“குடும்ப செலவு போக, இந்தப் படத்தைப் பாருங்க!” ஹாய் விழாவில் நெகிழ வைத்த கவின்!

“குடும்ப செலவு போக, இந்தப் படத்தைப் பாருங்க!” ஹாய் விழாவில் நெகிழ வைத்த கவின்!

 வின் – நயன்தாரா -காம்பினேஷனில் ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வந்த ‘ஹாய்’ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் பிரம்மாண்ட வெற்றியைக் கொண்டாடும் வகையில், படக்குழுவினர் ஊடக நண்பர்களைச் சந்தித்து நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.

தயாரிப்பாளர் லலித்குமார்: “நல்ல கதையை மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்தப் படத்தைத் தொடங்கினோம். பிரபு சாரின் அன்பையும் உணவையும் மறக்க முடியாது. இயக்குநர் விஷ்ணுவின் தனித்துவமான கதை சொல்லும் விதமே இந்த வெற்றிக்குக் காரணம்.”

ஒளிப்பதிவாளர் ராஜேஷ் சுக்லா: “என் மீது அன்பும் அக்கறையும் காட்டிய படக்குழுவிற்கு நன்றி. கதையைக் கேட்டபோதே விஷ்ணு ஒரு சிறப்பான படத்தைக் கொடுப்பார் என்று நம்பினேன், அது நிஜமாகியுள்ளது.”

இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின்: “கவினும் நானும் பள்ளித் தோழர்கள். ‘நீ நடிகனாவாய், நான் இசையமைப்பாளராவேன்’ எனப் பேசிய கனவு இன்று நனவாகியிருக்கிறது. கவின் என் மீது வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றியிருக்கிறேன்.”

நடிகை அம்ருதா சீனிவாசன்: “மூத்த கலைஞர்கள் முன்னிலையில் நிற்பதே பெருமை. இசை, படத்தொகுப்பு, இயக்கம் எனக் கலை நேர்த்தியோடு செதுக்கப்பட்ட அழகான ஃபீல்-குட் திரைப்படம் இது.”

நடிகர் குரேஷி: “தொகுப்பாளராக இருந்த என்னை நடிகனாக ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. பிரபு சார், ராதிகா மேடத்துடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். பிரபு சாரின் இயல்பான அன்பும், ராதிகா மேடத்தின் கலகலப்பும் என்னை பிரமிக்க வைத்தன.”

நடிகை காவ்யா: “கல்லூரி காலத்தில் ராதிகா மேடத்தைப் பார்த்து வியந்த எனக்கு, அவருடனேயே திரையைப் பகிர்ந்தது கனவு நனவான தருணம். ‘மைதிலி’ கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் தரும் அன்பிற்கு நன்றி.”

இயக்குநர் விஷ்ணு எடவன்: “இயக்குநராக நிற்கும் இந்த முதல் மேடை உணர்வுப்பூர்வமானது. பள்ளி நண்பன் ஜென் மார்ட்டின் இசையமைத்தது மகிழ்ச்சி. மூத்த கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் என் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்கள் விக்னேஷ் சிவன், நயன்தாரா, லலித்குமார் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி.”

நடிகை ராதிகா சரத்குமார்: “இன்றைய சூழலில் ஒரு படம் வெற்றி பெறுவது சவால். பல தடைகளைக் கடந்து ஜெயித்திருக்கும் படக்குழுவிற்கு வாழ்த்துகள். பாக்யராஜ், பிரபு சாரின் உழைப்பும், கவினின் திரைப் பயணமும் சிறப்பு. நயன்தாரா மனதளவிலும் உடல்ரீதியாகவும் மிகவும் வலிமையானவர்.”

நடிகை சுஹாசினி: “ஒரு காட்சியில் நடித்திருந்தாலும் மகிழ்ச்சி. கடந்த சில நாட்களாகவே ‘ஹாய்’ பற்றிய நேர்மறை பேச்சுகளைக் கேட்க முடிகிறது. இந்த வெற்றியை முழுமையாகக் கொண்டாடுங்கள்.”

நடிகர் பிரபு: “இயக்குநர் விஷ்ணு பல அழுத்தங்களைக் கடந்து இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறார். பாக்யராஜ் சாருடன் நடித்த தருணங்கள் மறக்க முடியாதவை. கவினிடம் சிறந்த எதிர்காலம் இருக்கிறது.”

நடிகர் கவின் விரிவாகப் பேசியதாவது: “மாதத்தின் கடைசியில் வெளியான நமது ‘ஹாய்’ படத்திற்கு நீங்கள் கொடுத்த ஆதரவு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது. பல நல்ல படங்கள் வெளிவந்த சூழலில் ஒரு சிறிய பதற்றம் இருந்தது. ஆனால் திரையரங்குகளில் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடுவதைப் பார்க்கும்போது நிம்மதியாக இருக்கிறது.

புதிய மாதம் தொடங்கியுள்ளதால், குடும்பச் செலவுகளை முடித்துவிட்டு, இந்த வார இறுதியில் நீங்கள் ஒதுக்கும் நேரத்திற்கும் பணத்திற்கும் ‘ஹாய்’ திரைப்படம் மனநிறைவைத் தரும். திரையரங்குகளில் மக்கள் சிரித்து, மகிழ்ந்து, உணர்ச்சிவசப்படுவதைப் பார்க்கும்போது நாங்கள் நினைத்த நோக்கம் நிறைவேறிவிட்டது.

இயக்குநர் விஷ்ணுவின் வாழ்க்கைப் பயணமும் இந்தப் படத்தின் பயணமும் ஒன்றே. படப்பிடிப்பு நடந்தபோதே அவரது திருமண ஏற்பாடுகளும் நடந்தன. இலக்கை அடைவதை விட, அந்தப் பயணத்தில் நம்முடன் வரும் மனிதர்கள்தான் உண்மை பலம். கதை கேட்டபோதே பிரபு சார், ராதிகா மேடம், சுகாசினி மேடம், பாக்யராஜ் சார் ஆகியோரைத் தவிர வேறு யாரையும் கற்பனை செய்ய முடியவில்லை. அவர்கள் அனைவரும் இணைந்து இந்த வெற்றியைச் சாத்தியமாக்கியுள்ளனர்!”

விக்னேஷ் சிவன், நயன்தாரா மற்றும் லலித்குமார் தயாரிப்பில், குடும்பங்கள் கொண்டாடும் முழுமையான என்டர்டெய்னராக ‘ஹாய்’ திரையரங்குகளில் வெற்றிகரமாக உலா வருகிறது!

Related Posts