விஜய் சேதுபதியின் ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ – தபுவின் மிரட்டல் கேரக்டர் கிளிம்ப்ஸ் வெளியீடு!
விஜய் சேதுபதி மற்றும் பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகி வரும் மாஸ் ஆக்சன் டிராமா ‘ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு’. இப்படத்தில் கெளரி ஹெக்டே எனும் பவர்ஃபுல் வருமான வரித்துறை அதிகாரியாக நடிக்கும் தபுவின் பிரத்யேக கேரக்டர் கிளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது.
உண்மையான உணர்ச்சிகள், தெறிக்கும் சண்டைக் காட்சிகள் மற்றும் மர்மம் நிறைந்த பான் இந்திய என்டர்டெய்னராக உருவாகும் இப்படத்தின் முன்னோட்டத்தில் தபு மாஸாக என்ட்ரி கொடுக்கிறார். சேரிப் பின்னணியில் காரில் கெத்தாக வந்து இறங்கும் அவர், சிகரெட்டை பற்றவைத்து சூழலையே தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருகிறார். ரவுடிக்கு ‘பளார்’ அறை விடுவது, மரத்தடியை வைத்து எதிரிகளை வெளுப்பது என தபுவின் அதிரடி ஆட்டம் தியேட்டரில் விசில் பறக்க வைக்கும் ரகம்.
‘அச்சமற்ற பெண்’, ‘கருணையற்றவர்’, ‘துறையின் பிசாசு’ என பின்னணியில் வரும் வார்த்தைகள் கெளரி ஹெக்டேவின் கொடூரமான அதிகார குணத்தை விவரிக்கின்றன. பூரி ஜெகன்நாத்தின் மாஸ் டச்சில் தபுவின் இந்த கம்பீர தோற்றம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
சம்யுக்தா கதாநாயகியாக நடிக்க, துனியா விஜய் வில்லனாகவும், பிரம்ஹாஜீ மற்றும் விடிவி கணேஷ் முக்கிய வேடங்களிலும் நடிக்கின்றனர். சாம் கே. நாயுடு ஒளிப்பதிவில், ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைக்கிறார். பூரி கனெக்ட்ஸ் மற்றும் ஜே பி மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.
