பெத்லகேம் குடும்ப யூனிட்: விமர்சனம்

பெத்லகேம் குடும்ப யூனிட்: விமர்சனம்

நல்ல சினிமா என்பது வெறும் நவீன தொழில்நுட்பங்களின் கூட்டு கலவை அல்ல. அது பார்வையாளர்களின் மனதை மெல்லிய உணர்வுகளால் தீண்டிச் செல்வது என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் இயக்குநர் கிரிஷ் ஏ.டி. தன் முந்தைய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, மலையாள சினிமாவில் இதுவரை அதிகம் பேசப்படாத ஒரு கோணத்தில், அழகானதொரு மெல்லுணர்வுக் காதல் கதையை ஓணம் விருந்தாக படைத்திருக்கிறார்.

பொருளாதார நெருக்கடியால் வீட்டை மாற்றிய வருத்தத்தில் இருக்கும் கல்லூரி மாணவி ஆஷ்லி. பக்கத்து வீட்டில் கேட்ரிங் தொழில் செய்து கொண்டு, கடந்த கால இழப்பின் சோகத்தை மறைத்து வாழும் மத்திய வயதுக்காரரான ஜஸ்டின். இவர்கள் இருவருக்கும் இடையே மலரும் நட்பும், அது காதலாக உருப்பெறும் தருணங்களும் தான் படத்தின் மையக்கதை. காதலின் ரசவாதத்தை அவசரப்படாமல், சிறு தொட்டியில் பதியம் போட்டு வளர்த்த செடியில் பூக்கும் மலரைப் போலச் சாவகாசமாகவும் சுவாரசியமாகவும் காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நிவின் பாலி தன் பண்பட்ட நடிப்பால் படத்தை அனாயாசமாகத் தாங்கிப் பிடிக்கிறார். வழக்கமான கதாநாயகப் பிம்பத்தைத் தாண்டி, ஆணின் வெட்கத்தை மிக நேர்த்தியாகவும் ரசிக்கும்படியும் வெளிப்படுத்தியிருக்கிறார். வயதுக்கேற்ற உடல்மொழியிலும், மரத்துப் போன உணர்வுகளை மீட்டுக்கொண்டு வரும் தருணங்களிலும் அவர் மிளிர்கிறார். துடிப்பான கல்லூரிப் பெண்ணாக வரும் மமிதா பைஜு, குறும்பு, காதல், எமோஷன் என அனைத்து உணர்வுகளையும் பிரமாதமாகக் கடத்தித் தனக்கான இடத்தை உறுதி செய்கிறார்.

துணை கதாபாத்திரங்களும் படத்திற்குப் பெரும் பலம் சேர்க்கின்றன. குறும்படம் இயக்கும் தம்பியாக சங்கீத் பிரதாப் செய்யும் அலப்பறைகளும், சுரேஷ் கிருஷ்ணாவின் நகைச்சுவை களேபரங்களும் அரங்கத்தை அதிர வைக்கின்றன. வினய் ஃபோர்ட், ஷ்யாம் மோகன் என அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களைச் செவ்வனே செய்துள்ளனர்.

ஒரு சிறிய டவுன், அடுத்தடுத்த வீடுகள், தேவாலயம் என நம் அருகில் நடக்கும் உண்மைச் சம்பவத்தைப் போன்ற உணர்வைத் தருகிறது அஜ்மல் சாபுவின் ஒளிப்பதிவு. விஷ்ணு விஜய்யின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கதையின் உணர்வை ஆழமாகக் கடத்துகின்றன. வசனங்கள் பேசாத இடங்களை இசையும், இசையும் வசனமும் பேச முடியாத இடங்களை மௌனமும் அற்புதமாக நிரப்புகின்றன.

காதலர்களுக்கு இடையே உள்ள வயது வித்தியாசம், கதாநாயகனின் தயக்கம் எனப் பல விஷயங்கள் இருந்தாலும், அதை பெரிய சுமையாக மாற்றாமல் இயல்பான நகைச்சுவையோடு திரைக்கதையைக் நகர்த்திய விதம் பாராட்டுக்குரியது. ஆங்காங்கே சில கதாபாத்திரங்களின் சேர்க்கை ஒட்டாமல் இருப்பதும், குடி சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகம் என்பதும் சிறிய குறைகளே.

புன்னகை மன்னன் பாணியிலான கதைக் கருவாக இருந்தாலும், சொன்ன விதத்தில் நம்மை முழுமையாகக் கட்டிப்போடுகிறது இந்தத் திரைப்படம். வணிகத் திரைப்படங்களின் ஆரவாரங்களுக்கு மத்தியில், மண் பாத்திரத்தில் பரிமாறப்பட்ட குளிர் கூழ் போல எளிமையாகவும் இனிமையாகவும் வந்து மனதை நிறைக்கிறது இந்த குடும்ப யூனிட்.

Related Posts