அமெரிக்க ஆவி: “40 + நாட்டினர் நடித்திருக்கும் படம்!”: நெப்போலியன் அதிரடி தகவல்!

அமெரிக்க ஆவி: “40 + நாட்டினர் நடித்திருக்கும் படம்!”: நெப்போலியன் அதிரடி தகவல்!

அமெரிக்க மண்ணில் தமிழன் கொடி நாட்டிய பிரம்மாண்டத் திருவிழாவாக ‘அமெரிக்கா ஆவி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் விமரிசையாக நடைபெற்றது. ஜீவன் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் நெப்போலியன் மற்றும் குணால் நெப்போலியன் தயாரிக்க, தஞ்சை ஜே பி ஆர் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் நெப்போலியன் முதன்மை நாயகனாக அவதாரம் எடுத்துள்ளார். ஜப்பான் நாட்டின் சென்னை துணைத் தூதர் டாக்கா ஹாசி மற்றும் தயாரிப்பாளர் ஆதித்யா ராம் ஆகியோர் இசையை வெளியிட, தயாரிப்பாளர் கண்ணன் ரவி பெற்றுக் கொண்டார். திரையுலகத் பிரபலங்கள் பலர் கூடி வாழ்த்திய இந்த விழாவின் சுவாரசியமான உரையாடல்கள் இதோ!

தயாரிப்பாளர் குணால் நெப்போலியன்

தமிழ் சினிமாவில் முழுவதும் அமெரிக்காவிலேயே படமாக்கப்பட்ட முதல் திரைப்படம் இதுவென்று பெருமிதத்துடன் தொடங்கினார். அமெரிக்காவில் வாழும் தமிழ் மக்களின் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணரும் முயற்சியாக இது அமைந்திருப்பதாகக் கூறினார். ‘ஆவி’ என்றால் பேய் மட்டுமல்ல, அமெரிக்காவில் வெற்றி பெற்ற மனிதர்களின் முயற்சியையும் குறிக்கும் என விளக்கினார். இணைத் தயாரிப்பாளர் தனுஷ் நெப்போலியன் நேரலையில் பார்த்துக்கொண்டிருப்பதாகக் கூறி, அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கிற்கு வந்து ஆதரவு தர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.நடிகர் நெப்போலியனின்  

மேடையில் ஏறிய நடிகர் நெப்போலியன் உணர்ச்சி பூர்வமாகவும் கம்பீரமாகவும் பேசத் தொடங்கினார்:

“இந்த திரைப்படத்தில் ஆண்டோ, தியான், அர்லூ, பிரேமா, பிஜூ, மகேஷ், பப்லு, அருண் ஆண்டனி, சாம் ஆண்டோ, பிரகாஷ், ஐஸ்வர்யா, ராஜ்குமார், இந்து ராஜ்குமார், ராகுல், ஹேமமாலினி, ஊர்வசி, மைதிலி என ஏறத்தாழ இருநூறு புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள். இவர்களில் பலர் பெரிய மென்பொருள் நிறுவனங்களின் பொறியாளர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பேராசிரியர்கள். திங்கள் முதல் வெள்ளி வரை தங்கள் பணிகளில் பிஸியாக இயங்கும் இவர்கள், எங்களுக்காக ஒதுக்கிய ஓய்வு நேரத்தைச் சரியாகத் திட்டமிட்டு வெறும் എഴുபத்தைந்து நாட்களில் இந்த முழுப் படத்தையும் எடுத்து முடித்திருக்கிறோம்.

அமெரிக்காவில் இதுவரை சினிமா படப்பிடிப்பையே நேரில் பார்த்திராத மனிதர்களை வைத்து, நானும் இயக்குநரும் பயிற்சி அளித்து நடிக்க வைத்திருக்கிறோம். திலகம் சிவாஜி கணேசன் நடித்த ‘பாரத விலாஸ்’ படத்தில் இந்தியா முழுவதும் உள்ளவர்கள் நடித்திருப்பார்கள். ஆனால் இந்த படத்தில் உலகம் முழுவதிலும் உள்ள நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் நடித்திருக்கிறார்கள்.

கடந்த ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று நான்காம் ஆண்டு சன் டிவி நேரலைத் தொலைக்காட்சி தொடங்கியபோது, நானும் இயக்குநர் பாண்டியராஜனும் பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா வரை சென்று தொடங்கி வைத்தோம். அன்று மலர்ந்த எங்கள் நட்பு இன்று வரை தொடர்கிறது. இங்கு வந்து வாழ்த்திய நண்பர்களுக்கும் திரை உலகச் சொந்தங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!”

புதுமுக நடிகர் மகேஷ்

ஜனவரி மாதத்தில் பிரத்யேக உடையில் வரச் சொன்னபோது ஆடிஷன் என்று நினைத்ததாகவும், ஆனால் நெப்போலியன் நேரடியாக நடிப்புக் கற்றுக் கொடுத்து நடிக்க வைத்த மறக்க முடியாத அனுபவத்தைப் பகிர்ந்தார். தன் தாயாரே நெப்போலியனுக்கு அம்மாவாக நடித்ததில் பெருமிதம் கொண்டார்.

இயக்குநர் தஞ்சை ஜே பி ஆர்

சிறு வயதில் ஃபிலிம் சுருள் மூலம் சுவரில் படம் காட்டியது முதல் தனக்கு உருவான சினிமா ஆசையைக் குறிப்பிட்டார். அமெரிக்காவில் செட்டில் ஆன பிறகு நெப்போலியனைச் சந்தித்த அனுபவத்தையும், அவருடைய மூன்றரை ஏக்கர் வீட்டை மையமாக வைத்து நகைச்சுவை கலந்த திகில் கதையை உருவாக்கிய விதத்தையும் விவரித்தார்.

ஒளிப்பதிவாளர் ‘நேஷ் வில்’ பிரபு

தம் தாத்தா வழியில் வந்த கலை ஆர்வத்தையும், சென்னையில் தங்கியிருந்த நாட்களில் கற்றுக் கொண்ட ஒளிப்பதிவுத் திறமையையும் நினைவுகூர்ந்தார். நெப்போலியன் குடும்ப நிகழ்வுகளைப் படம் பிடித்தது முதல் ஜப்பானில் தனுஷின் திருமணத்தைப் பதிவு செய்தது வரை தம்மை ஒளிப்பதிவாளராக உயர்த்திய நெப்போலியனுக்கு நன்றி கூறினார்.

ஃபெப்சி தலைவர் ஆர் கே செல்வமணி

இப்படம் ‘மை டியர் குட்டிச்சாத்தான்’ பாணியில் அட்டகாசமான பொழுதுபோக்காக இருக்கும் என்றார். இருநூறு புதுமுகங்களை வைத்துப் படம் எடுப்பது உலக மகா கடினமான வேலை என்றும், கலா மாஸ்டரின் நடன அமைப்பும் பி சி ஸ்டண்டின் சண்டைக் காட்சிகளும் படத்தை வேறு தளத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாகப் பாராட்டினார்.திருமதி ரோஜா செல்வமணி

நெப்போலியனுடன் இணைந்த நடித்த நாட்களை நினைவுகூர்ந்து, அவர் ஒரு நல்ல மனிதர், நல்ல தந்தை மற்றும் கலைஞர் எனப் புகழ்ந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நெப்போலியன் மீண்டும் திரைக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், ரசிகர்கள் இப்படத்திற்குப் பெரு ஆதரவு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

நடிகர் நாசர்

முப்பது ஆண்டுகால நட்பைப் பகிர்ந்த நாசர், நெப்போலியன் எப்போதுமே ‘நல்ல மனிதர்’ என்ற அடைமொழியோடு வாழ்பவர் என்றார். தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிடத்திற்கு அவர் வழங்கிய ஒரு கோடி ரூபாய் வைப்புத் தொகையை நினைவுகூர்ந்து, குழந்தைகள் அனைவரும் விரும்பிப் பார்க்கும் சிறந்த குடும்பப் படமாக இது இருக்கும் என வாழ்த்தினார்.

தயாரிப்பாளர் டி சிவா

நெப்போலியன் எப்போதுமே ஒரு ராணுவ வீரரைப் போல் சுறுசுறுப்பாகச் செயல்படுபவர் என்றார். திரையுலகில் அவர் பார்த்த இரண்டு ‘நல்ல மனிதர்களில்’ ஒருவர் விஜயகாந்த், மற்றொருவர் நெப்போலியன் என்று புகழாரம் சூட்டினார்.

நடன இயக்குநர் கலா

படத்தின் பாடல்களுக்குப் புதுமுகங்கள் அனைவரும் சிறப்பாக நடனமாடியதாகப் பாராட்டினார். நெப்போலியனும் அவரது மனைவி சுதாவும் முப்பது ஆண்டு கால குடும்ப நண்பர்கள் என்றும், இது பேய்ப் படம் அல்லாமல் அழகான குடும்பப் படமாக அமைந்திருக்கிறது என்றும் கூறினார்.

இசையமைப்பாளர் ஆதிஷ் உத்ரியன் & பாடலாசிரியர் சினேகன்

இசைப் பயணத்தில் இது ஒரு முக்கியமான மைல்கல் என்று ஆதிஷ் உத்ரியன் நெகிழ்ந்தார். சினேகன் பேசுகையில், நெப்போலியனுடனான நட்பு சகோதரத்துவத்தைக் கடந்தது என்றும், இப்படத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமையடைவதாகவும் தெரிவித்தார்.

இயக்குநர் ஆர் வி உதயகுமார்

‘எஜமான்’ படத்தில் நெப்போலியனை வில்லனாக நடிக்க வைக்க ரஜினி சாருடன் போராடிய சுவாரசிய நினைவுகளைப் பகிர்ந்தார். ஹாலிவுட் நடிகர் கிளென் ஈஸ்ட்வுட் பாணியில் நெப்போலியன் கெத்தாக இருக்கும் இந்த ‘அமெரிக்கா ஆவி’ மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்தினார்.

Related Posts