ஏஸ்: திரைப்பட விமர்சனம்

ஏஸ்: திரைப்பட விமர்சனம்

குற்றப் பின்னணி கொண்ட, நாயகன் சிறைவாசத்துக்குப் பிறகு மனம் திருந்தி, மலேசியாவுக்குச் செல்கிறான். அங்கு  ‘போல்ட்’ கண்ணனாக புதிய வாழ்க்கையைத் தொடர்கிறான். போன இடத்தில்  நாயகி ருக்குவுடன் காதல்.

ருக்குவுக்கு பல பிரச்சினை. அவரது தாயாரின் இரண்டாம் கணவரால் டார்ச்சர். தாயின் வீட்டை மீட்க 10 லட்சம் மலேசிய வெள்ளி தேவை.

நாயகன் வேலை பார்க்கும் கடை முதலாளிக்கு வங்கிக்கடன் நெருக்கடி. ஒரு மில்லியன் மலேசியா வெள்ளி கட்டாவிட்டால் கடை பறிபோய்விடும்.

இந்த நிலையில், நாயகன் போல்ட், தனது காதலி வேலை பார்க்கும் துணிக்கடைக்குச் செல்கிறார். அங்கு காதலி, “ஒரு வாரத்திற்குள் பத்தாயிரம் மலேசியா வெள்ளிக்கு விற்பனை செய்யாவிட்டால் இந்த வேலை பறிபோய்விடும்” என்று புலம்புகிறார் காதலி.“இரு வர்றேன்..” என்று புறப்படும் நாயகன், அப்படி இப்படி போய் கடைசியில் சூதாட்ட விடுதிக்குச் சென்று விளையாடுகிறார்.

அங்கே அவர் வென்றாலும், சூழ்ச்சி செய்து அவரை ஐந்து லட்சம் மலேசியா வெள்ளிக்கு கடனாளி ஆக்குகிறார் வில்லன்.

ஆக நாயகனும் அவனைச் சுற்றி இருப்பவர்களும் பணப்பிரச்சினையில் சிக்குகிறார்கள். அதிலிருந்து மீண்டார்களா என்பதே ஏஸ் படத்தின் மீதிக்கதை.

நாயகன் போல்ட் கண்ணனாக, விஜய் சேதுபதி. ஜாலியான கதாபாத்திரம். மைல்டான காமெடி, நக்கல் என தேவையான நடிப்பை வழங்கி ரசிக்க வைக்கிறார்.

அவரது நண்பராக படம் முழுதும் வருகிறார் யோகி பாபு.  இடைவேளை வரை வழக்கம் போல் காமெடி என்கிற பெயரில் டார்ச்சர் செய்கிறார். (தவிர தன்னைத்தானே பாடி ஷேமிங் செய்து கொள்வதை எப்போதுதான் நிறுத்தப்போகிறாரோ..!)

ஆனால் இடைவேளைக்குப் பிறகு விஜய் சேதுபதி – யோகிபாபு காமெடி ஒர்க் அவுட் ஆகிறது. தானே வாயைக் கொடுத்து சிக்கிக்கொள்ளும் காட்சிகளில் யோகிபாபு சிரிக்க வைக்கிறார். இனியாவது, ஏதோ வந்தோம் போனோம் என்று இல்லாமல்,  நகைச்சுவைக்கான வாய்ப்பு இருக்கிறதா.. அதற்கான காட்சிகள், வசனங்கள் உள்ளனவா என்பதை பார்த்து படத்தை ஒப்புக்கொள்வது நல்லது, யோகிபாபு.

நாயகி ருக்மணி வசந்த்… கவரும் அழகு, ஈர்க்கும் நடிப்பு. நாயகனை திருடன் என மாட்டி விட்டு அதில் உறுதியாக இருப்பது, பிறகு காதலாகி கசிந்துருகுவது, வளர்ப்புத் தந்தையின் டார்ச்சரால் நொந்து நூலாவது என சிறப்பான நடிப்பை அளித்து இருக்கிறார்.

அவரது கண்கள் – மிக இயல்பாக அவரின் உணர்வை பார்வையாளருக்கு கடத்துகிறது!
தமிழ் திரைக்கு நன்றாக நடிக்கக்தெரிந்த ஒரு நடிகை கிடைத்துள்ளார்!

பப்லு பிருத்விராஜ், பி.எஸ். அவினாஷ் இருவருமே வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார்கள்.

திவ்யா பிள்ளை, பிரிசில்லா நாயர் உள்ளி்டடோர் பாத்திரம் அறிந்து நடிப்பை அளித்து உள்ளனர்.

ஈர்க்கும் ஒளிக்கலவை, அற்புதமான கோணங்கள் என மலேசியாவின் அழகை கண் முன் நிறுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் கரண் பி. ராவத். குறிப்பாக, எதிரெதிர் பால்கனியில் நின்று நாயகன் – நாயகி பார்ப்பது, இரவு நேரத்தில் சாலை காட்சிகள் உள்ளிட்டவற்றைச் சொல்லலாம்.

ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக, ‘உருகுது உருகுது’ பாடல், சுகம்.

சாம் சி.எஸ்-ஸின் பின்னணி இசை படத்துக்கு பலம். காதல், மோதல், துரத்தல் என காட்சிக்கு ஏற்றபடி கதாபாத்திரமாகவே மாறி ரசிக்கவைக்கிறது.ஃபென்னி ஆலிவரின் எடிட்டிங் கச்சிதம்.

போக்கர் விளையாடும் கிளப், குப்பைக் கிடங்கு ஆகியவற்றை கலை இயக்குநர் ஏ.கே. முத்து சிறப்பாக உருவாக்கி இருக்கிறார்.

மலேசியாவைப் பின்னணியாகக் கொண்டு, காமெடி, அதிரடி, காதல் என கலவையான திரைப்படமாக சுவாரஸ்யமாக நகர்கிறது படம். படத்தின் முதல் 20 நிமிடங்கள் – ஜூங்கா பாகம் 2 போல இருப்பது, காமெடி என நினைத்து யோகிபாபு வரும் காட்சிகள் ஆகியவையே மைனஸ்.

மற்றபடி பார்த்து ரசிக்கலாம்!

ரேட்டிங்: 3/5

Related Posts