ஏஆர்எம் : விமர்சனம்

ஏஆர்எம் : விமர்சனம்

அரசர் காலத்தில், விண்வெளியில் இருந்து விழும் எரிகட்களைக் கொண்டு, சியோதி என்கிற அதிசய விளக்கு செய்யப்படுகிறது. அது, தாத்தா – மகன் – பேரன் என மூன்று தலைமுறைகளை எப்படி பாதிக்கிறது என்பதை சுவையாகச் சொல்லி இருக்கும் படமே, ஏஆர்எம் (அஜயண்டே ரண்டாம் மோஷனம்).

கேரளாவில் ஹரிபுரம் என்கிற கிராமத்தில் வசிக்கும் இளைஞர், அஜயன். களரியில் கில்லாடியான அவர், எலக்ட்ரிசியனாகவும் இருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன், இவரது தாத்தா, கோயிலில இருந்த விலைமதிப்பில்லாத சியோதி விளக்கைத் திருடிச் சென்றதாக குற்றம் சாட்டி, அஜயனைத் திருடனாகவே பார்த்து ஒதுக்கி வைக்கிறார்கள் கிராமத்து மக்கள்.

அந்த ஊரில் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர் லட்சுமி. அஜயனும் இவரும் காதலிக்கிறார்கள்.

இந்த நிலையில் கிராமத்து கோயிலைப் படமெடுக்க வந்திருக்கும் சுதேவ், அந்த அதிசய விளக்கை கொள்ளையடிக்க திட்டமிடுகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை.தாத்தா,மகன், பேரன் என மூன்று தலைமுறை ஆட்களாக நடித்து உள்ளார், டோவினோ தாமஸ்.

ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், அற்புதம்!

அரசர் காலத்தில் வாழும் தாத்தா கதாபாத்திரம் இன்னும் சிறப்பு. ஊர் மக்களுக்காக, அற்புத விளக்கை அரசிரடம் கேட்டுப் பெறுவது… அரசர் ஏமாற்றிவிட்டார் என்றதும் பொங்குவது.. திட்டமிட்டு அந்த விளக்கை அடைவது என சிறப்பான நடிப்பு. அதே போல தற்கால இளைஞன் கதாபாத்திரமும் அருமை.

தன்னை சாதி ரீதியில் இழிவாக பிறர் பேசும்போது வெளிப்படுத்தும் குமுறல், காதலியிடம் காண்பிக்கும் நேசம், விளக்கைத் தேடிப் புறப்படும் பயணம் என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் டோவினோ தாமஸ்.

மூன்று கதாபாத்திரங்களுக்குமான வேறுபாட்டை முகபாவனையில் மட்டுமின்றி, உடல் மொழியிலும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

நாயகிகளாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லட்சுமி, கீர்த்தி ஷெட்டி மூவரும், பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர். குறிப்பாக சுரபி லட்சுமி கூடுதலாக கவர்கிறார். கணவன் மீது திருப்படுப்பட்டம் சுமத்தி, காவலர்கள் வீட்டுக்கு வந்து மிரட்டும் காட்சி, அருவியில் கணவன் விழும்போது வெளிப்படுத்தும் அலறல் என உதாரணங்களை அடுக்கலாம்.

வில்லனாக வரும் ஹரீஷ் உத்தமன், பொற்கொல்லனாக வரும் ஜெகதீஷ், நாயகனின் தாயாக வரும் ரோகினி, நண்பனாக வரும் ஜோசப் என அனைவருமே இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

“அரசன் செய்தால் ஏமாற்று அல்ல.. ராஜ தந்திரம்..” போன்ற வசனங்கள் கவர்கின்றன.

மூன்று வெவ்வேறு காலகட்டத்தை மிகச் சிறப்பாக வேறுபடுத்தி காட்டி இருக்கிறார் கலை இயக்குநர் கோகுல் தாஸ். அதை அற்புதமாக படம் பிடித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜோமன் டி.ஜான். குறிப்பாக இரவு நேரக்காட்சிகளிலும், அருவி காட்சிகளிலும் பிரமிக்க வைக்கிறார்.

திபு நினன் தாமஸ் இசையில் ‘பூவே பூவே தாழம்பூவே’ பாடல் கூடுதலாக கவர்கிறது. பின்னணி இசையும் அபாரம்.

காலம் காலமாக உலவும் கேரள நாட்டுப்புறக் கதையை, சிறப்பான கதையாக திரையில் வடித்து இருக்கிறார், சுஜித் நம்பியார். அதற்கு அற்புதமாக திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார், அறிமுக இயக்குநர் ஜித்தின் லால்.

பிரபஞ்சமே பேசுவது, எரிகல் விழுந்து காடுகள் தீக்காடாவது, ராஜதந்திரம் என்கிற பெயரில் அரசன் ஏமாற்றுவது.. என காட்சிகளை மிகச் சிறப்பாக உருவாக்கி இருக்கிறார்கள்.அரசர் காலத்தில் இருந்து, இந்த ஜனநாயக காலம் வரை மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை காட்சிகளினூடே, உறுத்தாமல் வெளிப்படுத்திய விதம் சிறப்பு.

அனைவரும் ரசித்துப் பார்க்கலாம்.