“விலைவாசி உயர்வு.. முதலமைச்சரிடம் கோரிக்கை!”: குஷ்பு ஆதங்கம்!

“விலைவாசி உயர்வு.. முதலமைச்சரிடம் கோரிக்கை!”: குஷ்பு ஆதங்கம்!

“விலைவாசி உயர்வு மற்றும் தொழிலாளர் சம்பள உயர்வு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், சின்னத்திரை தயாரிப்பாளர்களுக்கான செலவை தொலைக்காட்சிகள் தருவதில்லை” என நடிகை குஸ்பு ஆதங்கம் தெரிவித்து உள்ளார்.

இன்று நடைபெற உள்ள,  சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின்ஆண்டு பொதுக்குழு கூட்டத்திற்கு கலந்து கொள்ள பெப்சி ஆர்.கே. செல்வமணி , பெப்சியின் செயலாளர் சுவாமிநாதன் , சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் மங்கை ஹரிராஜன்,  இயக்குனர் தளபதி , சின்னத்திரை நடிகர் சங்க தலைவர்  பாரத்,  சின்னத்திரை எழுத்தாளர் சங்க தலைவர்  பத்ரி ஆகியோர்  வருகை தந்து இருந்தனர்.

மேலும் STEPS சங்கத்தின் தலைவர் குஷ்பு சுந்தர் , செயலாளர் குட்டி பத்மினி , பொருளாளர் திரு RD பாலேஷ்வர், foundar member – திரு அழகன் தமிழ்மணி, advisory members – YG மகேந்திரா, சுஜாதா விஜயகுமார், முரளிராமன்,  உப தலைவர்கள் – அபு பாக்கர் சித்திக், டிவி சங்கர், துணை செயலாளர்கள் – மதி ஒளி குமார், மாலினி ஜெயச்சந்திரன், AH ஷெரீஃப், மற்றும் புஷ்பா கந்தசாமி உட்பட பல தயாரிப்பாளர்களும் வந்திருந்தனர்.

பொதுக்குழுக் கூட்டத்துக்கு முன்பாக, குஸ்பு செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர் தெரிவித்ததாவது:

“இந்தக் கூட்டத்தில் தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும், அவற்றுக்கான தீர்வுகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.  மேலும், பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டு, அவற்றைச் சங்க உறுப்பினர்களிடம் எடுத்துரைக்கத் திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக, ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் தயாரிப்பாளர்களின் பிரச்சினைகள் குறித்தும், அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளன. இன்றைய கூட்டத்தில் ஏராளமான தயாரிப்பாளர்கள் பங்கேற்றிருப்பது தங்களுக்குப் பெரும் பலமாக இருப்பதாகக் குறிப்பிட்ட குஷ்பு, தயாரிப்பாளர்கள் நலமாக இருந்தால்தான் சங்கமும் சிறப்பாகச் செயல்பட முடியும்.

இன்றைய காலகட்டத்தில் தொலைக்காட்சி இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை உள்ளது. ஆனால், திரைக்கு முன்னால் இருப்பவர்களை மட்டுமே மக்கள் அதிகம் அறிந்துள்ளனர். திரைக்குப் பின்னால் இருந்து பணியாற்றும் தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் பலருக்கும் தெரிவதில்லை. இத்தகைய பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்காகவே இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.மேலும், சங்கத்தில் உள்ள பல தயாரிப்பாளர்கள் தற்போது தொடர்களைத் தயாரித்து வருவதாகவும், சிலர் புதிய தொடர்களைத் தயாரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளின்போது ( FEFSI) பெப்சியின் தலைவர் ஆர்.கே. செல்வமணி  தொடர்ந்து ஆதரவாக இருக்கிறார்.  பிற சங்கங்களைச் சேர்ந்தவர்களும் தங்களுக்குப் பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர். அவர்களுக்கு நன்றி.

இந்தப் பொதுக்குழுக் கூட்டதத்தில் எடுக்கப்படவுள்ள தீர்மானங்கள், மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் மற்றும்  அறிவிப்புகள் குறித்தும் தயாரிப்பாளர்களுடன் பகிர்ந்துகொள்ள உள்ளோம்.

சின்னத்திரை தயாரிப்பாளர்கள் பொதுவாக எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினை நிதி சார்ந்தது. தற்போது அனைத்துப் பொருட்களின் விலைகளும் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. ஆனால், தயாரிப்பாளர்களுக்குத் தொலைக்காட்சி நிறுவனங்கள் நிர்ணயிக்கும் தொகை மட்டும் உயர்வதில்லை.

தொழிலாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.  ஆனால் தயாரிப்பாளர்களுக்கு எந்தத் தொலைக்காட்சி நிறுவனமும் உரிய வகையில் ஊதிய உயர்வு வழங்குவதில்லை. இன்று பேசப்படும் அதே தொகை, பத்து ஆண்டுகளுக்குப் பிறகும் வழங்கப்படும் நிலை இருக்கிறது.

சந்தையில் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்து வரும் நிலையில், தயாரிப்பாளர்களுக்குக் கிடைக்கும் தொகை மட்டும் உயர்வதில்லை. தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டிய சூழலில், தயாரிப்பாளர்கள் அதற்கான நிதியை எவ்வாறு ஏற்பாடு செய்வார்கள்?

இத்தகைய பிரச்சினைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயல்பாடுகளுக்கு நிதி தேவைப்படுகிறது. அதற்காகத் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு திரு. ஜோசப் விஜய் அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

சங்கத்திற்கெனத் தனியாக ஓர் இடம் வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தோம்.  அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவதாக முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.  இதற்காக முதலமமைச்சர் திரு சி ஜோசப் விஜய் அவர்களுக்கு நன்றி.

சங்கத்திற்கான நிதியைத் திரட்டும் நோக்கில், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் மலேசியாவில் ஒரு கலை நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க நடிகர் சிலம்பரசன்  ஒப்புக்கொண்டுள்ளார்.தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக இருப்பேன் என்று அவர் உறுதியளித்துள்ளார்.

சங்கத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகத் தொலைக்காட்சி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளது.

சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தைப் பொறுத்தவரையில், ஓ.டி.டி. தளங்கள் ஏற்கெனவே தங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். ஓ.டி.டி. தளங்களைச் சேர்ந்த உறுப்பினர்களும் எங்களுடன் இருக்கின்றனர்” என்று குஸ்பு தெரிவித்தார்.

Related Posts