“நல்ல மனசுள்ள ஹீரோவா இருந்தா போதும்!”: ‘வடம்’ விழாவில் விமல் உருக்கம்:

“நல்ல மனசுள்ள ஹீரோவா இருந்தா போதும்!”: ‘வடம்’ விழாவில் விமல் உருக்கம்:

கிராமிய மணம் மாறாத ‘வடமஞ்சு விரட்டு’ விளையாட்டை மையமாக வைத்து, விமல் மற்றும் நட்டி நட்ராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வடம்’. மாசாணி பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் கேந்திரன். வி இயக்கத்தில், டி. இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உற்சாகமாக நடைபெற்றது. வரும் மார்ச் 6-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இப்படத்தின் விழாவில் படக்குழுவினர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்கள்:


தயாரிப்பாளர் ஆர். ராஜசேகர்: “மாடு எங்களுக்கு நந்தீஸ்வரன்!”

“நான் சினிமாவுக்குப் புதியவன். இயக்குநர் என்னிடம் கதையைச் சொல்வதற்கு முன்பே மாடுகளைப் பற்றிப் பேசினார். அது எனக்கு மிகவும் பிடித்துப்போனது. 18 ஆண்டுகள் நமக்காகவே வாழ்ந்து, பால் கொடுத்து உதவும் மாடுகளை நாங்கள் தெய்வமாக, நந்தீஸ்வரராகவே பார்க்கிறோம். அப்படிப்பட்ட மாட்டைப் பற்றிப் படம் எடுப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன். இயக்குநர் சொன்னதை அப்படியே திரையில் கொண்டு வந்துவிட்டார்.”

நடிகர் முனீஸ்காந்த்: “நட்டி கொடுத்த எனர்ஜி சூப்பர்!”

“இந்த படத்தில் நட்டியுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். பொதுவாக ஒரு காட்சி முடிந்த பிறகுதான் பாராட்டுவார்கள், ஆனால் நட்டி சார் நடித்துக்கொண்டிருக்கும் போதே ‘நல்லா பண்றீங்க, இன்னும் மெருகேத்துங்க’ என உற்சாகப்படுத்தினார். ‘பாண்டி முனி’ பாடல் செம வைப்! நான் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்ட ஒரு முக்கியமான கதாபாத்திரம் இதில் எனக்குக் கிடைத்துள்ளது.”

இயக்குநர் கேந்திரன். வி: “வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் கிடைத்த நாயகி!”

“கதையைச் சொன்ன உடனே இமான் சார் ‘நான் பண்றேன்’ எனச் சொன்னபோதே படம் ஹிட் எனத் தெரிந்துவிட்டது. விமல், நட்டி இருவருமே முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். நாயகி சனஸ்கா ஸ்ரீயை ஒரு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் புகைப்படத்தைப் பார்த்துதான் தேர்வு செய்தேன். குறிப்பாக ‘பாண்டி முனி’ என்ற காளை மாடு, ‘ஆக்ஷன்’ சொன்னால் அப்படியே நடிக்கும். அந்த மாட்டின் நடிப்பு ரசிகர்களை வியக்க வைக்கும்.”

நாயகி சனஸ்கா ஸ்ரீ: “விமல் சார் செம கலாய்!”

“பெரிய நடிகர்களுடன் நடிக்கும்போது பயமாக இருந்தது, ஆனால் விமல் சார் என்னை ஓயாமல் கலாய்த்து அந்தப் பயத்தைப் போக்கிவிட்டார். இமான் சார் இசையில் எனக்கொரு ‘சோலோ சாங்’இருக்கிறது. சின்ன வயதில் அவர் பாடல்களைக் கேட்டு வளர்ந்த எனக்கு, இது ஒரு கனவு நனவான தருணம். படத்தின் இடைவேளைச் சண்டைக் காட்சியில் நானும் மாஸாக நடித்திருக்கிறேன்.”

இசையமைப்பாளர் டி. இமான்: “பெண்களுக்கான பாடல் இப்போது அரிது!”

“இன்றைய சினிமா சூழலில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் பாடல்கள் குறைந்துவிட்டன. ஆனால் இயக்குநர் கேட்டுக்கொண்டதால், இந்த படத்தில் நாயகிக்கு ஒரு அழகான தனிப்பாடல் கொடுத்துள்ளோம். தயாரிப்பாளர் ராஜசேகர் ஒரு ஆன்மீகவாதி, உழைப்பாளிகளுக்குத் தாராளமாகச் செலவு செய்பவர். விமல் ஒரு இயல்பான மனிதர். கிராமிய விளையாட்டை மையப்படுத்திய இந்தப் படம் பெரிய வெற்றி பெறும்.”

நடிகர் நட்டி நட்ராஜ்: “கலைத்துப் போட்ட சீட்டுக்கட்டு போன்ற திரைக்கதை!”

“இந்தப் படத்தின் திரைக்கதை மிகவும் சிக்கலானது, கலைத்துப் போட்ட சீட்டுக்கட்டு போல இருக்கும். அதை இயக்குநர் நேர்த்தியாகக் கையாண்டுள்ளார். ‘ஏரும் தெய்வம், எருதும் தெய்வம்’ என்ற கருத்தை இந்தப் படம் பேசுகிறது. விமலுடன் நான் முதன்முதலில் இணைந்து நடித்துள்ளேன். படத்தில் நீதிமன்ற வளாகத்தில் நடக்கும் சண்டைக் காட்சியில் விமல் மிரட்டியிருக்கிறார்.”

நடிகர் விமல்: “தயாரிப்பாளரின் நெகிழ்ச்சியான மனிதாபிமானம்!”

“ரோபோ சங்கர் மாமா இறந்தபோது நான் படப்பிடிப்பில் இருந்தேன். 15 லட்சம் ரூபாய் செலவில் 1000 துணை நடிகர்களுடன் படப்பிடிப்பு நடந்ததால் என்னால் சென்னைக்கு வர முடியவில்லை. ஆனால், அடுத்த நாள் தயாரிப்பாளர் ராஜசேகர் அங்கேயே ரோபோ சங்கருக்கு அஞ்சலி செலுத்தி, கிராம மக்களுக்கு 500 புடவைகளையும், 2000 மரக்கன்றுகளையும் வழங்கினார். அந்த மனசுதான் பெரியது. இந்தப் படம் ஒரு கமர்ஷியல் பேக்கேஜ், கிளைமாக்ஸில் இயக்குநர் எல்லாவற்றையும் கச்சிதமாக முடித்திருப்பார்.”


மார்ச் 6-ம் தேதி முதல் திரையரங்குகளில் ‘வடம்’ படத்தின் ஆட்டத்தைக் காணத் தயாராகுங்கள்!

Related Posts