கட்டா குஸ்தி 2: ஃபேமிலி காமெடி அகாரா!

கட்டா குஸ்தி 2: ஃபேமிலி காமெடி அகாரா!

2022-ல் குடும்பங்களின் மனதைக் கவர்ந்து, பெரும் வெற்றி பெற்ற ‘கட்டா குஸ்தி’ படத்தின் தொடர்ச்சியாக, அதே உற்சாகத்துடன் வந்திருக்கிறது ‘கட்டா குஸ்தி 2’.

முதல் பாகத்தில், விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி தம்பதிகளுக்கு இடையே இருந்த ஈகோ மற்றும் மல்யுத்த மோதல்களைப் பார்த்தோம். இரண்டாம் பாகம் ஒரு புதிய ‘அகாரா’வில் (கட்டா குஸ்தி விளையாடும் தளம்!) நடக்கிறது.

இந்தத் தம்பதிக்கு ஐந்து வயதில் குழந்தை இருக்கிறது. ஐஸ்வர்யா லட்சுமிக்கு ரயில்வேயில் வேலை கிடைத்திருக்கிறது. தொடர்ந்து கட்டா குஸ்தி விளையாட்டில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு உதவியாக “ஹவுஸ் ஹஸ்பண்ட்” ஆக – மனைவிக்கு பெரும் உதவியாக – இருக்கிறார் விஷ்ணு விஷால்.

ஐஸ்வர்யாவை விளையாட்டில் இருந்து ஒழிக்கவும், தம்பதிக்கு இடையே பிளவை ஏற்படுத்தவும் பெரும் சதி நடக்கிறது. அதன் பிறகு என்ன ஆனது என்பதே சுவாரஸ்யமான கதை.

விஷ்ணு விஷால் – ஆஹா.. அன்பான கணவன், பாசமான அப்பா என அசத்துகிறார். கூட்டத்தில் புகுந்து குடத்தில் தண்ணீர் பிடிப்பது, மனைவி குழந்தைக்கு ஆசை ஆசையாய் சமைத்துத் தருவது, குழந்தையைக் கவனித்துக்கொள்வது எனச் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது ஒவ்வொரு அசைவிலும், இயல்பான நகைச்சுவை இருப்பது பெரிய ப்ளஸ். ரசிக்க வைக்கிறார்.

ஐஸ்வர்யா லட்சுமியும் சிறப்பாக நடித்திருக்கிறார். தனது கோபத்தை வெளிப்படுத்தும் காட்சிகளில் அத்தனை இயல்பாக நடித்திருக்கிறார். கணவனுடன் பிரச்சினை ஏற்பட்டாலும் அதன் பிறகு வருந்துவது, பாசத்தில் துடிப்பது என நிறைவான நடிப்பை அளித்து இருக்கிறார்.

நாயகனின் மாமாவாக – ஆணாதிக்கம் பிடித்த கதாபாத்திரத்தில் – கருணாஸ். முதல் பாகம் போலவே இதிலும் ரசிக்க வைக்கிறார். அதே நேரம் அவரது நிலையை நினைத்துப் பரிதாபமும், சிரிப்பும் வருகிறது. அதுவும், பஞ்சாயத்துத் தலைவியான தனது மனைவி ஆங்கிலம், இந்தியில் பிளந்து கட்டுவதைப் பார்த்து அதிர்ச்சி அடையும் காட்சியில் தியேட்டரையே குலுங்க வைக்கிறார்.

முனீஷ்காந்த் கிட்டத்தட்ட வில்லன். ஆனால் செயற்கைத்தனம் இல்லை. அண்ணன் மகளின் மீதான பாசம், அவரை அப்படிப் பேச வைக்கிறது. இதை உணர்ந்து நிஜ சித்தப்பாவாகவே வாழ்ந்திருக்கிறார்.

காளி வெங்கட் உள்ளிட்டோர் தங்கள் பாத்திரம் அறிந்து நடித்திருக்கின்றனர்.

ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு ஆகியோர் என்ட்ரி எதிர்பாராதது. ரம்யா நீதிபதியாக வந்து அசத்துகிறார். அதுவும், “தடுமாறும்” தனது கணவனுக்குத் தான் கொடுத்த தண்டனையைச் சொல்லும் போது ரொம்பவே ரசிக்க வைக்கிறார். யோகி பாபு, வழக்கம்போல கிச்சு கிச்சு மூட்டித் தோல்வி அடைகிறார்.

ஷான் ரோல்டனின் இசை படத்திற்குப் பெரிய பலம். ஏற்கனவே வரவேற்பு பெற்ற ‘சம்பவக்காரி’ பாடல் முதல் பின்னணி இசை வரை, காட்சிகளின் உணர்வுகளை மெருகேற்றி இருக்கிறார்.

கே.எம். பாஸ்கரனின் ஒளிப்பதிவு, கிராமப்புற நிலப்பரப்புகளையும், மல்யுத்தக் களத்தின் அனல் பறக்கும் காட்சிகளையும் நேர்த்தியாகப் படம்பிடித்திருக்கிறது. மல்யுத்தப் போட்டிகளின் வேகம் குறையாமல் ஒளிப்பதிவு அமைந்திருப்பது சிறப்பு.

இயக்குநர் செல்ல அய்யாவு, முதல் பாகத்தின் வெற்றிக் கூட்டணியைத் தக்கவைத்துக்கொண்டு, இதில் புதிய சிக்கல்கள் மற்றும் ஆழமான கதாபாத்திரப் பரிணாமங்களைச் சேர்த்திருக்கிறார். குறிப்பாக, மல்யுத்தக் காட்சிகளைத் தீவிரமாகவும், அதே சமயம் உணர்வுப்பூர்வமாகவும் வடிவமைத்ததில் இயக்குநரின் முத்திரை தெரிகிறது. நகைச்சுவை, காதல், அதிரடி மற்றும் குடும்பப் பாசம் என அனைத்தையும் சரியான விகிதத்தில் கலந்து, ஒரு முழுமையான பொழுதுபோக்குத் திரைப்படமாக மாற்றியதில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

மொத்தத்தில்…

கட்டா குஸ்தி 2, முதல் பாகத்தின் ஈர்ப்பைக் குறையாமல் தக்கவைத்துக் கொண்டுள்ள ஒரு சிறந்த வணிகத் திரைப்படம். விளையாட்டு மற்றும் குடும்ப உறவுகளை இணைக்கும் பாணி, பார்வையாளர்களை ஆரம்பம் முதல் இறுதி வரை கலகலப்பாகவும், உணர்ச்சிகரமாகவும் கட்டிப்போடுகிறது. எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்து, குடும்பத்தோடு தாராளமாகக் கண்டு ரசிக்கக்கூடிய ஒரு மகிழ்ச்சியான திரையரங்க அனுபவத்தை இப்படம் உறுதி செய்கிறது.

குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்.