ஐந்தாம் வேதம்: விமர்சனம்: திகில், அமானுஷ்யம், அதிரடி!

ஐந்தாம் வேதம்: விமர்சனம்: திகில், அமானுஷ்யம், அதிரடி!

மர்மதேசம், விடாது கருப்பு, சிதம்பர ரகசியம் உள்ளிட்ட தொடர்களை இயக்கி, தமிழ்நாட்டு மக்களை மிரட்டிய நாகாவின் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது ஐந்தாம் வேதம் வெப் தொடர்.

தனது தாயின் இறுதிச் சடங்குகளைச் செய்ய, புனித நகரான காசிக்கு பயணமாகிறாள் அனு. அப்போது எதிர்பாராமல் சந்திக்கும் சாமியார் ஒருவர், மரப்பெட்டி ஒன்றை அனுவிடம் தருகிறார். அதை தமிழ்நாட்டில் உள்ள ஒரு சாமியாரிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்கிறார். அனுவின் கையில் கொடுத்ததும் அவர் இறந்து விடுகிறார்.

வேறு வழியின்றி வேண்டா வெறுப்பாக அம்மரப்பட்டியை எடுத்துக் கொண்டு தமிழகத்திற்கு வருகிறார் அனு.

அங்கிருந்து பாண்டிச்சேரி செல்ல திட்டமிடுகிறார். ஆனால், அதற்கு பின்னால் நடக்கும் திடீர் சம்பவங்கள் அனுவை அய்யங்கார்புரத்திற்கு வர வைத்து விடுகிறது.

அங்கிருக்கும் பழமை வாய்ந்த கோவிலுக்குச் சென்று, அங்குள்ள பூசாரியிடம் அம்மரப்பட்டியை கொடுக்கிறார் அனு. அம்மரப்பட்டியைப் பற்றி ஏற்கனவே அறிந்திருந்த அந்த பூசாரி, அதனை வாங்க மறுத்துவிடுகிறார்.

அம்மரப்பெட்டியை அந்த கோவிலில் விட்டுவிட்டு அந்த ஊரை விட்டு வெளியேற நினைக்கிறார் அனு. ஆனால், அக்கிராமத்தை விட்டு அவரால் வெளியேற முடியவில்லை.

அதுமட்டுமல்லாமல், அம்மரப்பெட்டியை அடைய பலரும் முயற்சிக்கின்றனர். அனுவின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது.

அம்மரப்பெட்டியின் மர்மம் என்ன? அப்பெட்டியை அடைய துடிப்பவர்கள் யார்? தனக்கு ஏற்பட்ட உயிர் ஆபத்தில் இருந்து அனு தப்பித்தாரா.. என்பதுதான் மீதிக்கதை.

அனுவாக சாய் தன்ஷிகா நடித்து இருக்கிறார்.

தாயின் இறுதிக் கடமைக்காக காசி செல்வது, திடீரென ஒரு பெட்டியை முன் பின் தெரியாதவர் அளிக்கும்போது குழம்புவது, அடுத்தடுத்து நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களால் திகிலடைவது என சிறப்பாக நடித்து உள்ளார்.

மற்ற கதாபாத்திரங்களும் தங்களது கேரக்டர்களை இயல்பாக நடித்துவிட்டுச் சென்றிருக்கின்றனர்.அதிலும் குறிப்பாக, ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களாக நடித்த நால்வரும் கண்களாலே தனது மிரட்டலை வெளிப்படுத்தியிருந்தனர்.

சாமியாராக தோன்றிய நடன இயக்குனர் ராம்ஜியின் நடிப்பும் அருமை.

சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், ஒய் ஜீ மகேந்திரன், கிரிஷா குருப், ராம்ஜி, தேவதர்ஷினி, மேத்யூ வர்கீஸ், பொன்வண்ணன் உள்ளிட்டோரும் சிறப்பான நடிப்பை அளித்து உள்ளனர்.

ஸ்ரீநிவாசன் தேவராஜன் ஒளிப்பதிவு மிரட்டல். காசி காட்சிகளையும், கிராபிக்ஸ் காட்சிகளையும் சிறப்பாக அமைத்து இருக்கிறார்.

ரேவா இசை, படத்தின் ஒரு கதாபாத்திரமாகவே வந்து திகிலூட்டுகிறது.புராண விசயங்களை அடிப்படையாக வைத்து ஏ.ஐ. உள்ளிட்ட மார்டன் டெக்னாலஜியை கலந்து அதிரடியான தொடரை அளித்து இருக்கிறார் நாகா.

ஒவ்வொரு காட்சியையும் வேகமாக நகர்த்திச் சென்று, நம்மை சீட்டின் நுனிக்கே அழைத்துச் சென்றிருக்கிறார். அதே போல ஒவ்வொரு எபிசோட் இறுதியிலும் கணிக்க இயலாத அளவுக்கு ட்விஸ்ட் வைத்து இருக்கிறார்.

மொத்தத்தில் ஐந்தாம் வேதம்… திகிலுடன் பார்த்து ரசிக்கலாம்.

ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் நாளை (அக்.25) ஸ்ட்ரீமிங் ஆகிறது ஐந்தாம் வேதம்.