“டிரம்ப் மனநோயாளி!”: அதிரவைக்கும் அமெரிக்க மருத்துவர்கள்!: டி.வி.சோமு

“டிரம்ப் மனநோயாளி!”: அதிரவைக்கும் அமெரிக்க மருத்துவர்கள்!: டி.வி.சோமு

பத்திரிகையாளர் டி.வி.சோமு:

“ஈரான் மீதான போர் ஓர் இன்ப சுற்றுலா… போர்க் கப்பல்களைக் கைப்பற்றுவதைவிட அவற்றை மூழ்கடிப்பதிலேயே எனக்கு அதிக குஷி ஏற்படுகிறது!” – இப்படி கொண்டாட்ட மனநிலையில் பேசியிருக்கிறார், அமெரிக்க அதிபர் டிரம்ப்.

ஏற்கெனவே அவரது மனநிலை குறித்து பல விவாதங்கள், விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

அமெரிக்க அரசியல் தலைவர்கள் பலர் இது குறித்து பேசி இருக்கின்றனர்.

கமலா ஹாரிஸ், ” டிரம்ப்புக்கு நிலையான மனலமோ, நிதானமான மனநலமோ இல்லை” என்றார். நிக்கி ஹேலி, ” 70 வயதைக் கடந்த தலைவர்களுக்குக் கட்டாயம் மனநலத் திறன் பரிசோதனை நடத்தப்பட வேண்டும்” என மறைமுகமாக டிரம்ப் குறித்து கூறினார். நான்சி பெலோசி, பல முறை வெளிப்படையாகவே டிரம்ப்பின் செயல்பாடுகள் தார்மீக ரீதியாகவும் மனரீதியாகவும் தகுதியற்றவை என்று தெரிவித்து உள்ளார்.

மனநல மருத்துவர்கள் அளித்த அதிர்ச்சி!

அரசியல்வாதிகள்,  எதிர்தரப்பு பற்றி கூறுகிறார்கள் என விட்டுவிடலாம். ஆனால் டிரம்ப் மனநிலை பற்றி அமெரிக்காவின் – உலக அளவில் புகழ் பெற்ற – மனநல மருத்துவர், டாக்டர் ஜான் கார்ட்னரும்  அச்சம் தெரிவித்து இருக்கிறார்.  இவர், மருத்துவப் பள்ளியின் முன்னாள் பேராசிரியர்,  35 ஆண்டுகால அனுபவம் கொண்ட மனநல நிபுணர்.

இவர், டிரம்ப்பின் மனநிலை குறித்து அறிவியல் ரீதியான ஆதாரங்களை முன்வைத்துள்ளார்.

நார்சிஸ்ட்: டிரம்ப்பை ஒரு “வீரியம் மிக்க தற்பெருமை நோயாளி” (Malignant Narcissist) என்று வகைப்படுத்துகிறார்.

டிமென்ஷியா: டிரம்ப் வார்த்தைகளைத் தடுமாறுவதும், ‘ஹன்னிபால் லெக்டர்’ போன்ற கற்பனைக் கதாபாத்திரங்களை உண்மை என நம்பிப் பேசுவதும் மூளைச் சிதைவின் (Dementia) அறிகுறிகள் என்கிறார்.

சமூக விரோதப் போக்கு: மற்றவர்களின் வலியைக் கண்டு ரசிக்கும் ‘சாடிசம்’ (Sadism) அவரிடம் இருப்பதாகவும், இது அணு ஆயுதப் போர் வரை உலகைக் கொண்டு செல்லும்.

– என்றெல்லாம் எச்சரிக்கிறார் மனநல மருத்துவர் டாக்டர் ஜான் கார்ட்னர்.

இவர் மட்டுமல்ல.. புகழ் பெற்ற மனநல மருத்துவர்கள் பலர் இதே எச்சரிக்கையை விடுத்து வருகின்றனர்.

யேல் பல்கலைக்கழகத்தின் தடயவியல் மனநல மருத்துவர் டாக்டர் பாண்டி எக்ஸ் லீ, 2017-ல் வெளியான ‘தி டேஞ்சரஸ் கேஸ் ஆஃப் டொனால்ட் டிரம்ப்’ என்ற வரலாற்று ஆவணத்தை தொகுத்தளித்தார்.

இதில் 27 முன்னணி மன நல நிபுணர்கள் டிரம்ப்பின் மனநலச் சிக்கல்களைப் பட்டியலிட்டனர்.

இந்நூலில், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற மருத்துவர் டாக்டர் ராபர்ட் ஜே. லிஃப்டன், டிரம்ப்பை ‘வீரியம் மிக்க தற்பெருமை நோயாளி’ (Malignant Narcissist) என்று வகைப்படுத்தி, இத்தகையவர்கள் அதிகாரத்தைக் காக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள் என குறிப்பிட்டார்.

இந்த எச்சரிக்கைகளின் தொடர்ச்சியாக, 2019-2020 காலகட்டத்தில் ஒரு சம்பவம் நடந்தது. சுமார் 3,500 மனநல நிபுணர்கள் கையெழுத்திட்ட ஒரு மனு அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு (Congress) அனுப்பப்பட்டது. அதில் “டிரம்ப்பின் மனநிலை வேகமாகச் சிதைந்து வருகிறது. அவர் மற்றவர்களைக் கிண்டல் செய்வது மற்றும் தன்னைத்தானே மிகைப்படுத்திப் பேசுவது போன்றவை தீவிரமான ஆளுமைக் கோளாறின் (Personality Disorder) வெளிப்பாடுகள்” என்று குறிப்பிட்டு இருந்தனர்.

2024-2026 ஆண்டுகளில், ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் ஓய்வுபெற்ற பேராசிரியர் டாக்டர் லான்ஸ் டோடுஸ் போன்றவர்கள், டிரம்ப் வார்த்தைகளை மாற்றிப் பேசுவதையும் நபர்களைக் குழப்பிக்கொள்வதையும் சுட்டிக்காட்டி, இது சாதாரண வயோதிகம் அல்ல, ‘முன்முனை நினைவாற்றல் இழப்பு’ (Fron to temporal Dementia) எனும் நோயின் ஆரம்ப அறிகுறி என்று எச்சரித்துள்ளனர்.நேரில் பார்க்காமல் மனநோயாளி என சொல்லலாமா…?

பொதுவாக ஒரு நபரை நேரில் பரிசோதிக்காமல் கருத்துச் சொல்லக் கூடாது என்பது மருத்துவ விதி. அதை ‘கோல்ட்வாட்டர் விதி’ (Goldwater Rule) என்பார்கள்.

ஆனால் இந்த மருத்துவர்கள், “குறிப்பிட்ட விதியை டிரம்ப் விஷயத்தில் நாங்கள் மீற தார்மீகக் காரணங்கள் உள்ளன. ஒரு தலைவர் தனக்கோ அல்லது மற்றவர்களுக்கோ ஆபத்தை விளைவிப்பார் என்று தெரிந்தால், ஒட்டுமொத்த சமூகத்தையும் காப்பதே எங்களின் முதல் அறம். இதன் அடிப்படையிலேயே, டிரம்ப் குறித்த உண்மைகளை பகிரங்கமாகப் பேசி வருகிறோம்” என்கின்றனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட இன்னொரு அதிபர்!

1974- வாட்டர்கேட் ஊழலில் சிக்கி இருந்தார் அதிபர் ரிச்சர்ட் நிக்சன். இதனால் கடும் மன அழுத்தத்தில் (Depression) இருந்தார். அவர் மனநிலை தடுமாறி அணு ஆயுதத் தாக்குதலுக்கு உத்தரவிடக்கூடும் என்று அவரது பாதுகாப்புச் செயலாளர் ஜேம்ஸ் ஷ்லெசிங்கர் அஞ்சினார்.

ஆகவே, “அதிபர் அணு ஆயுத உத்தரவு எதையும் பிறப்பித்தால், அதை என்னிடம் உறுதிப்படுத்தாமல் நிறைவேற்றக் கூடாது!” என ராணுவத்துக்கு ரகசிய உத்தவு பிறப்பித்தார்.

சட்டப்படி இது தவறு என்றாலும், உலக அழிவைத் தடுக்க அவர் எடுத்த அந்த முடிவு இன்றும் வரலாற்றில் ஒரு முக்கிய ஆதாரமாகப் பேசப்படுகிறது.

சட்டம் என்ன சொல்கிறது?

அமெரிக்க அதிபர் ஆவதற்கு மனநலம் என்பது ஒரு அரசியலமைப்பில் குறிப்பிட்டு கூறப்படவில்லை. ஆனால், பதவியில் இருக்கும் அதிபர் உடல் நலம் காரணமாக செயல்பட முடியாவிட்டால், அவரை நீக்க 25-வது திருத்தத்தின் பிரிவு 4 (25th Amendment, Section 4) வழிவகை செய்கிறது. துணை அதிபரும், அமைச்சரவையின் பெரும்பான்மை உறுப்பினர்களும் இணைந்து அதிபர் “தகுதியற்றவர்” என்று அறிவித்தால், அவரது அதிகாரம் பறிக்கப்படும்.

“உடல் நலம் மட்டுமல்ல.. மனநலமும் இதில் சேர்க்கப்பட வேண்டும்” என்ற கோரிக்கை அமெரிக்காவில் வலுத்து வருகிறது.

ஆம்… வீம்பு பிடித்த தலைவர்கள் இன்னும் 50 ஆண்டுகளில் இருக்கப் போவதில்லை, ஆனால் அவர்களின் வீம்பு தொடர்ந்தால் மனித குலமே இருக்காது!

இதை உணராதவர்கள் எவரானாலும் அவர்கள் மனநோயாளிகள்தான்!

– டி.வி.சோமு

 

Related Posts