‘இரட்டையர்’: ஒரு வீடு.. இரு குழந்தைகள்.. அதிரவைக்கும் சைக்கலாஜிகல் திரில்லர்!
திகில், த்ரில்லர், அமானுஷ்யம், பேய்.. என பலவகைகளில் தமிழ்த் திரையுலகம் ஏற்கனவே ரசிகர்களை பயமுறுத்தி இருக்கிறது. ஆனால், இது முற்றிலும் புதுவித சைக்கலாஜிகல் த்ريرிலர்.
ஏசியா ஐகானிக் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ராஜேஸ்வரி லக்ஷ்மிநாராயணன் மற்றும் வினோத் கண்ணன் இணைந்து தயாரித்துள்ளனர்.
மிரட்டும் கதைக்களம்
மலைப்பகுதியில் ஒரு காரில் தம்பதியும் அவர்களது இரட்டைக் குழந்தைகளும் பயணிக்கிறார்கள். திடீரென ஒரு பயங்கர விபத்து. தந்தை இறந்துபோக, தாயின் முகம் சிதைந்துபோகிறது. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்குப் பிறகு முகம் மாறி வீடு திரும்புகிறாள் தாய். வந்திருப்பது தன் தாய்தானா என்பது இரட்டை மகள்களின் சந்தேகம். அதன் பிறகு நடக்கும் விசித்திர த்ரில்லிங் சம்பவங்கள்தான் இத்திரைப்படம்.
நடிப்பு
இரு குழந்தைகளின் தாயாக நடித்திருக்கிறார் அபிநயா. பிள்ளைகளிடம் காட்டும் அன்பு, அதேநேரம் கண்டிப்பு என ஒரு தாயைக் கண்முன் நிறுத்துகிறார்.
இரட்டை குழந்தைகளாக அனுமிதா மற்றும் அனுஷிதா ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளனர். வீட்டுக்குள் நடமாடும் நபர், தங்கள் தாய்தானா என அவர்கள் சந்தேகப்படுவது, வீட்டில் இருந்து தப்பிக்கச் செயல்படுத்தும் திட்டங்கள் எனப் பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள்.
இக்குடும்பத்தின் நெருங்கிய உறவினராக இயக்குநர் சுப்ரமணிய சிவா நடித்துள்ளார். வழக்கம்போல் சிறப்பான, இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நல்லவரா, கெட்டவரா என்பதை உணர முடியாத அளவுக்கு மிக நேர்த்தியாக, சரியான மீட்டரில் நடிப்பை அளித்துள்ளார். சொல்லப்போனால் இரட்டை வேடம் போலத்தான் இதுவும்! சிறப்பு!
தொழில்நுட்பம்
முகமது அமீன் அருமையாக ஒளிப்பதிவு செய்துள்ளார். மலையின் அழகை அள்ளிக் கொடுத்திருக்கிறது இவரது கேமரா. பெரும்பாலான காட்சிகள் ஒரே வீட்டில்தான் நகர்கின்றன. ஆனாலும் அலுப்பு ஏற்படுத்தாதபடி பல்வேறு கோணங்களில் காட்சிகளை அமைத்துள்ளார்.
ஜி.கே.வி.யின் இசை, படத்திற்குப் பெரும் பலம். ஒரு க்ரைம் த்ரில்லர் படத்திற்குத் தேவையான பின்னணி இசையைத் துல்லியமாக அளித்துள்ளார். ஈஸ்வரா மூர்த்தியின் படத்தொகுப்பு கச்சிதம்.
வித்தியாசமான த்ரில்லரை அளித்து, முதல் படத்திலேயே கவர்ந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஜெகதீஷ். மிகச் சிக்கனமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்றாலும், அது எங்கும் உறுத்தாதவாறு காட்சிகளை அமைத்துள்ளார்.
உதாரணமாக, ஒரு பெரிய விபத்தை டிவியில் வரும் காட்சிகளைக் கொண்டே நமக்குள் கடத்தி, பதைபதைக்க வைத்துவிடுகிறார். கடைசி வரை ட்விஸ்ட் விலகாமல் கதையைக் கொண்டு சென்றுள்ளார். தவிர, த்ரில்லர் படம் என்றால் காட்சிகள் பரபரவென்று தறிகெட்டு ஓட வேண்டும் என்கிற விதியை உடைத்திருக்கிறார்.
ஆங்கில மோகம் தலைவிரித்தாடும் காலத்தில், “ட்வின்ஸ்” என வைக்காமல், அழகாக – ஈர்ப்பாக “இரட்டையர்” என தலைப்பு வைத்திருப்பதற்கு கூடுதல் பாராட்டுகள்.
மொத்தத்தில் ரசித்துப் பார்க்க வைக்கிறார்கள், “இரட்டையர்கள்”!

