“சினிமா தரகர்களை ஒழிக்க படம் எடுக்கணும்!”: ‘ரெட் லேபில்’ நாயகன் &தயாரிப்பாளர் லெனின்!
சினிமா உலகில் நடக்கும் கமிஷன் கலாச்சாரம் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் நெருக்கடிகள் குறித்து ‘ரெட் லேபில்’ பட விழா மேடையில் உண்மைகளை உடைத்துப் பேசியுள்ளார் தயாரிப்பாளரும் நாயகனுமான லெனின்.
“நான் போட்ட காசுக்கு கணக்கு வேணும்!” – கொதிக்கும் லெனின்
“சினிமா மேல இருக்கிற காதலால தான் இங்கே வந்தேன். ஆனா இங்கே எதற்கெடுத்தாலும் கமிஷன்! 5 கோடி செலவு செஞ்சா, அதுல 15% கணக்குலேயே வர்றது இல்ல. கமிஷனா போயிருது. இதையெல்லாம் பார்த்தா அதிர்ச்சியா இருக்கு. ஷங்கர் சார் ‘இந்தியன்’ படத்துல லஞ்சத்தை ஒழிக்கப் பேசினது மாதிரி, சினிமாவில் இருக்கிற இந்த கமிஷன் முறையையும் ஒழிக்க ஒரு படம் எடுக்கணும்!” என்று அதிரடியாகத் தொடங்கினார் தயாரிப்பாளர் லெனின்.
மேலும், பெப்ஸி தொழிலாளர்களுடனான மோதல் குறித்துப் பேசுகையில், “படம் ஆரம்பிச்ச ஆறாவது நாளே பெப்ஸியால பிரச்சனை. ‘படப்பிடிப்பை நிறுத்துவோம்’னு மிரட்டினாங்க. ‘நீங்க என்ன நிறுத்துறது, நானே நிறுத்துறேன்’னு நானே ஷூட்டிங்கைக் கேன்சல் பண்ணேன். என் உழைப்பு, என் பணம்… எனக்குக் கணக்கு வேணும்!” என்று சீறினார். குணச்சித்திர நடிகர் ஒருவர் கிலோமீட்டருக்கு 20 ரூபாய் பயணப்படி கேட்ட கதையைச் சொல்லி, “இப்படி நிபந்தனை போட்டால் யாருக்கும் வாய்ப்பு கிடைக்காது” என்று எதார்த்தத்தைப் பேசினார்.
“கதைதான் கிங்!” – பொன். பார்த்திபன் & ட்ரீம் வாரியர் குகன்
படத்தின் கதாசிரியர் பொன். பார்த்திபன் பேசுகையில், “2023-ல் தொடங்கிய இந்தப் பயணம் 2026-ல் ரிலீஸாகிறது. ஒரு அக்கினிக் குஞ்சு போலத் தீவிரமான கருவைச் சிதையாமல் திரைக்கதையாக்கி இருக்கிறோம்” என்றார்.
படத்தை வெளியிடும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் குகன் கூறுகையில், “இப்போதைய ரசிகர்கள் தரமான கதைகளைத்தான் எதிர்பார்க்கிறார்கள். தியேட்டர்களில் பாப்கார்ன், காபி விலை எல்லாம் விண்ணைத் தொடுவதால், தாங்கள் கொடுக்கும் காசுக்குத் தகுதியான படமா என்பதைப் பார்த்துதான் ரசிகர்கள் வருகிறார்கள். இந்தப் படம் நிச்சயம் கவரும்” என நம்பிக்கை தெரிவித்தார்.
படக்குழுவினர் பகிர்ந்த சுவாரஸ்யங்கள்:
நாயகி அஸ்மின்: “வேறொரு துறையில் இருந்து வந்த எனக்கு, இந்தப் படக்குழு ஒரு குடும்பம் போல ஆதரவு அளித்தது. என் கேரக்டரை இயக்குநர் செதுக்கியுள்ளார்.”
இயக்குநர் அனுமோகன்: “இப்போதெல்லாம் ஹீரோக்கள் தான் கேமரா ஆங்கிளைக் கூட முடிவு செய்கிறார்கள். அந்தச் சுயநலத்தை விட்டுவிட வேண்டும். இந்தப் படத்திற்குப் பின் என் பெயரே மாறிவிடும்!”
இசையமைப்பாளர் கைலாஷ் மேனன்: “தமிழில் இது என் முதல் படம். மலையாளத்தை விட இங்கே தொழில்நுட்பக் கலைஞர்களுக்குக் கிடைக்கும் மரியாதை என்னை ஆச்சரியப்படுத்தியது.”
பாடலாசிரியர் மோகன் ராஜன்: “தயாரிப்பாளர் லெனின் அவ்வளவு உரிமையோடு பழகுவார். பணத்தேவைக்காக நான் தயங்கியபோது, ‘ஏன் கேட்கல?’ என அன்போடு கடிந்துகொண்டவர்.”
கலை இயக்குநர் பிரகதீஸ்வரன்: “சின்ன படம், பெரிய படம்னு எதுவுமே இல்ல. ஓடுற படம்தான் பெரிய படம். சினிமா மீதான காதலால் இதில் உழைத்திருக்கிறேன்.”
இயக்குநர் கே.ஆர். வினோத்: “வளர்ந்து வரும் கலைஞர்களை வைத்து நேர்மையாக உழைத்திருக்கிறோம். இந்தப் படம் ரசிகர்களை ஏமாற்றாது.”
படம் பற்றி…
கே.ஆர். வினோத் இயக்கத்தில் உருவான ‘ரெட் லேபில்’ திரைப்படத்தில் லெனின் – அஸ்மின் ஜோடியுடன் ஆர்.வி. உதயகுமார், முனிஷ்காந்த், அனுமோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கைலாஷ் மேனன் இசையமைக்க, லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியிடும் இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 6ஆம் தேதி திரைக்கு வருகிறது
