‘விடுதலை 2’ பட அரசியல்: ஆ: மஞ்சுவாரியர் கதாபாத்திரம்… உண்மையில் யார் தெரியுமா?

‘விடுதலை 2’ பட அரசியல்: ஆ: மஞ்சுவாரியர் கதாபாத்திரம்… உண்மையில் யார் தெரியுமா?

விடுதலை 2 படத்தில் வரும் மஞ்சுவாரியர் கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. அதே நேரம், “இப்படி யாராவது உண்மையிலேயே இருக்க முடியுமா” என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறது.

தொளதொளவென அரைக்கை சட்டை, வேட்டி, கிராப் கட்டிங், சைக்கிள் பயணம்… இதையெல்லாம்விட… தனது ஆண்டை குடும்பத்தை எதிர்த்து தொழிலாளர்களுக்காக போராடும் தோழர்!

இதுதான் பலருக்கு ஐயத்தை ஏற்படுத்தியது.

உண்மையில் இப்படி ஒருவர் நிஜமாகவே வாழ்ந்தார்!

அவர் பெயர்… !

1940களின் பிற்பகுதியில் இருந்து 1950 முற்பகுதி வரை பிரிக்கப்படாத அன்றைய (கீழத்) தஞ்சை மாவட்டத்தில், புரட்சிகரமாக ஒலிக்கப்பட்ட பெயர் இது.

அரைக்கைச் சட்டை, , கதர் வேட்டி, தோளில் துண்டு, கிராப்புத் தலை, தோள்ப் பை, ஒற்றைக் காளை மாடு பூட்டப்பட்ட வண்டியில் தன்னந்தனியாகப் பயணம் அல்லது சைக்கிள் பயணம், உடனிருக்கும் குடைக் கம்பியில் எப்போதும் மறைத்து வைக்கப்பட்ட குறுங்கத்தி, சிலம்பத்தைத் தற்காப்புக் கலையாகக் கற்றத் துணிச்சல்.. இதுதான் மணியம்மாளின் தோற்றம்.

தென்னிந்தியாவிலேயே முதன்முதலில் மிதிவண்டி ஓட்டியவராக கருதப்படுபவர் இவர்.

இன்றைய திருவாரூர் மாவட்டத்தின் வலங்கை அருகே உள்ள மணலூர் கிராமத்தில், பிராமணக் குடும்பத்திலே பிறந்தவர், மணியம்மாள். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வாளாம்பாள். ஆனால் செல்லப்பெயரான மணி என்பதே நிலைத்துவிட்டது.

இவர் தன் இளம் வயதிலேயே தந்தையை இழந்தவர். இவரக்கு பத்து வயதிலேயே திருமணம் செய்துவைத்தார்கள். கணவருக்கே இவரை விட இருபத்தயைந்து வயது அதிகம். திருமணமான 10 ஆண்டுகளிலேயே கணவனை இழந்து தாய்வீடு வந்து சேர்ந்தார்.

திருமண வாழ்வில் அவருக்குக் கிடைத்த ஒரே ஆறுதல், கிறித்துவ திருச்சபையில் பணி புரிந்த ஒரு பெண்மணி மூலம் ஆங்கிலம் கற்க வாய்ப்பு கிடைத்ததுதான். அதன் மூலம் ஆங்கிலத்துடன், சீர்திருத்த எண்ணங்களும் அவருக்குள் எழுந்தன.

கணவரின் மனைவிக்குப் பிறகு தாய் வீட்டுக்கு வந்த மணியம்மையை, அந்தக்கால வழக்கப்படி மொட்டை அடித்து, வெள்ளை உடை அணிவித்து முடக்கினர்.

ஆனால், அந்த அடிமைத்தளையில் இருந்து வெளியேறினார் மணியம்மை. தஞ்சைக்கு காந்தி வந்தபோது அவரைச் சந்தித்து காங்கிரஸில் சேர்ந்தார். எனினும் சமூகரீதியாக பல்வேறு ஒடுக்குமுறைகளை நிகழ்த்தும் நிலப்பிரபுக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்களாக இருந்தததைப் பார்த்தார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான களத்தில் நின்றது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்பதை உணர்ந்தார். ஆகவே, காங்கிரஸிலிருந்து வெளியேறி கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.

பி. சீனிவாசராவ், மணலி கந்தசாமி போன்ற முன்னோடி பொதுவுடமையாளர்கள் மூலம் தனது அரசியல் அறிவை வளர்த்துக் கொண்ட இவர், செல்வாக்கு மிகுந்த தலைவராக உயர்ந்தார்.

இவரது குடும்பத்துக்கு ஏராளமான நிலம் இருந்தது. அங்கும் பண்ணையடிமை முறை இருந்தது. அதை எதிர்த்தார்.. ஒழித்தார். இதனால் அவரது தம்பி, நிலங்களை குத்தகைக்கு விட்டுவிட்டுவிட்டார். தமக்கையையும் சென்னைக்கு அழைத்தார். ஆனால் இவர் செல்லவில்லை.

பாழடைந்த வீடு ஒன்றில் குடியேறினார். தொடர்ந்து கம்யூனிஸ போராளியாக மக்களுக்காக உழைத்தார்.

பண்ணை அடிமை முறைக்கு எதிரான போராட்டத்தாலும், வர்க்க அணி திரட்டலாலும் நிலச்சுவான்தார்கள் ஆத்திரமடைந்து இவரைக் கொல்ல முயன்று, கொடும் தாக்குதலில் ஈடுபட்டனர். பலத்த காயத்துடன் உயிர் தப்பினார்.

இன்னொரு பக்கம், பொதுவுடமைக் கட்சி தடை செய்யப்பட்டதால் தலைமறைவு வாழ்க்கையில் ஈடுபட வேண்டிய நிலை. தவிர சிறைவாசம். அங்கும் போராட்டம்…!

இப்படி முழுக்க முழுக்க  ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே வாழ்ந்தார் மணியம்மாள்.

1953 ஆம் ஆண்டு..

தான் திருமணம் நடத்தி வைத்த தம்பதிக்குப் பிறந்த குழந்தைக்குப் பெயர் சூட்ட, பூந்தாழங்குடி சென்றார்.  பிறகு மணலூர் திரும்பியவர் அங்கு உறவினர்களைச் சந்தித்துவிட்டு, திருவாரூர் செல்ல பேருந்துக்காகக் காத்துக்கொண்டு இருந்தார்.

பிற்பகல் நேரம்..

ஏதோ ஒன்று பின்னாலில் இருந்து அவரை குத்திச் சாய்த்தது.. ரத்த வெள்ளத்தில் வீழ்ந்தார் மணியம்மாள்.

உடனடியாக அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்ல எவரும் முன்வரவில்லை…  ஆள் நடமாட்டம் இருந்த அந்த பிற்பகல் நேரத்தில்!

ஒன்றரை மணி சுமாருக்குக் கீழே விழுந்த அவரின் உடலை, மூன்று மணியளவில்தான் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறார்.

எந்த மக்களுக்காக வாழ்நாளெல்லாம் பாடுபட்டாரோ அந்த மக்கள்கூட அவரைக் காக்கத் துணியவில்லை என்பதுதான் வலிக்கும் உண்மை.

திருவாரூர் மருத்துவமனைக்குத் தாமதமாகக் கொண்டு செல்லப்பட்ட மணியம்மாவின் உயிர் பிரிந்தது.

அங்குதான், “ஏதோ ஒரு மான் தனது கொம்புகளால் குத்திவிட்டது” என்று அறிக்கையில் சொன்னார்கள் மருத்துவர்கள்.

குத்தியது மான்தானா  அல்லது மான் கொம்பினால் யாரும் குத்தினார்களா என்பது மர்மாகவே இருக்கிறது.

எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் மணியம்மையின் வரலாறை அடிப்படையாக கொண்டு “பாதையில் பதிந்த அடிகளில்” என்ற பெயரில் புதினமாக எழுதியுள்ளார்.

இன்றும் திருவாரூர், நாகை மாவட்டங்களில் விவசாய பணிகளின் போது இரைப் பற்றிய பாடல்களைப் பாடுவார்கள்.

“கோட்டை இடிஞ்சி விழ

கொடி பிடிச்சு அம்மா வந்தா

சாட்டையடிக்கு முன்னே

சாகசங்கள் செஞ்சி வந்தா

மதிலுகள் சரிஞ்சுவிழ

மணியம்மா அங்கே வந்தா

பதிலுகள் கேட்டு வந்தா

பட்டமரம் தழைக்க வந்தா

ஏழைக்குலம் குளிரும்

எங்கம்மா பேரு சொன்னா

மக்கள் குலம் குளிரும்

எங்கம்மா பேரு சொன்னா

மக்கள் குலம்  விளங்கும்

மணியம்மா பேரு சொன்னா!”

–  இந்த மணியம்மாளை மனதில் வைத்துத்தான், விடுதலை 2 படத்தில், மஞ்சுவாரியர் கதாபாத்திரத்தை உருவாக்கி இருக்கிறார் வெற்றிமாறன்.

அவருக்கு வாழ்த்துகள்!

– டி.வி.சோமு

Related Posts