அக்கரன் – திரைவிமர்சனம்

அக்கரன் – திரைவிமர்சனம்

அருண் கே.பிரசாத்  இயக்கத்தில் எம்.எஸ் பாஸ்கர் நடித்து வெளியாகியிருக்கும் படம்  அக்கரன். நல்ல நடிகரும் நல்ல கதை இருந்தால் நம்பிப் படம் எடுக்கலாம் என களம் இறங்கி இருக்கிறார் இயக்குனர்.

அதற்கு உதாரணமாக அமைந்திருக்கிறது அக்கரன் திரைப்படம். பல  படங்களில் குணச்சித்திர மற்றும் துணைப் பாத்திரங்களில் நடித்து வந்த எம்.எஸ்.பாஸ்கர். இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது  பார்க்கிங்.இந்த  படத்தின் மூலம்  அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

அக்கரன் படத்தின் முதல் காட்சியிலேயே எம்.எஸ். பாஸ்கர் இரண்டு பேரை நாற்காலியில் கட்டி வைத்து பசையைக் கொண்டு ஒட்டி வைத்து வன்முறையைப் பிரயோகித்து சில உண்மைகளை வர வைக்க முயற்சி செய்து கொண்டிருப்பது போல் காட்டுகின்றனர்.

அங்கிருந்து பின்னோக்கி  நகர்கிறது கதை…

பிளாஷ்பேக்கில் தன் இரண்டு மகள்களுடன் வசித்து வரும் எம் எஸ் பாஸ்கர், முதல் மகளான வெண்பாவுக்கு திருமணம்  நடத்தி வைக்க நினைக்கிறார். ஆனால் அவருக்கு ஏற்கனவே கபாலி விஸ்வந்துடன் திருமணப் பேச்சு வார்த்தை நடந்திருக்கிறது.  ஆகவே அவரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அடம்பிடிக்கிறார் வெண்பா.

இளைய மகள் பிரியதர்ஷினி மருத்துப்  படிப்புக்காக  பயிற்சி நிலையம் சென்ற நிலையில் அங்கிருந்து அவர் காணாமல் போகிறார்.  செல்வாக்கு மிக்க அரசியல்வாதியான நமோ நாராயணனுக்கு சொந்தமான அந்த பயிற்சி நிலையத்தில்  தந்தையான பாஸ்கர். அவருக்கு சரியான பதில் கிடைக்காது போக ஒரு வழக்கறிஞரை நாடி காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர்.

அதற்கு விஷ்வந்தும் உதவி செய்கிறார். ஆனாலும் எந்த விதமான முன்னேற்றமும்  இல்லை.  முதல்  காட்சியில் எம்.எஸ்.பாஸ்கர் கட்டி  வைத்திருக்கும் அந்த இருவரும் பாஸ்கரின் அடிக்கு பயந்து சில கொடூரமான உண்மைகளைச் சொல்ல ஆரம்பிக்கிறார்கள்.

இரண்டு பேரும் இரு வேறு விதமாக நடந்ததைச் சொல்கின்றனர். அது தான் படத்தின் மீதி கதை.

எம்.எஸ்.பாஸ்கர் இதில் இரண்டு விதமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். இரண்டு பெண்களைப் பெற்ற தந்தையாக அதுவும் நோயாளியாக காட்டுகின்றனர்.

அடுத்து வில்லன்களைப் பிடித்து ஒட்டி வைத்து உதைக்கும் நிலையில் அதிரடி ஆக்சன் ஹீரோவாகவும் தோன்றுகிறார்.

இந்த இரண்டு  காட்சிகளும்  லாஜிக்கிற்கு மீறியதாக இருந்தாலும் அதை நியாயப்படுத்தி இருக்கும் முயற்சியில் இயக்குனர் வெற்றி பெற்று இருக்கிறார்.

ஆரம்பத்தில் சில காட்சிகள் பின் பாதியில் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் விஷ்வந்த் அவருக்கான கதையில்  கட்சிதமாக நடித்திருக்கிறார்.

வில்லன்களாக வரும் ஆகாஷ் பிரேம்குமாரும், கார்த்திக் சந்திரசேகரும் படங்களில் அதிகமாக அறியாதவர்களாக இருந்தாலும் போதிலும் இந்தப் படத்தில் நன்கு அறிமுகமான நடிகர்களைப் போல் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றார்.

நமோ நாராயணன் அரசியல்வாதி கதாபாத்திரம் கட்சிதமாக பொருந்துகிறது.மனுஷன் என்னமா.. நடிச்சிருக்கார் என பாராட்டும் அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

முதல் பாகம் பத்தோடு பதினொன்று என்ற படம் போல் தோன்றினாலும்  இரண்டாம் பாகத்தில் எதிர்பாராமல் ஏற்படும் திருப்பங்கள், நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. அதில் கிளைமாக்சில் யாரும் எதிர்பாராத ஒரு திருப்பத்தை வைத்திருக்கிறார் இயக்குனர்.

இந்த படத்தில் இறுதியாக உணர்வுகளை பிரதிபலிக்கும் ஒரு பாடல் மட்டும் வருகிறது இசையமைப்பாளரும், ஒளிப்பதிவாளரும் இந்த த்ரில்லர் ஜானருக்கு அடிப்படை நியாயம் சேர்த்து இருக்கிறார்கள்.

வித்தியாசமான கதைக்களம் தந்தையாக,அதிரடி ஆக்‌ஷன் என தனது நடிப்பு திறனை வெளிப்படுத்தியிருக்கிறார் எம்.எஸ். பாஸ்கர். அக்கரன் நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் இந்த திரைப்படம் பாராட்டப்படும்.

 

யாழினி சோமு