சென்னை: கொரோனா தடுப்பு பணியாளர்கள் நீக்கமா?
கொரோனா பரவல் தடுப்பு பணிக்காக சென்னை மாநகராட்சி பகுதியில் நியமிக்கப்பட்ட தற்காலிக பணியாளர்களில் பலர் நீக்கப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றை எதிர்த்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறியவும், தகுந்த சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யவும், ‘செக்டர் ஒர்க்கர்’ என்ற பெயரில், 51 தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் மாநகராட்சி பகுதி முழுதும், வீதி வாரியாக ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்களா என்பதைக் கண்டறிந்து வருகின்றனர். அப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், “51 செக்டர் ஒர்க்கர்களில் 35 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுவிட்டனர். தற்போது 12 பேர் மட்டுமே பணியில் இருக்கிறார்கள். அவர்களும் விரைவில் விடுவிக்கப்பட இருக்கிறார்கள்” என்று ஒரு தகவல் நேற்றிலிருந்து பரவி வருகிறது. சமூகவலைதளங்களிலும் சிலர் இது பற்றி பதிவிட்டு வருகின்றனர்.
இதையடுத்து, “மீண்டும் கொரோனா தொற்று உலகம் முழுதும் பரவி வருவதாக கூறப்படும் நிலையில், இது போன்ற நடவடிக்கை ஏன்? ஒருவேளை தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்துவிட்டதா?” என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.
இது குறித்து தகவல் அறிய சென்னை மாநகராட்சி அதிகாரிகளை தொடர்புகொண்டு பேசினோம்.
அவர்கள், “கொரோனா தொற்று குறித்த அச்சம் குறைந்து மக்கள் நடமாடுகிறார்கள் என்பது உண்மையே. அதற்காக தொற்று குறித்து அலட்சியமாக இருக்க முடியாது. கொரோனா பரவலை தடுக்க தற்போதும் முழு மூச்சுடன், அரசும் சென்னை மாநகராட்சியும் செயல்பட்டு வருகிறது. இத்தடுப்புப் பணிக்காக நியமிக்கப்பட்ட செக்டர் ஒர்க்கர்கள் சிலர் சரிவர பணியாற்றவிலல்லை. ஆகவே அவர்கள் நீக்கப்பட்டு வேறு புதிய நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வேறு சில செக்டர் ஒர்க்கர்கள், வேறு வேலைக்குச் சென்றுவிட்டனர். அவர்களது பணியிடத்துக்கும் புதிய நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சியின், கொரோனா தடுப்பு பணி அதே உத்வேகத்துடன் சிறப்பாக நடந்து வருகிறது. மக்களும் ஒத்துழைக்க வேண்டும்! தகுந்த பாதுகாப்பாபுடன் இருக்க வேண்டும். தவறான செய்திளை நம்புவதோ, பரப்புவதோ கூடாது” என்றனர்.

