அமரன்: நாயகனின் சாதி திட்டமிட்டு மாற்றப்பட்டதா?
‘பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை, ‘அமரன்’ என்கிற படமாக எடுக்கும்போது, சாதியை மாற்றிவிட்டார்கள்’ என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது.
இது குறித்து தமிழ் இந்து நாளிதழ், “பிராமண சமூகத்தைச் சேர்ந்தவரை ராணுவ வீரனாக/ கதாநாயகனாககாட்டுவதற்கு தமிழ் சினிமாவில் எழுதப்படாத தடை இருக்கிறது. அதற்கு ‘அமரன்’ படமும் விதிவிலக்கல்ல! ஏற்கெனவே ‘சூரரைப் போற்று” படத்திலும் இது நடந்தது. தொடர்ந்து திராவிட ஆதரவாளர்களால் வெளிப்படுத்தப்படும் பிரமாணர்கள் மீதான வெறுப்பின் நீட்சியே காரணம்” என்கிறது.
இது குறித்து பத்திரிகையாளர் டி.வி.சோமு தனது முகநூல் பக்கத்தில் பதிந்துள்ளதாவது:
“அப்படி எல்லாம் இல்லை…
‘அந்நியன்’ படத்தில், பிராமண கதாபாத்திரம்தான் ஹீரோ! அந்தப் படம் வெற்றி பெற்றது. (இத்தனைக்கும், தவறு செய்யும் பிராமணரை விட்டுவிட்டு, இதரர்களைக் கொல்லும் கதாபாத்திரம் அது!)
இதிலிருந்தே மக்கள், திரைப்படங்களில் மக்கள் சாதி பார்ப்பதில்லை என்பதை உணரலாம்.
ஏன்.. சாதித் தலைப்புடனேயே வந்த படங்களை பிற சாதியினரும் பார்த்துத்தானே வெற்றி பெற வைத்தார்கள்.
தவிர, இட ஒதுக்கீட்டால் பயன் பெற்ற சாதியினர்தானே இட ஒதுக்கீட்டுக்கு எதிரான ‘ஜென்டில்மேன்’ படத்தையும் வெற்றிபெறச் செய்தார்கள்.
இன்னொரு விசயம்…
நிஜ சம்பவத்தை படமாக்கும்போது பெயரை மாற்றுவது ஒன்றும் புதிதல்ல.
2.o படத்தில் பட்சிராஜன் கதாபாத்திரம், நிஜத்தில் பறவை மனிதர் என்று போற்றப்படும் சலீம் அலி! இதில் சாதி அல்ல.. மதமே மாற்றப்பட்டது!
இது ஒன்றும் புதிதல்ல…
37 வருடங்களுக்கு முன், நாயகன் படத்தில், நிஜ வரதராஜ ‘முதலியார்’, நாயகன் படத்தில் வேல் ‘நாயக்கராக’ மாறினார்.
ஏதோ காரணத்துக்காக இயக்குநர்கள் செய்யும் வேலை இது. காரணமே இல்லாமல் இங்கும் திராவிடத்தின் தலை உருட்டப்படுகிறது!
( பிராமண பெண் கதாபாத்திரங்களை திரைப்படங்களில் இழிவு படுத்தப்படுவதை கண்டித்து எழுதியவனும் நானே!)” என்று டி.வி.சோமு பதிந்துள்ளார்.