“ஒரு காதல் பயணத்தின் 25 ஆண்டுகள்…”: கவுதம் மேனன் நெகிழ்ச்சி!
கவுதம் மேனன் இயக்கிய முதல் திரைப்டமான மின்னலே, கடந்த 2001ம் ஆண்டு வெளியானது. திரைப்பயணத்தில் அவர் கால் நூற்றைண்டை கடந்து இருக்கிறார். இந்த நிலையில், நெகிழ்ச்சியுடன் அவர் தெரிவித்து இருப்பதாவது..
“திரைப்படம் என்பது வெறும் நகரும் பிம்பங்களைப் பதிவு செய்வது மட்டுமல்ல, அது காலத்தையே சிறைப்பிடிப்பது என்று அடிக்கடி சொல்லப்படுவதுண்டு. “ஆக்ஷன்” என்று நான் முதல்முறையாகக் குரல் கொடுத்து இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவடையும் இந்தத் தருணத்தில், கடந்து போன காலத்தைக் கண்டு நான் மலைக்கவில்லை; மாறாக, அந்தக் காலம் எனக்கு வாரி வழங்கிய நினைவுகளின் தொகுப்பைக் கண்டு நெகிழ்ந்து போயிருக்கிறேன்.
இந்த பிரம்மாண்டமான, சவால்கள் நிறைந்த திரையுலகில் நான் கடந்து வந்த 25 ஆண்டுகள் என்பது தனிமனித சாதனை அல்ல. இது என்னோடு பயணித்த எண்ணற்ற மனிதர்களின் கனவுகள், அர்ப்பணிப்பு மற்றும் திறமைகளால் நெய்யப்பட்ட ஒரு அழகான கலைப்படைப்பு.
எனது ஆழ்ந்த நன்றியும் அன்பும் கலைஞர்களையே சாரும்: என் கற்பனையில் உதித்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து, குரல் கொடுத்து, இதயத்துடிப்பை வழங்கிய நடிகர்களே… நீங்கள் என் வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்தீர்கள்; சில நேரங்களில் அந்தக் கதாபாத்திரங்களில் நான் உணராத ஆழத்தைக்கூட உங்கள் நடிப்பால் வெளிப்படுத்தினீர்கள்.
எனது தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு: கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக கேமராவிற்குப் பின்னால் நின்று, என் கற்பனைகளுக்கு மௌனமாக வடிவம் கொடுத்த சிற்பிகள் நீங்கள். சினிமா மீது நாம் கொண்ட காதலுக்கு இணையானது உங்கள் மீது நான் கொண்டுள்ள நன்றியும் மரியாதையும்.
சினிமா மீதான ஆர்வத்தை என்னுள் தூண்டிய மாபெரும் ஆளுமைகளின் தோள்களில் ஏறித்தான் நான் இன்று நிற்கிறேன். எனது ஆரம்பக்கால அடிகளைச் சீராக எடுத்து வைக்க உதவிய வழிகாட்டிகளே – சரியான பாதையைக் காட்டியமைக்கு மிக்க நன்றி. சக இயக்குநர்களே, உங்கள் படைப்புகள் தினமும் எனக்குச் சவாலாகவும் உத்வேகமாகவும் இருக்கின்றன. கதை சொல்லும் இந்தக் கூட்டு முயற்சியில் நம்மிடையே நிலவும் இந்த நட்பு மிகவும் விலைமதிப்பற்றது.
இறுதியாக, எனது அன்பான ரசிகர்களுக்கு… எனது கதைகளை உங்கள் வாழ்க்கைக்குள் அனுமதித்தீர்கள், எனது கதாபாத்திரங்களை உங்கள் உரையாடல்களில் வாழ வைத்தீர்கள். நான் திரையில் காட்ட முயன்ற காதல், மோதல்கள் மற்றும் வாழ்க்கையின் பல்வேறு வண்ணங்களை நீங்கள் மனதார ஏற்றுக்கொண்டீர்கள். உங்களின் அந்த அங்கீகாரமே எனக்குக் கிடைத்த ஆகச்சிறந்த விருது.
‘என்னோடு வா வீடு வரைக்கும்’ இசை கச்சேரியில் அமைந்த அந்த அற்புதமான, மறக்க முடியாத இரவுக்காக உங்களுக்கு நன்றி. நான் எதற்காகப் பணியாற்றுகிறேன் என்பதை மீண்டும் ஒருமுறை என் ஆத்மார்த்தமாக உணர வைத்த தருணம் அது.
சினிமாவுடனான எனது காதல் தொடர்கிறது. அடுத்தக் காட்சி எனக்காகக் காத்திருக்கிறது…
– அதுவரை மிகுந்த அன்புடன், கௌதம் வாசுதேவ் மேனன்” இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.
