படவா: திரைப்பட விமர்சனம்: தமிழ்நாட்டின் தீப்பற்றும் பிரச்சினையைச் சொல்லும் படம்!

வேலைக்கே போகாமல், நண்பன் சூரியுடன் ஊர்..ஊஹூம்.. கிராமத்தைச் சுற்றி வருகிறார் நாயகன் விமல். அதோடு, கண்ணில் படும் பொருட்களை களவாண்டு, சாராயமாக உள்ளே இறக்குகிறார்கள். ஏதாவது அக்கப்போர் செய்து ஊர் மக்களை உண்டு இல்லை என்று ஆக்குகிறார்கள்.
நொந்துபோன மக்கள், விமலை நாடு கடத்த திட்டமிடுகிறார்கள். எல்லோரும் ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு, மலேசியாவுக்கு வேலைக்கு அனுப்புகிறார்கள். அங்கே சின்சியராக வேலை பார்க்கிறார் விமல்.
ஆனாலும் திடுமென வேலை பறிபோக, ஊருக்குத் திரும்புகிறார். இங்கே தன்னை ஆளாளுக்கு டார்ச்சர் செய்வார்கள் என பயந்துகொண்டே வருகிறார்.
ஆனால் ஊரே அவரை கொண்டுகிறது.
இதற்குக் காரணம் என்ன என்பதையும், ஊரையே தனது சுயநலத்துக்காக பலிகடாவாக்கும் வில்லன் என்ன ஆனான் என்பதையும் சொல்வதுதான் மீதிக்கதை.

அடுத்தவருக்கு டார்ச்சர் கொடுப்பது, காதலியிடம் வழிவது, வில்லனிடம் ஆக்ரோசமாக மோதுவது என பல படங்களில் செய்த கதாபாத்திரம்தான் விமலுக்கு. ஆனாலும் ரசிக்கவைக்கிறார் என்பது உண்மை.
அதுவும், பஞ்சாயத்துத் தலைவரான பிறகு ஏற்படும் மாற்றங்களை தனது உடல் மொழியிலும் வெளிப்படுத்தி ஈர்க்கிறார்.
அதே போல வழக்கமாக நாயகனுடன் சுற்றும் காமெடி கதாபாத்திரம்தான் சூரிக்கு. யெஸ்… இவரும் ரசிக்கவைக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் புதுவரவு ஷ்ரிதா ராவ். ஒன்றிரண்டு காட்சிகளில் காதலித்து, ஒரு காட்சியில் கோபித்து, இரண்டு டூயட் பாடுவதோடு சரி.
விமலின் அக்காவாக வரும் தேவதர்ஷினி, மாமாவாக வரும் நமோ நாராயணன் இருவருமே இயல்பாக நடித்து கவர்கின்றனர்.
வில்லனாக நடித்திருக்கும் கே.ஜி.எப் ராம் எப்போதும் போல உருட்டல் மிரட்டலுடன் வருகிறார்.. மற்றபடி சொல்லிக்கொள்ளும்படியான காட்சிகள் அவருக்கு இல்லை.
ஜான் பீட்டரின் இசையில் பாடல்கள் லயிக்க வைக்கின்றன. பின்னணி இசையும் படத்துக்கு பலம்.
ராமலிங்கத்தின் ஒளிப்பதிவு சிறப்பு. கிராமத்து அழகை, அள்ளித்தந்திருக்கிறது.

திரைக்கதையில் புதுமை இல்லை என்றாலும் ரசிக்கவைத்துவிடுகிறார் இயக்குநர் கே.வி.நந்தா. அதோடு, தமிழ்நாட்டை பாதிக்கும் கருவேல மர பாதிப்பை மிகச் சிறப்பாக சொல்லி இருக்கிறார். அதே நேரம், இந்த கருவேல மர பாதிப்பு குறித்து பெரிய அளவில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. இதற்காக நேரடியாக களத்தில் இறங்கினார். அதோடு, உயர் நீதி மன்றத்தில் வழக்கும் தொடுத்தார். அவரை படத்தின் இறுதியிலாவது குறிப்பிட்டு இருக்கலாம்.
மற்றபடி, பாடம் நடத்துவது போல் இல்லாமல், படத்துடன் ஒட்டிய காட்சிகளில்.. அதே நேரம் மனதில் தைக்கும்படி நல்ல ககுரத்தை விதைத்திருக்கிறார் இயக்குநர்.
இதற்கு, சூப்பர்குட் சுப்ரமணியன் கதாபாத்திரத்தை சரியாகப் பயன்படுத்தி இருக்கிறார்.
மொத்தத்தில் அவசியம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.