‘பெத்லகேம் குடும்ப யூனிட்’: அதிரடி காதல் கலாட்டா திரைப்படம்.. செப். 4 ரிலீஸ்!
பாவனா ஸ்டுடியோஸ் தயாரிப்பில், கிரீஷ் ஏ. டி. இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தின் தமிழ் பதிப்பு செப்டம்பர் மாதம் திரைக்கு வருகிறது. இதை முன்னிட்டு சென்னை நகரில் பத்திரிகையாளர் சந்திப்பு மிகக் கோலாகலமாக நடைபெற்றது. மலையாளத் திரையுலகில் வெளியாகி வசூலையும் மக்களின் அன்பையும் அள்ளிய இந்த ரொமான்டிக் காமெடி திரைப்படம், இப்போது தமிழக ரசிகர்களை மகிழ்விக்கத் தயாராகியுள்ளது.
நிகழ்வில் பங்கேற்ற தயாரிப்பாளர் உன்னி மாயா பிரசாத், மலையாள ரசிகர்களைப் போலவே தமிழ் மக்களும் இந்தத் திரைப்படத்தைத் திரையரங்குகளில் கண்டு களித்து ஆதரவு தருமாறு அன்போடு கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய இயக்குநர் கிரீஷ் ஏ. டி., கேரள தேவாலயங்களைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்வியலைக் கொண்டு உருவாக்கப்பட்ட கதையமைப்பைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார். நிஜ வாழ்க்கையில் தான் சந்தித்த மனிதர்களின் சுவாரஸ்யமான குணங்களை மையமாகக் கொண்டே இதில் வரும் கதாபாத்திரங்களைச் செதுக்கியிருப்பதாகக் கூறினார். குடும்பத்துடன் வந்து திரையரங்குகளில் ரசிக்கும்படியான முழுமையான பொழுதுபோக்குத் திரைப்படமாக இது இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தயாரிப்பாளர் பஹத் பாசில் பேசும்போது, இந்தத் திரைப்படம் தன் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது என்றும், நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தயாரிப்பதில் தங்களின் நட்பு கூட்டணி எப்போதும் உறுதியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார். நாயகன் நிவின் பாலி மற்றும் நாயகி மமீதா பைஜூ ஆகியோர் நிகழ்வில் பங்கேற்க முடியாவிட்டாலும், அவர்களின் நடிப்பு இப்படத்திற்குப் பெரிய பலம் என்று பாராட்டினார். நல்ல திரைப்படங்களை எப்போதும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் தமிழ் சினிமா ரசிகர்கள், இந்தப் படத்தையும் நிச்சயம் பெரிய அளவில் வெற்றியடையச் செய்வார்கள் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
நிவின் பாலி, மமீதா பைஜூ, சங்கீத் பிரதாப், ரோஷன் ஷா நவாஸ், ஷியாம் மோகன், சுரேஷ் கிருஷ்ணா, வினய் ஃபோர்ட் எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே இதில் நடித்துள்ளனர். அஜ்மல் ஷபுவின் ஒளிப்பதிவும், விஷ்ணு விஜயின் இசையும் படத்திற்கு மெருகூட்டியுள்ளன. பாவனா ஸ்டுடியோஸ் மற்றும் பகத் பாசில் அண்ட் பிரண்ட்ஸ் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தை, தமிழகம் முழுவதும் ப்ரீமார்க் புரொடக்ஷன்ஸ் மற்றும் பியூச்சர் ரன்னர் அப் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து வெளியிடுகின்றன. சிரிப்பும் காதலும் கலந்த இந்த பெத்லகேம் குடும்பத்தின் கொண்டாட்டத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

