்’ படத்திற்கு ரீ-ரிக்கார்டிங் செய்துள்ளார். கண்டிப்பாக இப்படம் உங்களை ஆச்சரியப்படுத்தும்” என்றார்.

கிரியேடிவ் ஹெட் ராஜிவ் குமார், ” இந்தியாவின் முதல் 3டி படமான மைடியர் குட்டிச்சாத்தான் படத்தில் நான் உதவி இயக்குநராக பணியாற்றினேன். இத்தனை வருடங்கள் கழித்து, முழுமையான 3டி படத்தில் மோகன்லாலுடன் இணைந்து வேலை பார்த்தது மகிழ்ச்சி. வருடைய கற்பனையை உருவாக்கும் இந்தப் படத்தில் பணிபுரிந்தது, நல்ல அனுபவமாக இருந்தது. மோகன்லால் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநராகவும் கலக்கியிருக்கிறார்” என்றார்.

நடிகர், இயக்குநர் மோகன்லால், “47 வருடமாக திரைத்துறையில் இருக்கிறேன். இயக்குநராக என் முதல் படம். எப்படி இது நடந்தது என எல்லோரும் கேட்டார்கள், இது அதுவாகவே நடந்தது, அவ்வளவு தான்.

இது ஒரு ஃபேண்டஸி, அட்வென்சர் படம். முழுக்க 3டியில், இரண்டு கண்களில் பார்ப்பது போல, இரண்டு கேமராவை வைத்து, படம்பிடித்துள்ளோம். நீங்கள் பார்க்கும் போது, புது அனுபவமாக இருக்கும்.இப்படத்தில் மிக முக்கியமான திறமையான கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர். உலகின் சிறந்த ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன் இப்படத்தில் பணியாற்றியுள்ளார். ஹாலிவுட் இசையமைப்பாளர் மார்க் கிலியான், ரீ-ரிக்கார்டிங் செய்துள்ளார். லிடியன் முதன் முதலில் எங்களைப் பார்க்க வந்த போது 13 வயது தான், மிகச்சிறந்த இசையைத் தந்துள்ளார்.

2 நடிகர்கள் தான் இந்தியா, மற்றவர்கள் எல்லோரும் போர்ச்சுகல், ஸ்பெயின், க்ரீஸ், ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள். பிரிடிஷ் குழந்தை தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.

படத்தில் ஒரு அனிமேடட் கேரக்டர் வருகிறது. இங்குள்ள ஒருவரை நடிக்க வைத்து, அதைத் தாய்லாந்து கலைஞர்கள் வைத்து, அனிமேடட் கேரக்டராக மாற்றியுள்ளோம். மிகப்பெரிய உழைப்பு” என்றார்.