“சாப்பிட, பருக பள்ளியில பாடம்!”: சைதையாரின், ஆரோக்ய ஆலோசனை!

“சாப்பிட, பருக பள்ளியில பாடம்!”: சைதையாரின், ஆரோக்ய ஆலோசனை!

மிழகப் பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்கும் உயர்மட்டக் குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. இந்தச் சூழலில், மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, புதிய பாடத்திட்டத்தில் ஆரோக்கியக் கல்வியைக் கட்டாயப் பாடமாகச் சேர்க்க வேண்டும் என்ற முக்கியக் கோரிக்கை எழுந்துள்ளது.

புதிய பாடத்திட்டக் குழு:

தமிழ்நாடு பளளி பாடத்திட்டங்களை உருவாக்க  ‘மாநில பாடத்திட்டம் மற்றும் பாடநூல் உருவாக்கம்’ என்ற புதிய குழு அமைக்கப்பட்டு உள்ளது.

  • தலைவர்: மயில்சாமி அண்ணாதுரை (முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி)

  • முதன்மை உறுப்பினர்கள்: வெங்கடேஸ்வரன் (இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி), ரீட்டா ஜான் (சென்னை பல்கலைக்கழகப் பதிவாளர்) உட்பட பதினான்கு நிபுணர்கள்.

  • அரசுப் பிரதிநிதிகள்: மாநில ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் (உறுப்பினர் செயலர்), பள்ளிக்கல்வி, தொடக்கக்கல்வி, தனியார் பள்ளிகள் மற்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககங்களின் இயக்குநர்கள்.

சைதை துரைசாமியின் அவசிய கோரிக்கை:

இப்புதிய குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில்,  சென்னை பெருநகர முன்னாள் மேயரும் மனிதநேய அறக்கட்டளையின் தலைவருமான சைதை துரைசாமி, பாடத்திட்டக் குழுவின் தலைவர் மயில்சாமி அண்ணாதுரையை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை அளித்தார்.

தற்போது மாநில சமச்சீர் கல்வித்திட்டம், மெட்ரிகுலேஷன் பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் என்று மூன்று வகை பாடத்திட்டங்களில் எதில் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்? நல்ல சம்பாத்தியம் கிடைக்கும்? என்பதுதான் பெற்றோர், மாணவர்களின் கவனத்தை ஈர்க்கிறது. இது அவசியமானது, எதிர்கால வாழ்வுக்கு முக்கியமானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

அதேநேரம், ஒருவர் பூரண உடல்நலத்துடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கான வாழ்வியல் கல்வி இல்லை என்பது பெருத்த ஏமாற்றம் தருகிறது.

மனிதனுக்கு தேவையான முதலாவது முக்கியமான பண்பு என்றால், அது உடல்நலன் பேணுதல். இதனை பாடத்திட்டத்தில் முதன்மைப்படுத்தி, ஆரோக்கிய அறியாமையை போக்கும் வகையில் கல்வித்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரவேண்டும்.

ஆரோக்கியக் கல்வியின் முக்கியத்துவம்:

மாணவர்களிடையே சிறு வயது முதலே உடல்நலம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தப் பின்வரும் அம்சங்களைப் பாடத்திட்டத்தில் கட்டாயமாகச் சேர்க்க வேண்டும்.

  • பாரம்பரிய மற்றும் நவீன மருத்துவம்: மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட ஆயுஷ் (ஆயுர்வேதம், யோகா-நேச்சுரோபதி, யுனானி, சித்தா, ஹோமியோபதி) முறைகளுடன், அலோபதி மருத்துவத்தின் அடிப்படை அம்சங்களையும் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ்-டூ வரை சேர்க்க வேண்டும்.

  • உணவு மற்றும் விழிப்புணர்வு: உடலுக்குப் பொருந்தும் மற்றும் பொருந்தா உணவுகள் பற்றிய அறிவு, பாக்கெட் உணவுகள் மற்றும் குளிர்பானங்களால் ஏற்படும் தீமைகள் குறித்துக் கற்பிக்க வேண்டும்.

  • பருகவும், உண்ணவும் தெரிய வேண்டும்: உணவு, உண்ணும் முறை, நீர்ப்பருகலில் இருக்கும் அறியாமையே மனிதர்களின் நோய்க்கு அடிப்படை. இந்த உண்மையை ஒவ்வொரு மாணவரும் அறிந்திருக்க வேண்டும்.
  • பாரம்பரிய உணவின் சத்துக்கள்: கடலை மிட்டாய், எள்ளு உருண்டை, மோர், நுங்கு, இளநீர் போன்ற நமது பாரம்பரியப் பலகாரங்களின் மருத்துவக் குணங்களை மாணவர்கள் அறியச் செய்ய வேண்டும்.

  • போதை கலாசார எதிர்ப்பு: பெருகிவரும் புகை, மது மற்றும் பிற போதைச் பழக்கங்களின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்கவும், அவர்களைத் தவறான பாதையிலிருந்து தடுக்கவும் மருத்துவக் கல்வி பயன்படும்.

காலத்தின் கட்டாயம்

மனிதனுக்குத் தேவையான முதலாவது முக்கியமான பண்பு உடல்நலன் பேணுவதே ஆகும். உழைத்துச் சம்பாதிக்கும் பணத்தை மருத்துவமனைக்கும் மருந்துக்கடைக்கும் செலவழிக்கும் அவலத்தைப் போக்க ஆரோக்கியக் கல்வியை அறிமுகம் செய்வது காலத்தின் கட்டாயமாகிறது.

மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளர்களைக் கொண்டு தனிக் குழு அமைத்து இப்பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும். “வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்” என்ற வள்ளுவனின் வாக்கிற்கேற்ப, நோய்கள் வரும் முன் தடுத்து ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்கப் புதிய பாடத்திட்டத்தில் இந்த மாற்றங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்

– இவ்வாறு சைதை துரைசாமி,  மிக அவசியமான கோரிக்கைகளை வைத்து உள்ளார்.

Related Posts