புயல்  ஆபத்து! விவசாயிகளுக்கு அரசு முக்கிய அறிவிப்பு!

சென்னையிலிருந்து 760 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து 700 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது நிவர் புயல். இது நாளை மறுநாள் ( புதன் கிழமை)  மாமல்லபுரத்துக்கும், காரைக்காலுக்கும் இடையே கரையை கடக்கும் என்று ஏற்கெனவே கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் டெல்டா உள்ளிட்ட கடற்கரை மாவட்டங்களில் கன மழை, வெள்ளம் ஏற்படலாம். இதனால் பயிர்கள் பாதிக்கப்படலாம்.

அதனால் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க, பயிர் காப்பீடு செய்யும்படி தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து அரசு அதிகாரிகள் கூறியதாவது:

“தற்போது, வேளாண்மை பயிர்களான சம்பா நெற்பயிர், சிறுதானிய பயிர்கள், பயறுவகை பயிர்கள், எண்ணெய் வித்து பயிர்கள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களான வாழை, மரவள்ளி, வெங்காயம், உருளை, சிவப்பு மிளகாய், கேரட், கத்தரி, வெண்டை, தக்காளி, பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி மற்றும் முட்டைகோஸ் பயிர்களுக்கான பயிர் காப்பீடு நடைபெற்று வருகிறது.
வரும் நவம்பர் 24, 25, 26 ஆகிய தேதிகளில் கன மழை முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே அனைத்து விவசாயிகளும் தங்களுடைய பயிர்களை அருகிலுள்ள பொது சேவை மையங்களிலோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ அல்லது வர்த்தக வங்கிகளிலோ உரிய காப்பீடு கட்டணம் செலுத்தி காப்பீடு செய்து இயற்கை இடர்பாடுகளால் ஏற்பட இருக்கும் நிதி இழப்பீடுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

ஈரோடு, கரூர், பெரம்பலூர், ராமநாதபுரம், திருச்சி, திருவாரூர், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், சிவகங்கை, திருப்பூர், தருமபுரி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தேனி, தூத்துக்குடி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் சம்பா நெல் காப்பீடு செய்து கொள்ளலாம்.

இதற்கான இறுதி நாள் வரும் நவம்பர் 30ஆம் தேதி ஆகும்.
மேலும் தஞ்சாவூர், அரியலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, நாமக்கல், திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சம்பா நெல் காப்பீடு செய்ய வரும் டிசம்பர் 15ஆம் தேதி இறுதி நாள் ஆகும்.

பயிர் காப்பீடு செய்ய தேவையான ஆவணங்கள்:
1 – பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்
2 – அடங்கல்/ சிட்டா
3 – வங்கி கணக்கு புத்தகத்தில் முதல் பக்க நகல்
4 – ஆதார் அட்டை நகல்

எனவே விவசாய நிலங்களில் தங்கள் கடின உழைப்பை செலுத்தி பயிர்களை விளைவித்த விவசாயிகள் மறக்காமல் பயிர் காப்பீடு செய்யுங்கள்.

 

Related Posts