‘அன்பே டயானா’: ஜூலை பதினேழு முதல் காதல்+கொண்டாட்டம்…!
‘குட் நைட்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அன்பே டயானா’ திரைப்படம் வரும் ஜூலை பதினேழாம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது! ‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தின் கலர்ஃபுல் ரிலீஸ் போஸ்டர் தற்போது வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
மணமகன் கோலத்தில் பாரி இளவழகனும், ‘நீக்’ பட புகழ் ரம்யா ரங்கநாதனும் காரின் மீது அமர்ந்திருக்க, சுற்றிலும் நண்பர்களும் குடும்பத்தினரும் திருவிழா மூடில் கொண்டாடும் இந்த போஸ்டர், படம் பக்கா ஜாலியான ஃபேமிலி என்டர்டெய்னராக இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது. பெரம்பூர் பின்னணியில், வெவ்வேறு கலாச்சாரப் பின்புலம் கொண்ட இருவரின் காதலைப் பேசும் ‘கிராஸ்-கல்சுரல்’ கதையாகவும், வடசென்னை நடுத்தர வர்க்கத்து வாழ்வியலை நகைச்சுவையோடு சொல்லும் படைப்பாகவும் இது உருவாகியுள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு முன்னணி நடிகை ரோஜா இதில் முக்கிய வேடத்தில் நடிக்க, சேத்தன், ‘பரிதாபங்கள்’ கோபி, செல்முருகன் ஆகியோர் கலகலப்பூட்டுகின்றனர். பரத் சங்கர் இசையில், ‘அருவி’ ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள ‘அன்பே டயானா’, ஜூலை பதினேழாம் தேதி முதல் தியேட்டர்களில் குடும்பங்களோடு கொண்டாட வைக்கக் காத்துக் கொண்டிருக்கிறது!

