‘மருதிருவர் – A Dance Musical’: மேடையில் பாயும் வேங்கைப்புலிகள்!
கலை உலகில் ஒரு புதிய சரித்திரம் படைக்கத் தயாராகிவிட்டார் கலைமாமணி மதுரை R. முரளிதரன்! வெள்ளையர்களை 16 ஆண்டுகள் கதிகலங்க வைத்த சிங்கத்தமிழர்கள் மருது சகோதரர்களின் வீர வரலாற்றை, ‘மருதிருவர் – A Dance Musical’ என்ற பெயரில் ஒரு பிரம்மாண்ட இசை-நடன நாடகமாக மேடையேற்றுகிறார். வரும் பிப்ரவரி 7, 2026 அன்று சென்னை சர் முத்தா வெங்கட சுப்பா ராவ் கச்சேரி அரங்கில் இந்த கலைத் திருவிழா அரங்கேறுகிறது. இதற்கான அறிமுக விழா திரைத்துறையினரும் கலைத்துறையினரும் சூழ அதிரடியாக நடைபெற்றது.
இயக்குநர் K. பாக்யராஜ் இந்த விழாவில் கலந்துகொண்டு, “முரளிதரனின் சாதனைகளை கேட்டு பிரமித்துப் போனேன்! சினிமாவில் டூயல் ரோல் எடுப்பதே கஷ்டம், நான் ‘கைதியின் டைரி’ எடுக்கும்போது மாஸ்க் ஷாட் வைக்கத் தெரியாமல் தவித்திருக்கிறேன். ஆனால், இவர் ஹாலோகிராம் தொழில்நுட்பத்தில் மேடையிலேயே டூயல் ரோல் செய்திருக்கிறார் என்பது ஆச்சரியம். வசனம், இசை, சண்டை என எல்லாவற்றையும் அவரே கவனிப்பது பெரிய விஷயம், இந்த மேஜிக்கை பார்க்க நானும் ஆவலாக இருக்கிறேன்” என உற்சாகமாகப் பேசினார்.
“உலக வரலாற்றிலேயே முதல் முறையாக மருதிருவர் கதையை இயல், இசை, நடன வடிவில் கொண்டு வருகிறேன்” எனப் பெருமிதத்துடன் தொடங்கிய முரளிதரன், “இதில் 70 கலைஞர்களுடன் குதிரை, மாடுகள் கூட மேடையில் வலம் வரப்போகின்றன. கொரில்லா போர் முறையால் ஆங்கிலேயர்களை நடுங்க வைத்த அந்த வீரர்களின் மறைக்கப்பட்ட தியாகத்தை இந்தத் தலைமுறைக்குச் சொல்லப்போகிறோம்” என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய விஜயா தாயன்பன், முரளிதரனின் அசாத்திய உழைப்பையும் தொழில்நுட்ப அறிவையும் பாராட்டியதுடன், அறிஞர் அண்ணாவின் நினைவு நாளில் இந்த அறிவிப்பு வருவது பொருத்தமானது; தெற்கின் வீர வரலாறு இனி உலகறியும் என நெகிழ்ந்தார்.
பத்திரிகையாளர் ராம்ஜி பேசுகையில், இது வெறும் மேடை நிகழ்ச்சி அல்ல, ஒரு குடும்பத்தின் ஒட்டுமொத்த உழைப்பும், சமூகப் பொறுப்பும் கலந்த கலைப்படைப்பு என வாழ்த்தினார். கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில் நடைபெறவுள்ள இந்த பிரம்மாண்டத்தில், மருது சகோதரர்களாக முரளிதரன் மற்றும் சிவக்குமார் சிங்கம் என கர்ஜிக்க உள்ளனர். வீர வேலு நாச்சியாராக முரளிதரனின் மகள் காவ்யா களம் இறங்குகிறார். மொசார்ட் இசைத் தாக்கத்துடன், நமது பாரம்பரிய கலைகள் கைகோர்க்கும் இந்த ‘மருதிருவர் – A Dance Musical’ மேடை நாடகம், சென்னை வாசிகளுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை!

