எம்.எஸ்.: தெய்வமல்ல… பரிதாபத்துக்குரிய மனுசி!

எம்.எஸ்.: தெய்வமல்ல… பரிதாபத்துக்குரிய மனுசி!

கர்நாடக இசை உலகில் ‘இசைக்கரசி’, ‘பாரத ரத்னா’ எனப் பல்வேறு விருதுகளாலும் பட்டங்களாலும் புனிதப்படுத்தப்பட்ட, மறைந்த எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகத் தயாராகிறது. அதில் அவரது “கதாபாத்திரத்தில்” நடிப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

ஆம்… நிஜ வாழ்க்கையிலும் காலம் முழுதும் நடித்தே தீர வேண்டிய சூழலில் இருந்த எம்.எஸ்-ன் கதாபாத்திரத்தில் தான் திரையில் நடிக்கிறார் ராஷ்மிகா.அக்காலத்தில் நிலவிய தேவதாசி முறையைப் பின்பற்றிய குடும்பத்தில் பிறந்தவர் சுப்புலட்சுமி. சிறு வயதிலேயே இயல்பாக அமைந்த அற்புதக் குரல் வளம்… அடங்காத கலை ஆர்வம்.

ஆனால், அவரது தாயாரோ தங்கள் குல வழக்கப்படியான வாழ்க்கைக்குள் சுப்புலட்சுமியை இழுத்தார். சுப்புலட்சுமிக்கோ அதில் சிறிதும் விருப்பமில்லை.

ஏற்கெனவே அறிமுகமாகி இருந்த சென்னை சதாசிவத்தை நம்பி ஊரைவிட்டு வந்தார்.

பாட வந்தவருக்கு அடைக்கலமும் பாதுகாப்பும் கொடுத்ததோடு, ‘சேவாசதனம்’ படத்தில் நடிக்கவும் வைத்தார் சதாசிவம். அடுத்து எம்.எஸ்., ‘சகுந்தலை’ படத்தில் நடித்தார். அதன் நாயகனான முன்னணி பாடகர் ஜி.என். பாலசுப்ரமணியம் மீது அவருக்குத் தீராக் காதல் உருவானது.

அவருக்கு எம்.எஸ். எழுதிய காதல் கடிதங்கள் படிப்போரின் நெஞ்சை உருக வைப்பவை.

“அன்பே, ஆருயிரே… என் ஆன்மாவை எடுத்துக்கொண்டவரே, உங்கள் புகைப்படம் என்னிடம் பேசுமா, அதை கட்டியணைத்துப் படுத்துக்கொள்கிறேன்” என எம்.எஸ். உருகி உருகி எழுதியக் காதல் கடிதங்கள் பற்றிப் பின்னாளில் எழுத்தாளர் டி.ஜே.எஸ். ஜார்ஜ் தனது ‘எம்.எஸ்: எ லைஃப் இன் மியூசிக்’ புத்தகத்தில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஜி.என். பாலசுப்ரமணியம் மீது எம்.எஸ். கொண்ட தீராக் காதல் சதாசிவத்திற்குப் பிடிக்கவில்லை. இந்த நேரத்தில், சதாசிவத்தின் மனைவி திடீரெனப் பூச்சி கடித்து மரணமடைந்தார். உடனே சுப்புலட்சுமியைத் திருமணம் செய்து கொண்டார் சதாசிவம்.

தேவதாசி குடும்பத்தில் பிறந்த சுப்புலட்சுமி, பிராமணப் பெண்ணாக மாற்றி அமைக்கப்பட்டார். விதவிதமாக ஆடை அணிய விருப்பமிருந்தும், அவர் மடிசாருக்குப் பழக்கப்படுத்தப்பட்டார்.

அவர் எந்த மேடையில், யாருக்காகப் பாட வேண்டும், என்ன பாட வேண்டும், எந்த வரிசையில் பாட வேண்டும் என்பது முதற்கொண்டு அனைத்தையும் சதாசிவமே தீர்மானித்தார்.

எம்.எஸ்-ஸும் தன் மீது திணிக்கப்பட்ட சமஸ்கிருதமயமாக்கல், பிராமணமயமாக்கல் ஆகியவற்றை வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டார். அவர் அகில இந்திய அளவில் பிரபலமாவதற்கும் அதுவே அடிப்படைச் காரணமாகவும் அமைந்தது.

வெளியே மிக அமைதியான “தெய்வீகப்” பெண்மணியாகச் சதாசிவத்தால் பிம்பம் கட்டமைக்கப்பட்டது. ஆனால், தனிப்பட்ட முறையில் அவர் மிக ஆபாசமாகச் சதாசிவத்தால் ஏசப்பட்டார். கல்கி வார இதழில் பணிபுரிந்து, பின்னர் அங்கிருந்து விலகிய எழுத்தாளர் நா.பார்த்தசாரதி, ‘தாமரை’ இதழில் எழுதிய கட்டுரைகளில் இந்தச் சோகத்தைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து ‘அறம்’ இணைய இதழில், பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் எழுதியுள்ளார்.

தனக்காகப் பத்திரிகை தொடங்க வேண்டும் என்பதற்காகவே ‘சாவித்திரி’ படத்தில் நாரதர் வேடத்தில் எம்.எஸ்-ஐ நடிக்க வைத்தார் சதாசிவம். எம்.எஸ். சிறகடித்து உழைத்துச் சம்பாதித்த பணமெல்லாம் கோயில்களுக்கும் மடங்களுக்கும் மடைமாற்றப்பட்டன. பிராமணர்களே அதனால் பெரும்பயனடைந்தார்கள் என்பதையும் சாவித்திரி கண்ணன் சுட்டிக்காட்டுகிறார்.

டி.ஜே.எஸ். ஜார்ஜ் தனது நூலிலும், டி.எம். கிருஷ்ணா ‘காரவான்’  இதழிலும் சுட்டிக்காட்டுவது போல, கர்நாடக இசை எவ்வாறு ‘தூய்மைப்படுத்தப்பட்டு’ பிராமணமயமாக்கப்பட்டது  என்பதற்கும், அந்த சமூக மாற்றத்திற்குள் எம்.எஸ். எவ்வாறு பொருந்திப்போகக் கட்டாயப்படுத்தப்பட்டார் என்பதற்கும் அவரது வாழ்க்கையே சாட்சி.

சுனில் கிலானி எழுதிய ‘Incarnations: India in 50 Lives’ புத்தகத்தில், எம்.எஸ். சுப்புலட்சுமி குறித்துப் பல உண்மைகளைப் பதிவு செய்துள்ளார். சாதிய-ஆணாதிக்கத் தடைகளைத் தகர்த்து, கர்நாடக இசையை எளியோரிடமும் கொண்டு சேர்த்து, ஐ.நா சபை வரை சர்வதேச அரங்கில் முத்திரை பதித்தவர் எம்.எஸ். அதே நேரத்தில், 1937-இல் 21 வயது எம்.எஸ். சுப்புலட்சுமி ஸ்டுடியோவில் சிகரெட்டுடன் ஸ்டைலாக போஸ் கொடுக்கும் புகைப்படத்தைக் குறிப்பிட்டு, அவரை ஒரு ‘தெய்வீகச் சிலையாக’ மட்டும் பார்க்காமல், அனைத்து உணர்வுகளும் கொண்ட ஒரு ‘முழுமையான மனிதராக’ அதில் சித்தரித்துள்ளார்.

எம்.எஸ்-ஸைப் பேட்டி எடுத்த எழுத்தாளர் வாஸந்தி, “எதற்குத் திருமணம் செய்து கொண்டீர்கள், மகிழ்ச்சி தரும் என்பதாலா?” என்று கேட்ட கேள்விக்கு, “பாதுகாப்பு தரும் என்பதால் தான்” என்று எம்.எஸ். பதிலளித்தது அவரது வாழ்க்கையின் பெரும் சோகம்”என தனது வலைப்பக்கத்தில் குறிப்பிடுகிறார் பூ.கொ.சரவணன்.எம்.எஸ். வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத் தொடக்க விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசும்போது, “பாடலும் ஆடலும் நிறைந்த அவரது வாழ்க்கை ஒரு திரைக்கதை போல அமைந்துவிட்டது. அதை இனி மெருகேற்றினால் மட்டும் போதும். ஆனால், அவர்களைப் பூஜைக்குரியவர்கள் என்பதை விட பிரியத்திற்குரியவர்கள் என்பதைக் காட்டுங்கள். அவர்களைக் கும்பிடப் பலர் இருக்கிறார்கள்; அவர்களின் அன்பைப் பார்த்து கண்ணீர் வடிக்கும் அன்பே இங்கு தேவை” என்று குறிப்பிடுகிறார்.அவர் மறைமுகமாகச் சொன்னதன் ஆழமான அர்த்தம், எம்.எஸ்-ன் வாழ்க்கையை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே புரியும். ஆனால், எம்.எஸ்-ஸை மீண்டும் ஒரு தெய்வமாக்கும் அடுத்தகட்ட முயற்சியாகவே இந்தப் படமும் இருக்கப்போகிறதோ என்ற அச்சமே எஞ்சுகிறது.

  • டி.வி.சோமு