ரூம்பாய்: த்ரில்லர் & சென்டிமெண்ட் கலவை!

ரூம்பாய்: த்ரில்லர் & சென்டிமெண்ட் கலவை!

திரைப்படக் கல்லூரி மாணவர் ஜெகன் ராயன், தமிழ் சினிமாவுக்கு ‘ரூம்பாய்’ மூலம் ஒரு நச் எண்ட்ரி கொடுத்திருக்கிறார்! ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிப்பில், த்ரில்லராகத் தொடங்கி ஃபேமிலி சென்டிமெண்ட்டில் பின்னி எடுக்கும் இந்தத் திரைப்படம் ஒரு பக்கா டபுள் ஜானர் ட்ரீட்.

ஏலகிரி மலையில் இருக்கும் ஒரு ஸ்டார் ஹோட்டலில் ஹீரோ ரூம் பாயாக வேலை செய்கிறார். எல்லாம் ஜாலியாகப் போய்க்கொண்டிருக்கும்போது, ஹோட்டல் மேனேஜர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். அதே சமயம், சிறுவர் சீர்திருத்தப் பள்ளி கண்காணிப்பாளர் ஒருவரும் காணாமல் போகிறார். இந்த இரண்டு விபரீதங்களுக்கும் ஹீரோவுக்கும் என்ன லிங்க்? இதுதான் படத்தின் விறுவிறுப்பான ஒன்லைன்!

அறிமுக நாயகன் சி.நிகில், பாசம், கோபம், காமெடி என சகல ஏரியாக்களிலும் புகுந்து விளையாட முயற்சி செய்திருக்கிறார். ‘அரண்மனை 4’ புகழ் ஹர்ஷா கொஞ்ச நேரமே வந்தாலும், அந்த லிப்ட் காட்சியின் மூலமே ரசிகர்களின் இதயத்தில் காதல் முத்திரை பதிக்கிறார்.

பிர்லா போஸ், கவிதா விஜயன், சாதனா என அனுபவ நடிகர்கள் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

இமான் அண்ணாச்சி சில காட்சிகளே வந்தாலும் கலகலப்பு ஊட்டுகிறார்; காத்து கருப்பு சிரிக்க வைக்க மல்லுக்கட்டுகிறார்.

மும்பை மாடல் நிதி மரோலியின் அந்த ஒரு பாடல் படம் பார்ப்பவர்களுக்கு செம கவர்ச்சி விருந்து!

வேலன் சகாதேவன் இசையில் பாடல்கள் ‘ஓகே’ ரகம் என்றாலும், பின்னணி இசை த்ரில்லர் மற்றும் சென்டிமெண்ட் காட்சிகளுக்கு செம உயிர் கொடுத்திருக்கிறது.

சி.பாரதி ராஜனின் ஒளிப்பதிவு, ஏலகிரி மலைகளின் அழகை கண்முன் நிறுத்துகிறது. அதே நேரம், இருள் அறைகளின் மர்மத்தையும் கேமராவில் கச்சிதமாகப் பிடித்து த்ரில்லர் உணர்வை ஏற்றி பயமுறுத்துகிறது.

இன்னும் கொஞ்சம் கட்களை அதிகரித்து இருக்கலாம், எடிட்டர் மீனாட்சி சுந்தர்.

முதல் படத்திலேயே யூகிக்க முடியாத திரைக்கதையை இயக்கி, இயக்குநர் ஜெகன் ராயன் ஸ்கோர் செய்திருக்கிறார். அதே நேரம், வந்த காட்சிகள், வந்த வசனங்களே மீண்டும் மீண்டும் வருவது சோர்வடைய செய்கிறது.

ஆனாலும் த்ரில்லரை ரசிக்கும் இளசுகளுக்கும், சென்டிமெண்ட்டை எதிர்பார்க்கும் குடும்பங்களுக்கும் இந்த ‘ரூம்பாய்’ நிச்சயம் ஒரு நல்ல அனுபவம்!

Related Posts