“அண்ணாமலைக்கு அறிவே கிடையாது!”: ‘பட்டாசாய்’ வெடித்த ‘பூவுலகின் நண்பர்கள்’!

ஒவ்வொரு வருடமும் தீபாவளியின்போதும் சுற்றுப்புற சூழலியாளர்களும், சமூக ஆர்வலர்களும், “பட்டாசுகளால் ஏற்படும் காற்று மற்றும் ஒலி மாசு ஆரோக்கியமான சமூகத்திற்கு பெரும் சவாலாக உருவெடுத்திருக்கிறது. குறிப்பாக காற்றின் தரம் மோசமடைவதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெரும் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக தீபாவளிக்கு ஒருநாள் முன் தொடங்கி, தீபாவளி அன்றும், அதற்கு அடுத்த நாளும் சென்னையில் காற்றின் தரத்தை அளவிட்டபோது, அது அபாயகரமான அளவில் இருந்தது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே பட்டாசு மத்தாப்புளைத் தவிர்ப்போம் ” என்று சொல்லி வருகிறார்கள்.அதே நேரம், “பட்டாசு வெடிப்பதால் கொசுக்கள் அழியும்.. ஆகவே அதிகமாக பட்டாசு வெடியுங்கள்” என கடந்த சில வருடங்களாக பாஜகவினர் கூறி வருகிறார்கள். “இது அறிவியல் பூர்வமாக உண்மையல்ல. பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் கெடுவதும், மனிர்கள் உள்ளிட்ட உயிர்களுக்கு பாதுப்பு ஏற்படுவதுமே உண்மை” என சுற்றுச் சூழல் அறிஞர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் “பட்டாசு வெடிப்பது நம்ம கலாச்சாரம். நம் மக்களின் வாழ்வாதாரம். நம் சிவகாசியின் ஒட்டுமொத்த பொருளாதாரம். நம் மகிழ்ச்சிக்காகப் பட்டாசு தயாரிக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்காக, நாம் அனைவரும், நம்மால் முடிந்த அளவுக்குப் பட்டாசு வாங்கி வெடிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்து உள்ளார்.
மேலும் ஒரு வீடியோவும் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் சுற்றுப்புற சூழல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஜி. சுந்தர்ராஜன், தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்து உள்ளதாவது:
“அண்ணாமலைக்கு யாராவது காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் கார்பன் வெளிப்பாடும், பட்டாசு பிரச்சனையும் வேறுவேறானவை எனச் சொல்லுங்களேன்.தவிர, நம்முடைய கலாச்சாரம் பண்பாட்டிற்கும், பட்டாசு வெடித்துத் தீபாவளி கொண்டாடுவதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது அண்ணாமலை. கடந்த 50 ஆண்டுகளாகத்தான் நாம் பட்டாசு வெடித்துக் கொண்டாடுகிறோம். அதுவும் நீங்க ஒரு காணொளி பதிவிட்டு இருக்கீங்க, அறிவியலுக்கும் அதற்கும் எந்த தொடர்பும் கிடையாது, அறிவியலுக்கும் உங்க கட்சிக்குமே சம்மந்தம் கிடையாது என்று எங்களுக்குத் தெரியும், அதனால் இது ஒன்றும் புதிதல்ல.
பட்டாசுகளை வெடிக்கவேண்டாம் எனச் சொல்வதற்குக் காரணம் அது “கார்பன் வெளிப்பாடு” தொடர்பானது மட்டுமல்ல, இது மக்களுக்கும், பிற உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடியது என்பதால்தான். அமெரிக்காவில், ஒரு ஆள் எவ்வளவு கார்பனை வெளியிடுகிறார்கள், சீனாவில் எவ்வளவு தெரியுமா என்றெல்லாம் உளறிக்கொட்டி இருந்த காணொளியை வெளியிட்டு “மாசுபாடு பற்றி” உங்களுக்கு எதுவும் தெரியாது என்று சொல்லிவிட்டீர்கள்.
உலக அளவில் கார்பன் வெளிப்பாட்டில் இந்தியாவிற்கு மூன்றாவது இடம், முதலில் சீனாவும் அதன் பிறகு அமெரிக்காவும் அதற்கு அடுத்து இந்தியா. எத்தனை பேர் சேர்ந்து கார்பனை வெளியிடுகிறோம் என்பது கணக்கல்ல, எவ்வளவு என்பதுதான் முக்கியம். பட்டாசு பிரச்சனை என்பது நம் சுவாசம் சம்மந்தப்பட்டது, பட்டாசு வெடிப்பதால் அதில் உள்ள கன உலோகங்கள் காற்றில் கலந்து மாசு ஏற்பட்டு நுரையீரல் புற்று உள்ளிட்ட பல உடல் நலச் சிக்கல்கள் வரும், குழந்தைகள் சுவாசிக்கக் கஷ்டப்பபடுவர், ஆஸ்த்மா, நாள்பட்ட நுரையீரல் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் மக்கள் அல்லல்படுவதைப் பார்க்கலாம்.
நீங்க என்றைக்காவது தீபாவளிக்கு மறு நாள் சென்னையில் உள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது ஒரு மருத்துவமனைக்குச் சென்று பார்த்துள்ளீர்களா? போய்ப் பாருங்கள் எத்தனை குழந்தைகள் முகத்தில் nebulizer மாட்டியுள்ளார்கள் என்று. எப்போது ஒரு விஷயம் “சமூகத் தீங்காக” (Social evil) மாறுகிறதோ அன்றே அதைக் கைவிட்டுவிடவேண்டும், லாட்டரி டிக்கெட் தடைசெய்யப்பட்ட போது பல லட்சக் கணக்கான மக்கள் அதை நம்பியிருந்தார்கள், ஆனால், அரசு தடை செய்தது. பட்டாசு தொழிலில் பல ஆயிரகணக்கான மக்கள் ஈடுபட்டுள்ளார்கள் என்றால் அவர்களுக்கு உரிய மாற்று வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசும், அந்த நிறுவங்களும் செயல்படவேண்டும்.
அதை விடுத்து, எவ்வளவு பட்டாசு வேண்டுமோ அவ்வளவு பட்டாசை வாங்கி வெடியுங்கள் என்று சொல்வது மனித குலத்திற்கு எதிரானது, பிற உயிர்களுக்கும் எதிரானது. ஆனால் நீங்கள் சொல்லியதில் எங்களுக்கு ஆச்சரியம் இல்லை” என்று ஜி.சுந்தர்ராஜன பதிவிட்டுள்ளார்.