கட்டணம் உயரும்.. 24 மணி நேரமும் சினிமா? : திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை!

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம், பொதுச்செயலாளர் ஆர்.பன்னீர் செல்வம் தலைமையில் இன்று சென்னையில் உள்ள சங்கக் அலுவலகத்தல் கூடியது.
உரிமையாளர்களுக்கு நட்டம் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், சில தீர்மானங்களை நிறைவேற்றினர்.
“பெரிய நடிகர்களின் படம் 8 வாரம் கழித்தும், அதற்கடுத்த வரிசையில் உள்ள நடிகர்களின் படம் 6 வாரங்கள் கழித்தும் ஓ.டி.டியில் திரையிட வேண்டும்.
தமிழ் திரைப்படங்கள் இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் தான் திரையிடப்பட வேண்டும். சில மாநிலங்களில் முன்னதாக திரையிடப்படுவதால் தமிழகத்தில் வசூலில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது” என்று திரையுலகினருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
அதே போல தமிழ்நாடு அரசுக்கும் சில கோரிக்கைகளை வைத்துள்ளனர்.
“திரையரங்குகளில் பராமரிப்பு கட்டணத்தை அனுமதி கட்டணத்தில் இருந்து 10% வசூலிக்க அனுமதிக்க வேண்டும்.
மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளுக்கு ரூபாய் 250 வரையும், ஏசி திரையரங்குகளுக்கு ரூபாய் 200 வரையும், மற்ற திரையரங்குகளுக்கு ரூபாய் 150 வரையும் கட்டணம் நிர்ணயிகக அனுமதிக்க வேண்டும்.
திரையரங்குகளில் இத்தனை காட்சி தான் திரையிட வேண்டும் என்று கட்டுப்பாடு இல்லாமல் திரையிட அனுமதி தர வேண்டும்.
நம் பக்கத்து மாநிலங்களில் 24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிட அனுமதி உள்ளது. அதுபோல் தமிழ்நாட்டிலும் இது போன்ற அனுமதிகள் வழங்கப்பட வேண்டும்” என தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
இவர்களது கோரிக்கையை ஏற்று திரையரங்கில் கட்டணம் உயர்த்தவும், 24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிடவும் தமிழ்நாடு அரசு அனுமதிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.